தமிழுக்கும் அமுதென்றுபேர்! - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் சொற்களால் எழுதப்பட்டவை அல்ல; உணர்வுகளால் எழுதப்பட்டவை. 16 வரி களிலும் தமிழ் என்ற சொல் திரும்பத் திரும்ப வருவது சொல்லச் சொல்ல இனிக்கும். தமிழை எப்படி எல்லாம் பார்க்க முடியும். எப்படி யெல்லாம் பார்க்க வேண்டும் என்பதற்கு இப்பாடல் காலத்தால் அழிக்க முடியாத சொல்லோ வியம். இதன் கடைசி வரிகள் மிகவும் முக்கிய மானவை. உள்ளத்தில் கனன்று கொண்டி ருக்கும் இந்தத் தீ தான் அவ்வப்போது வெளிப் படுகிறது. அந்தத் தீயை அணைத்து சாம்பலாக்கிட எத்தனை எத்தனை சூது வலைகள் பின்னப்பட்டன! பின்னப்படு கின்றன! ஆனால் அடுத்தடுத்து வரும் தலை முறைகளும் சூது வலைகளை எரிக்கிறார்களே தவிர உளமுற்ற தீ அணைந்துபோக விட வில்லை. வரலாற்றில் இது மீண்டும் மீண்டும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. இந்திய வரைபடத்தில் வடகிழக்கே ஒரு மூலையில் முடிச்சு போல் இருப்பது திரிபுரா. அதன் தலைநகர் அகர்தலாவுக்குச் சென்றாலும் தமிழ் உள்ளம் தமிழைத்தானே ஏந்திச் செல்ல முடியும்?
அகர்தலாவில் நடந்த விழா
இந்திய மொழிகள் 22 -ல் வெளியாகும் இலக்கியங்களுக்கும் மொழியாக்க நூல் களுக்கும் இளம் வயதிலேயே சிறந்த படைப்பு களைத் தருவோருக்கும் சிறார்களுக்கு சிறந்த நூல்களை படைப்போருக்கும் இந்திய ஒன்றிய அரசு ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கிறது. முதல் இரண்டு விருதுகள் சாகித்ய அகாடமி விருது என்றே பெயர் பெறுகின்றன. மற்ற இரண்டில் முதலா வது ‘யுவபுரஸ்கார்’ என்றும் இரண்டாவது ‘பால புரஸ்கார்’ என்றும் அழைக்கப்படு கின்றன. இவற்றில் 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் படைப்பிலக்கிய விருதினை எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றார். மொழி பெயர்ப்புக்கான விருது குளச்சல் மு.யூசுஃப்புக்கு அறிவிக்கப்பட்டது . மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபனின் படைப்பான “மணியன் பிள்ளையின் ஆத்மகதா” (சுயசரிதை) எனும் நூலினை இவர் தமிழாக்கம் செய்துள்ளார். “திரு டன் மணியன்பிள்ளை” என்ற இவரின் மொழி யாக்க நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழா அகர்தலாவில் ஜுன் 14 அன்று நடைபெற்றது.
பட்டயம் தந்த வருத்தம்
விருது என்பது அங்கீகாரம் என்பதோடு மனதிற்கு உத்வேகம் அளிப்பது; படைப் பூக்கத்தைத் தூண்டுவது. அந்த மனவோட்டத் தோடு சென்ற படைப்பாளிக்கு விழாவில் ஒரு பட்டயம் வழங்கப்பட்டது. அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார் என்பதற்கான அடை யாளம் அதுதான். தேசிய அளவில் பெறப்பட்ட விருதினை வீட்டில் வெளிப்பட தோன்றச் செய்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. ஏன்? இந்தப் பட்டயத்தில் எழுத்துக்கள் இந்தி மொழியில் இருந்தன. இதைப் பார்த்து யூசுஃப் மன வருத்தம் கொண்டார். தமிழில் ஏன் தரக்கூடாது என்று விழா மேடையிலேயே வெளிப்படையாகக் கேட்டுவிடலாமா என்று எண்ணி, அகாடமி யின் தமிழ் சார்ந்த உறுப்பினரிடம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். நமக்குள் மறைந்து கிடக்கும் நாகரிகம், அவையடக்கம் என்பதெல்லாம் புறப்பட்டு வந்துவிடும் அல்லவா? அந்த உறுப்பினர், மேடையில் பேசாதீர்கள்; கருத்தினை மின்னஞ்சலில் அனுப்புங்கள் என்று ‘வழி’ காட்டியிருக்கிறார். அந்த வழியில் சென்று மின்னஞ்சல்கள் அனுப்பியாகிவிட்டன. ஆனால் அகாடமியில் இருந்துதான் பதில் இல்லை என்று வருத்தம் கொள்கிறார் யூசுஃப்.
