சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற விவசாயியின் இரண்டாவது மகன் தனுஷ் தமதுமருத்துவ கனவு தகர்ந்து போகும் என்கிற நினைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 2019ஆம் ஆண்டு 12 வகுப்புத் தேர்வை முடித்த அவர் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற இயலவில்லை. 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்வு பயம் அவரை கொன்றுவிட்டது.
ஏற்கனவே மாணவி அனிதா உள்ளிட்ட பலர் நீட் தேர்வுக்குப் பயந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வுக்குப் பயந்து மாணவ,மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசே பொறுப்பு, தகுதி, திறமை என்ற போலித்தனமான வாதத்தால் தமிழகத்தில் இனியும் ஓர் உயிர் கூட பலியாகக் கூடாது. தற்போதுள்ள தமிழக அரசு விரும்பாத தேர்வு நீட் தேர்வாகும். மாநில அரசுகளின் மீதுஒன்றிய பாஜக அரசு திணித்த தேர்வுகளில் நீட்தேர்வும் ஒன்று. இந்த தேர்வு இல்லாத காலத்தில் மாணவர்கள் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தில்லியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் புகுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் (பாஜக நீங்கலாக) கோரிக்கை விடுத்தும் ஒன்றிய அரசு அதை ஏற்காமல் சண்டித்தனம் செய்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (செப்.13)முதலமைச்சரால் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கடந்த ஆட்சியின் போதும் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்ததீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கக்கோரி அப்போதைய ஆட்சியாளர்கள் குடியரசுத் தலைவருக்கு போதிய அழுத்தம் தரத் தவறிவிட்டதால் நீட் தேர்வைத் தமிழக மாணவர்கள் எழுதவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவேண்டும். அந்த சட்டத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மாநில மக்களின் நிர்ப்பந்தமும் அவசியமாகிறது. எனவே சட்டப்பேரவைத் தீர்மானத்தோடு திமுக அரசு நின்று விடாமல் நீட் தேர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டி ஒன்றிய அரசுக்கு எதிரான தொடர் இயக்கங்களையும் முன்னெடுப்பதும் அவசியம்.