எழுத்தாளர் ம.காமுத்துரையின் 5 ஆவது நாவல் குதிப்பி. சமையல் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதல் நாவல்.சாதாரண எளிய சமையல் கலைஞரின் அன்றாட வாழ்வியல் குடி கலாச்சாரத்தோடு ஒன்றி, அவர்களின் வருமானம் குடிப்பதற்கே போய்விடும் அவலம், அது சார்ந்த வாழ்க்கை சிக்கல்என விரிவான கதைக் களத்தில் இயங்குகிறது இந்நாவல்.
சோறு கிண்டும் பெரிய கரண்டியின் வட்டாரப் பெயர் குதிப்பி. அந்தப் பெயரால் முந்நூறு பக்கங்களைத் தாண்டி விரியும் நாவல் சமையல் பணியாளர்களின் பாடுகளை, தேனி வட்டாரப்பின்புலத்தில், வட்டார மொழி தரும் தனித்துவமான உரையாடல்களின் ஊடாக அற்புதமாகப் பதிவு செய்கிறது.
இந்த நாவல் திருமண மண்டபங்களின் புறக்கடைகளிலும் கோயில் காடுகளின் மறை வெளிகளிலும் புழங்கும், பொதுச் சமூகம் அறியாத சமையல் கலைஞர்கள், பணியாளர்களின் வாழ்க்கைப் பாடுகளை வாசகர்க்கு விரிந்த ஒரு தளத்தில் விளக்குவதன் மூலம், ஒருவிளிம்புநிலை வாழ்க்கையை ஆவணப்படுத்தும் பணியைச் சீரிய முறையில் செய்து முடித்திருக்கிறது.இரவு நேரப்பணி, தெருக்கூத்து, கரகாட்டம், பொதுவெளிக்குப் பரிச்சயமற்ற திரைப்படக் கொட்டகைப் பணிபோன்ற, சமூகத்தின் கண்முன்னர் இல்லாமல் அதன் முதுகின்பின் செய்யவேண்டிய பணித் தளங்களில்தான் பெரும்பாலும் சமுதாயம் காத்துவருகிற அத்துக்கள் மீறப்படுகின்றன. அங்குப்பலவகைத் தவறுகளும் அரங்கேறுகின்றன.
இரவு நேரங்களிலும் புறக்கடையிலும் செய்யப்படும் பணி, வேளாவேளைக்கு வீடு குடும்பம் திரும்பமுடியா அகாலங்கள், கடும் உடல் உழைப்பு, சமூக அங்கீகாரமின்மை, பெரும்பாலும் கந்துவட்டி மூலம் பெறப்படும் முதல், காய்ந்து போன வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்ட சக பணியாளர்கள் எனும் நட்புவட்டம், ஒரு நேரம் கணிசமாய்ப் புரளும் பணம், இன்னொரு நேரம்வேலையின்மையால் நேரும் பணநெருக்கடி, ஏமாற்றுக்கள், வஞ்சனைகள், பொதுச்சமூகம் சேவைப் பணியாளர்கள் மீது செலுத்தும் உழைப்புச் சுரண்டல் போன்ற காரணிகள் சமையல்பணியாளர்களைக் குடிகாரர்களாக மாற்றி எப்படிச் சீரழிக்கின்றன என்பதை, கசப்புத் தோய்ந்த ஓர் உள் தொனியில் நாவல் விரித்து விளக்கிச் செல்கிறது. நவீன மாற்றங்கள், தொழில், வருவாய் முன்னிட்ட கல்விமுறை, புதுப்போக்குகள் சமையல் தொழிலில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் இவற்றை ஒரு லயத்துடன் பதிவு செய்யும் நாவல், குடியினால் பாழாகும் தனிமனித, குடும்ப வாழ்வின் பாடுகளையும் உடன் விளக்கி, குடிக்கு எதிராகவும் நிற்கிறது..
புதிய தலைமுறை, மரபானவற்றில் நிலவும் தவறுகளை விட்டுவிலகிப் புதிய தடங்களைக் காணும் முயற்சிகளில் எவ்வாறு தீவிரமாய் இயங்கத் தொடங்குகிறது என்பதையும்சமையல் தொழில் எனும் பின்னணியில் இருந்து நாவல் விளக்கிச் செல்கிறது.தேவையான ஒரு களத்தைச் சிறப்பாக விளக்கியுள்ள நல்ல நாவல். எளிய மக்களின் சரளமான உரையாடலில் நாவல் நளினமாய் நகர்கிறது. இந்நாவலின் வாசிப்பு அனுபவம் அலாதியானது. வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் யதார்த்த மொழிநடையில் நானும்பயணித்த தருணம் இனிமையானது.இப்படியான உணர்வை நீங்கள் வாசிப்பின் வழியாகத்தான் உணர முடியும்.2019 - ஆம் ஆண்டின் ‘ பிரபஞ்சன் நினைவுப் பரிசு’ பெற்ற நாவல் என்பது கூடுதல் சிறப்பு.
குதிப்பி ( நாவல் )
ஆசிரியர்: ம.காமுத்துரை
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர், சென்னை - 78.
பக்: 356 விலை: ரூ. 400/-
===பேரா. கந்த ராமையன்===