படைப்பாளிக்கு சிறப்பு செய்யுமா?
இந்த மொழிச்சிக்கல் காலம் காலமாக உள்ளது. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தி என்பதால் அதில் தான் பட்ட யங்கள் தரப்படுகின்றன. எந்த மொழிக்காக ஒரு படைப்பாளி தெரிவு செய்யப்பட்டாரோ அந்த மொழியில் பாராட்டுப் பத்திரம் தருவதுதானே அவருக்கு சிறப்பு செய்வதாக இருக்கும். தனது பெயர் எங்கே இடம் பெற்றி ருக்கிறது என்பதைப் படித்து அறிய முடியாத ஒரு பட்டயத்தை - வீட்டில் பெருமையுடன் வைத்திருந்தாலும் உறவினர்கள் நண்பர்கள் வரும்போது காட்டி மகிழலாம்; ஆனால் அவர்களால் படித்து அறிய முடியாத ஒரு பட்டயத்தை எதற்கு வழங்க வேண்டும்? குளச்சல் யூசுஃப் படைப்பாளியே தவிர படிப்பாளி அல்ல. முறைசார்ந்த கல்வியில் பெறும் பட்டங்களைப் பெயரின் பின்னோட்டாக போட்டுக் கொள்ளும் அளவுக்குப் படிப்பாளி அல்ல. பள்ளிப் படிப்பை முடிக்காத யூசுஃப் மளிகைக்கடை வேலைக்குச் சென்றார். இதுவே அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடை என்பதால் மலையாளத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்ட சிறு சிறு நூல்கள் எடைக்கு வரும். இவற்றைப் படித்து மொழிகளைக் கற்று மொழிபெயர்க்கவும் தயாரானார். இது வரை மலையாளத்திலிருந்து தமிழுக்கு 30 நூல் களைத் தந்துள்ள யூசுஃப், தமிழிலிருந்து மலை யாளத்துக்கு ஒரு நூலினைத் தந்துள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் ஆழங்கால் பட்ட யூசுஃப் இந்தியையும் தெரிந்து வைத்துக் கொள்ளலாமே என்று யாரோ ஒருவரின் மன ஓரத்தில் எழக்கூடும். இது, எல்லோரும் இந்தி படித்துக்கொண்டால் மொழிப் பிரச்சனையே எழாது என்ற மொக்கை வாதத்தின் ஒரு பகுதி தான். தேவைப்பட்டால் நான் எந்த மொழியை யும் கற்றுக் கொள்கிறேன். அதுவரை என் தாய்மொழியில் எனக்கு எல்லாவற்றையும் தா என்று கேட்க உரிமை உண்டுதானே! அதைத்தானே யூசுஃப் கேட்கிறார். தருவதில் இந்திய ஒன்றியத்தின் அரசுக்கு என்ன சிக்கல்?
மக்களவையில் தமிழ் முழக்கம்
குளச்சல் யூசுஃப்பின் கோரிக்கை முளை விட்டது ஜூன் 14-ஆம் தேதி அகர்தலாவில் இது விரிந்து விருட்சமாகியிருக்கிறது என்பதை ஜூன் 18 அன்று மக்களவையில் பார்த்துப் பரவசம் அடைய முடிந்தது. தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறு பாடின்றி தமிழில் பதவியேற்பு உறுதிமொழி கூறி யுள்ளனர். பல குரல்கள் பல சித்தாந்தங் அகளை முன்னிலைப்படுத்தி உள்ளன. இவை போற்றத்தக்கவை; புகழத் தக்கவை. அவற்றில் பல குரல்கள் “தமிழ் வாழ்க” என்று முழங்கி யிருக்கின்றன. தமிழ் வாழ்வதற்குத் தேவை யான முயற்சிகளை தில்லி சென்றுள்ள தமிழுணர்வாளர்கள் செய்வார்கள். யூசுஃப் போன்ற படைப்பாளிகளின் கோரிக்கை உள்ளிட்டவை நிறைவேறும் என்று நம்புவோம். தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ அல்லவா? அது அணையாது ஒளிபரவச் செய்யும்.