headlines

img

சமூக நீதிக்கு கிடைத்த சட்டப்பூர்வ வெற்றி

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக நீதி சக்திக ளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். 

மத்திய அரசின் சார்பிலும், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பிலும், பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்ற கெடு நோக்கத்துடன் முன்னுக்குப் பின் முரணாக வைக்கப்பட்ட பல்வேறு வாதங்க ளை சென்னை உயர்நீதிமன்றம் தகர்த்து தவிடு பொடியாக்கியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முன்வைத்த வாதம் தீர்மானகரமாக உயர்நீதிமன்றத்தால் நிரா கரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டை அகில இந்திய தொகுப்பு இட ஒதுக்கீட்டிற்கு அமலாக்கலாம் என்ற தன்னுடைய விதிகளுக்கு எதிராக, மோடி அரசின் தூண்டுதலால் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வாதிட்டது. உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காட்டி சமூக நீதியை மறுக்க துணிந்தது. ஆனால் அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது மகிழ்ச்சிக் குரியது.

மோடி அரசும் இந்த விஷயத்தில் நேர்மை யான அணுகுமுறையை பின்பற்றவில்லை. அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தேசித் துள்ளதாக கூறிக்கொண்டே மறுபுறத்தில் அதற்கு எதிராக வாதிட்டது. ஆனால் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வ தடை எதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதோடு, சமூக, பொரு ளாதார ரீதியில் அனைவருக்கும் சமமான, சரியான திட்டத்தை வகுக்க வேண்டுமென்றும், மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும், மாநில அரசும் ஆலோசித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக ளும் இதில் ஒன்றுபட்டு வழக்காடிய நிலையில், மாநில அரசும் இணைந்து நின்ற நிலையில் சமூக நீதிக்கு ஆதரவான இந்த தீர்ப்பை பெறுவது சாத்தியமாகியுள்ளது. தமிழகத்தில் நடைமுறை யில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த விஷயத்திலும் பொருத்த முடியும் என்ற வாதம் வெற்றி பெற்றுள்ளது. 

உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு உச்சநீதி மன்றம் கேட்டுக் கொண்ட நிலையில் இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசு இனியேனும் குறுக்கு வழியில் முட்டுக்கட்டை போட முயலாமல் உடனடியாக இதற்கான சட் டத்தை இயற்றுவதே நீதிக்கும் சமூக நீதிக்கும் செய்யும் மரியாதையாகும்.