கோவா சட்டப்பேரவையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். கோவாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இருப்பினும் சிறிய கட்சிகளுக்கு பதவி ஆசை காட்டி பாஜக, ஆட்சியை பிடித்துக்கொண்டது. முன்னாள் துணைமுதல்வர் பிரான்சிஸ் டிசோசா கடந்த மாதம் காலமானார். கடந்த ஞாயிற்றுக்
கிழமை முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். இதையடுத்து பேரவையில் பாஜக பலம் மேலும் குறைந்துவிட்டது. இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவியதால் 2 இடங்கள் காலியாக உள்ளன. 40 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் அறுதிப்பெரும்பான்மைக்கு 21 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நான்கு இடங்கள் காலியாக இருப்பதால் தற்போதைய எண்ணிக்கைபடி 36 ல் அறுதிப்பெரும்பான்மைக்கு 19 உறுப்பினர்கள் போதும். இரு சிறிய கட்சிகள், சுயேச்சைகளை விலைபேசி அந்த எண்ணிக்கையை பாஜக அடைந்துவிட்டது. இருப்பினும் அறுதிப்பெரும்பான்மையை பெற முயற்சிக்கும் அக்கட்சியை காப்பாற்றும் நோக்கில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 18 தொகுதிகளோடு மேலும் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாத ஆணையம் கோவாவில் பாஜக ஆட்சியை காப்பாற்ற இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ இடைத்தேர்தல் நடத்தினாலும் அதிமுக வெற்றிபெறப்போவதில்லை என்பதால் திட்டமிட்டு திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்தமாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. அந்த 3 தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடத்தமுடியாது என்று ஆணையம் கூறுவதை ஏற்கமுடியாது. கொளத்தூர் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே 2016ல் தேர்தல் நடத்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களையும் சேர்த்து நடத்தாமல், பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆணையத்தின் நடவடிக்கை
அமைந்துவிட்டது. நேர்மையாகவும் நடுநிலை தவறாமலும் செயல்பட வேண்டிய தேர்தல்ஆணையம் அரசியல் அழுத்தத்துக்கு உடன்படுவது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல ஆபத்தானதுமாகும். இந்த தவறினை சரிசெய்யும் வகையில் ஆணையம் உடனடியாக 3 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியையும் அறிவிக்கவேண்டும்.