இந்திய அணுசக்தித் துறையும் அமெரிக்க அழுத்தமும்
இந்தியாவின் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள ‘ ஷாந்தி’ (SHANTI) சட்ட மும், அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதி பதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ள தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டமும் (NDAA 2026), நாட்டின் இறையாண்மை குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. பல தசாப்தங்களாக அணுசக்தித் துறையை அரசு தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், தற்போது விபத்துகளுக்கான இழப்பீடு மற்றும் பொறுப்புணர்வில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
றிப்பாக, ஒரு அணு உலை விபத்துக்கு உள்ளானால், அந்த உலையை அல்லது அதன் பாகங்களை வழங்கிய வெளிநாட்டு நிறுவனங் கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் ‘வழங்குநர் பொறுப்பு’ (Supplier Liability) என்ற அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இது 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அணுசக்தி இழப்பீட்டுச் சட்டத்தின் (CLND Act) அடிப்படையையே சிதைப்பதாக அமைந்துள்ளது. போபால் நச்சுவாயு பேரிடர் போன்ற ஒரு மோசமான நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடந்தால், இந்திய மக்கள் யாரிடம் நீதி கேட்பது என்ற அச்சத்தை இது உருவாக்குகிறது.
மறுபுறம், அமெரிக்காவின் சட்டத்தில் இந்தி யாவின் அணுசக்தி விதிகளை “சர்வதேச தரத் திற்கு மாற்ற வேண்டும்” என்று வெளிப்படை யாகக் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்தியாவின் கொள்கை முடிவுகளில் அமெரிக்காவின் நேரடி தலையீட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது. வெறும் 3,000 கோடி ரூபாயாக விபத்து இழப்பீட்டு வரம்பு குறைக்கப்பட்டிருப்பது, பன்னாட்டு நிறு வனங்களுக்குச் சாதகமாகவும் இந்திய மக்க ளின் உயிர் பாதுகாப்பை மலிவாகவும் கருதுவது போல் உள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில், “விற்பனையாளர் களால் இயக்கப்படும் சட்டம்” (Vendor-driven) என்ற விமர்சனத்தை இது உறுதிப்படுத்துகிறது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) போன்ற அமைப்புகளின் தன்னாட்சி அதி காரம் இதனால் நீர்த்துப்போகும் அபாயமும் உள்ளது.
நாடாளுமன்றத்தில் முறையான விவா தங்கள் இன்றி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை களை நிராகரித்துவிட்டு இச்சட்டம் அவசர மாக நிறைவேற்றப்பட்டது ஜனநாயகப் பண்பு களுக்கு மாறானது. 2008-ம் ஆண்டு போடப் பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத் தின் அமலாக்கத்தை அமெரிக்கா ஆய்வு செய்யும் (Assess implementation) என்ற சரத்து, நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங் களில் அமெரிக்காவின் கண்காணிப்பை அனு மதிப்பது போன்றதாகும். அந்த உடன்பாடே மிக ஆபத்தானது. இப்போது அதை அமலாக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தீவிரமாகும்.
அமெரிக்காவின் வர்த்தக நலன்களுக்காக இந்திய மக்களின் பாதுகாப்பு உரிமைகளை அடகு வைக்கக் கூடாது. வளர்ச்சியின் பெயரால் மேற் கொள்ளப்படும் இத்தகைய சமரசங்கள், எதிர் காலத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு நிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதே நிதர்சனம்.
