அரசியல் சட்டம் வழிகாட்டட்டும்
நீதித்துறையோ, அரசோ, நாடாளுமன்றமோ உயர்வானவை அல்ல; இந்தியாவின் அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கூறியுள்ள கருத்து இன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நாடாளுமன்றம், நீதித்துறை, அரசு ஆகிய மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். மூன்று தூண்களும் சரிசம மானவை. அவை மூன்றும் பரஸ்பரம் மரியாதை அளித்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மே மாதம் 13ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்வி களை எழுப்பி குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ்நாடு மாநில அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் அதிகாரம் மற்றும் சட்டமுன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலவரம்பை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் பதவியைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு இந்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பதவிகளையும் தவறாகப் பயன்படுத்த ஒன்றிய பாஜக கூட்டணி அரசு தயங்குவதில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவ ராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தலைவராகவும் நியமித்தது. ஒன்றிய அரசின் விருப்பத்திற்கேற்பவே அந்தக் குழுவும் அறிக்கையை அளித்துள்ளது.
இதுஒருபுறமிருக்க, குடியரசுத் தலைவரின் பெயரால் எழுப்பப்பட்டுள்ள இந்த கேள்விகள் ஒன்றிய அரசினால் எழுப்பப்பட்ட கேள்விகளே ஆகும். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி அனுப்பி யுள்ள குறிப்பை எதிர்க்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 மாநில முதல்வர் களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்துவதல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடியது என்று அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் ஆளுநர் களின் அடாவடி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை நீர்த்துப் போகச் செய்ய ஒன்றிய அரசு முயல்வதன் வெளிப்பாடே குடி யரசுத் தலைவர் பெயரால் அனுப்பப்பட்டுள்ள குறிப்பாகும். நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதித்துறை ஆகிய துறைகள் அனைத்தும் அர சியல் சட்டத்தின்படியே செயல்பட வேண்டியவை. அரசியல் சட்டமே அனைத்தையும் இயக்கும் வழிகாட்டு நெறிமுறையாகும். இதை புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டுள் ளது வரவேற்கத்தக்கது. அனைத்துப் பிரச்சனை களிலும் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை இந்த வழியில் அமைவது நல்லது.