முந்தைய தலைமுறையில் இளம் பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளானோர் பலர். குறிப்பாக 1970-களின் தொடக்கத்தில் போலியோ தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். பல்வேறு நோய் ஒழிப்புகளில் கவனம் செலுத்திய அரசு சிறு வயதிலேயே குழந்தைகளைத் தாக்கும் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை தொடர்ந்து செலுத்தும் முறையை அமல்படுத்தியது. இந்த முயற்சியினால்தான் நாட்டில் தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை போன்ற கொடிய கொள்ளை நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டன. இளம்பிள்ளை வாத நோயைத் தடுக்க 1955-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டதுதான் போலியோ சொட்டு மருந்து திட்டம். இந்தத் திட்டம் அப்போதிலிருந்து இன்று வரை நாடு முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டன்படி ஓராண்டில் இரண்டு முறை போலியோ தடுப்பு மருந்துகள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு தொடர்ந்து தடுப்பு மருந்து கொடுத்து வந்ததன் மூலம் வளரும் தலைமுறையினரிடையே போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லாத நிலை உருவாகி வந்தது. ஆனால் இப்போது இந்த போலியோ தடுப்பு மருந்து திட்டத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காஸியாபாத்தில் இயங்கி வரும் பயோமெட் என்ற தனியார் நிறுவனம் தான் இந்தியா முழுமைக்குமான போலியோ சொட்டு மருந்தை உற்பத்தி செய்து அளித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்நிறுவனம் சப்ளை செய்த போலியோ சொட்டு மருந்துகள் தரமற்றதாகவும் கலப்படமானதாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அளித்த போலியோ சொட்டு மருந்தில் மனித கழிவு மற்றும் சாக்கடை நீர் கலந்திருப்பது தெரியவந்தது. இவ்விதம் கலப்படமானதாக இருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்துகள் உத்தரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்த செய்தி அப்போது பலரது மனதையே உறைய வைத்தது. ஆனால் கசோலியில் உள்ள மத்திய மருந்து சோதனை ஆய்வகம் அளித்த இந்த சோதனை முடிவுகளை பயோமெட் நிறுவனம் எதிர்த்தது. இதையடுத்து அவை மீண்டும் சோதித்துப் பார்க்கப்பட்டது. அந்த சோதனையில் கலப்படம் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காஸியாபாத்தில் உள்ள பயோமெட் தயாரிப்பில் உரிய மருத்துவ வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் பின்பற்றாமலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இத்திட்டத்துக்கு மருந்து சப்ளை செய்யக்கூடாது என இந்நிறுவனத்துக்கு அரசு தடை விதித்தது. போலியோ சொட்டு மருந்து தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஹஜ் யாத்ரிகர்களுக்கு தடுப்பு ஊசி மருந்தை சப்ளை செய்ய அனுமதிக்குமாறு இந்நிறுவனம் விடுத்த கோரிக்கைகளையும் அரசு உறுதியாக மறுத்துவிட்டது.
பிரச்சனை இத்துடன் முடியவில்லை. போலியோ சொட்டு மருந்தை தயாரிக்குமாறு அரசு மருந்து தயாரிப்பு நிறுவனமான பயலாஜிக்கல் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்நிறுவனம் தயாரித்த மருந்து தரமற்றது என்றும். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது அல்ல என்றும் மத்திய மருந்து ஆய்வக சோதனை முடிவுகளில் தெரிவிக்கப்பட்டதால், அங்கும் மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டில் போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்கான அடுத்த கட்ட பணிகள் ஜுன் மாதத்தில் தொடங்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்துக்குத் தேவையான சொட்டு மருந்துகள் இப்போது நம்மிடம் இல்லை. இதனால், தடுப்பு மருந்து அளித்து இளம் குழந்தைகள் சிறுவயதிலேயே முடமாவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட திட்டமே இப்போது முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. நோயற்ற இளம் தலைமுறையினரை உருவாக்க கொண்டு வரப்பட்ட திட்டமே இப்படி முடங்கும் சூழல் உருவானால் மக்கள் எங்குதான் செல்வது? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.