headlines

img

தடுப்பூசி உற்பத்தியை விரைவுபடுத்துக...

கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடிபேசும் போது இந்தியாவின் மருந்து உற்பத்தித்துறை துடிப்பானதாக உள்ளது என்றும் அதனுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை அரசு தொடர்வதன் மூலம் அனைத்து மருந்துகளும் முறையாக கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்களே தடுப்பூசி மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. சீரம், பாரத் பயோடெக் என்ற  இரு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு ரூ.4500 கோடி அளவுக்கு எவ்வித வங்கி உத்தரவாதமுமின்றி முன்பணம் கொடுத்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்திசெய்யும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்கூறியுள்ளார். பாரத் பயோடெக் இயக்குநர். கோவாக்சின் மருந்து உற்பத்தி ஜூலை மாதம் 3.32 கோடி குப்பிகளாக இருக்கும். ஆகஸ்ட்மாதத்தில் 7.82 கோடி குப்பி உற்பத்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

சீரம் நிறுவனத்தின் இயக்குநர் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் நிறுவனம் 10 கோடி குப்பிகள் அளவுக்கு உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளார். இந்த அளவு என்பது உத்தேசமானதே ஆகும். ஒருவேளை இவ்விரு நிறுவனங்களும் இந்த அளவுக்கு உற்பத்தி செய்து தந்தாலும் கூட அனைத்துவயதினருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட முடியாது. ஆனால் இந்த இரு நிறுவனங்களை தாண்டிதடுப்பூசி மருந்து உற்பத்திக்கு அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்க கூட மோடி அரசு தயாராகயில்லை. அடுத்தாண்டில் முதல் காலாண்டுக்குள்உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் கூறியிருக்கும் இலக்கை நிறைவேற்றினால்கூட இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த போதுமானதாக இருக்காது. இதுவரை இந்தியாவில் 18 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கான தேவை மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில் முதல் ஊசிக்கும் இரண்டாவது ஊசிக்கும் இடையிலான கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையில்  4 முதல் 6 வாரங்கள்இடைவெளி உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கான இடைவெளி 4 முதல் 6 வாரங்கள் என்றிருந்தது. தற்போது 6 முதல் 8 வாரமாக மாற்றப்பட்டுள்ளது. இதை 12 முதல் 16 வாரமாக உயர்த்தவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி நோய் பரவலை தடுக்க உதவாது. 

உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி மூலமேகொரோனா இரண்டாவது, மூன்றாவது  அலையிலிருந்து மக்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளனர். எனவே இப்போதாவது தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பொதுத்துறை நிறுவனங்களை போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.