ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூடஉயிரிழக்கவில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
“தீக்கோழியைப் போல நீங்கள் உங்கள்தலையை மணலில் புதைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது’’ என ஒன்றிய அரசைத் தில்லி உயர் நீதிமன்றம் எதற்காகக் கண்டித்தது? தில்லி அரசு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களைக் கணக்கெடுக்க அமைத்த குழுவை, துணை நிலை ஆளுநரைக் கொண்டு கலைக்க மோடி அரசு உத்தரவிட்டது ஏன்?உண்மை ஊர்வலம் வந்துவிடும் என்பதால்தானே.தில்லி பத்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுதன்ஷூ பங்காட்டா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். என்றுஅவர்களின் பட்டியலையும் வெளியிட்டாரே! அவ்வளவு ஏன் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், ‘’ கடந்த 10 நாட்களில்மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எனது நண்பர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ‘’ என்று குறிப்பிட்டிருந்தாரே; அப்போது ஏன்ஒன்றிய அரசு மறுக்கவில்லை?
‘’ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குச் சமமானது. ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தசெய்திகளை படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பது கிரிமினல் குற்றமாகக் கருதுகிறோம்’’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்சரமாரியாக கண்டித்தது மோடி அரசிற்கு ஞாபகம்இருக்கிறதா?ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ‘’ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் இறந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய நெருக்கடியை நாம் இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்’’ எனக் குறிப்பிட்டார். அதனை எதற்காக ஒன்றியஅரசு ஆமோதித்தது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகீர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். அதனை எந்தக் கணக்கில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மே 7 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், செங்கல்பட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்திருந்ததைக் குறிப்பிட்டு, கூடுதல் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றுஒன்றிய அரசு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொரோனா பொது முடக்கத்தின் போது ஒரு புலம் பெயர் தொழிலாளர் கூட உயிரிழக்கவில்லை என நா கூசாமல் பொய் சொன்ன அரசுதான் மோடி அரசு என்பதை மக்கள் அறிவார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடு முழுவதும் எழுந்த மரண ஓலத்தை மறைக்கநாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவது வெட்கக்கேடு. உலக அரங்கில் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரியதலைக்குனிவு.