டேனிஷ் கோட்டையில் உலக மரபுதினம் வார விழா ஏப்.24 வரை கட்டணமின்றி பார்வையிடலாம்
மயிலாடுதுறை, ஏப்.20- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு தினம் வாரவிழாவை முன்னிட்டு ஏப்.18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் பார்வையிடலாம் என கோட்டை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கி.பி. 1600 முதல் 1845 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரர்கள்(டென்மார்க் நாட்டினர்) 1620 இல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுனுக்கத்துடன் கோட்டையை கட்டி பயன்படுத்தினர். 400 ஆண்டுகள் பழமையாகியும், இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கும் இக்கோட்டையில் செயல்படும் அகழ்வைப்பகத்தில் 14 ,15,16 ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரர்கள், தமிழர்கள் பயன்டுத்திய பொருட்கள், சிலைகள், பீங்கான், மரத்தாலான பழமையான பொருட்கள், டேனிஷ் அரசர்கள், ஆளுநர்களின் புகைப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போர்கருவிகள், 16 ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்களை பத்திரப்படுத்தி காட்சிக்கு வைத்துள்ளனர். மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டகவைப்பறை, பீர், ஒயின் கிடங்கு அறைகளாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை ஏப்.18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு வாரக்காலத்திற்கு கட்டணமின்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடலாம் என டேனிஷ் கோட்டை நிர்வாகம் அறிவித்துள்ளது.