சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் கேட்டாலே வயிறு பற்றி எரிகிறது. அந்தளவிற்கு ஒன்றிய அரசு சமையல் எரிவாயு மீதான விலையைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டேயிருக்கிறது. மறுபுறம் அதற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் படிப்படியாகக் குறைத்து , கடந்த மே மாதத்தோடு முழுவதுமாக நிறுத்தி விட்டது. ஒரே நேரத்தில் இருமுனை தாக்குதலை மக்கள் மீது ஒன்றிய மோடி அரசு தொடுத்திருக்கிறது.
மோடி பதவியேற்ற பின் கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயுவின் விலை இரு மடங்கைவிட உயர்ந்திருக்கிறது. 2014ல் ரூ. 410 ஆக இருந்த சமையல் எரிவாயுவின் விலை தற்போது ரூ. 900 மாக உயர்ந்திருக்கிறது. பின்னர் சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை நேரடியாக வழங்குகிறோம் என மோடி அரசு வங்கிக் கணக்கில் செலுத்தியது. அப்போதே இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இது மானியத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான மோசடி வேலை எனக் கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மோடி வகையறாக்கள் மக்களிடம் மானியத்தை முழுமையாகக் கொண்டு சேர்க்க இதுதான் சிறந்த வழி என்றனர்.
ஆனால் 2019 ஏப்ரலில் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 722 ஆக இருந்த போது, மானியமாக 238 ரூபாய் 27 பைசா வழங்கப்பட்டது. அப்படியே படிப்படியாகக் குறைத்து 2021 பிப்ரவரி 15 அன்று கேஸ் சிலிண்டர் விலை ரூ. 785 ஆக இருந்த போது, மானியமாக வெறும் 24 ரூபாய் 95 பைசா மட்டுமே வழங்கியது. மே மாதத்திலிருந்து ஒட்டு மொத்த மானியத்தையும் அடியோடு நிறுத்தி விட்டது. இப்படி திட்டம் போட்டு ஒன்றிய மோடிஅரசு மக்களை மோசடி செய்திருக்கிறது.இந்த லட்சணத்தில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருவதையொட்டி உஜ்வாலா யோஜனா 2.0 என்ற திட்டத்தைத் துவங்கியிருக்கிறார். அதாவது அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு சிலிண்டர் கொண்டு சேர்க்கும் திட்டம். 2016ல்துவங்கிய இந்த திட்டம் ஏற்கனவே படுதோல்வி அடைந்ததை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியது. சமீபத்திய ஆய்வின்படி உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்ற 92 சதவிகிதம் பேர் மீண்டும் கேஸ் ரீஃபில் செய்வது கிடையாது. ஒருபுறம் மானியத்தை வெட்டி விட்டு, மறுபுறம் எரிவாயு மீது மோடி அரசு கலால் வரியை அதிகரித்து விலையையும் உயர்த்துவதே இதற்குக் காரணம் ஆகும்.
கடந்த 2020 - 21 பட்ஜெட்டில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு மானியமாக 40,915 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது 2021-22 பட்ஜெட்டில் ரூ. 12,995 கோடியாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது. ஏற்கனவேசாதாரண மக்களின் வருமானம் 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 44 சதவிகித குடும்பங்கள் பொருளாதாரநம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மீண்டும் எரிவாயு விலை உயர்வு என்பது மக்கள் மீதான இரக்கமற்ற கொடூரத் தாக்குதல் ஆகும். இதனை உடனே ஒன்றிய அரசுதிரும்பப்பெற வேண்டும். மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும்.