தீக்கதிர் செய்தி எதிரொலி- தரங்கம்பாடி தமிழ்நாடு ஓட்டல் ரூ4.50 கோடியில் புரனரமைப்பு
மயிலாடுதுறை, ஏப்.20- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சிக்காலத்தின் போது தபால் நிலையம் அமைந்துள்ள கடற்கரை அருகில் ஒன்றிய அரசு நிதி மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் கீழ் தங்கும் விடுதி உணவகத்துடன் கட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு கலைஞரால் திறக்கப்பட்டது. தொடர்ந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பயன்பட்டு வந்த இந்த விடுதியில் போதிய வருமானம் இல்லையென பொய்யான ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்து தாஜ் ஹோட்டல் குழுமத்தின் “ நீம்ரானா” என்கிற தனியார் நட்சத்திர விடுதி பணம் கொழிக்கும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா துறை மூடியது. எந்த தனியார் விடுதியின் வருமானத்திற்காக திட்டமிட்டு தமிழ்நாடு ஓட்டல் மூடப்பட்டதோ, அதே தனியார் ஓட்டல் நிர்வாகத்தினர் சில மாதங்களில் ஓட்டலை தாங்கள் நிர்வகிப்பதாகக் கூறி, அவர்கள் ஓட்டலுக்கு வருகிற பணக்காரர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி ஓரிரு ஆண்டுகளிலேயே உரிய பராமரிப்பு எதுவும் செய்யாமல் மீண்டும் சுற்றுலாத்துறையிடமே ஒப்படைத்தனர். கார்ப்ரேட் நிறுவனத்தின் தங்கும் விடுதி கொள்ளையடிப்பதற்காக தமிழ்நாடு ஓட்டலை கடந்த 7 ஆண்டுகளாக மூடி வைத்து, எந்தவித பராமரிப்புப் பணிகளும் செய்யாமல் விட்டதால், கேட்பாரற்று புதர் மண்டி ஓட்டல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் தரங்கம்பாடியில் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஒரு நாள் தங்கி செல்ல வேண்டுமென்றால் பல்லாயிரக்கணக்கில் பணத்தை கொட்டி தந்தால் தான் தங்கி செல்ல முடியும். குறிப்பாக ஒரு காபி பருக வேண்டுமென்றால் கூட தரங்கம்பாடி கோட்டை எதிர்புறம் உள்ள நீம்ரானா ஓட்டலில் 200 ரூபாய், டீ குடிக்க 150 ரூபாய் என செலவாகும். தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஓட்டலை இழுத்து மூடிவிட்டு வசதிப்படைத்தவர்கள் மட்டுமே தரங்கம்பாடியில் தங்கி செல்லமுடியும் என்ற அவலநிலை ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அது நீடித்து வருகிறது. மூடப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை சீரமைத்து மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் சாதாரண மக்களும் கூட பயனடைவார்கள் என்பதால் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தங்கும் விடுதியை புழரமைக்க வேண்டும் என தீக்கதிரில் கடந்த 03/11/2024 அன்று படத்துடன் அமைச்சர், ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு தரங்கம்பாடி பேரூராட்சி துணை தலைவர் பொன். ராஜேந்திரன் அளித்த கோரிக்கைகளையும் முன்வைத்து செய்தி வெளியானது. இந்நிலையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், தரங்கம்பாடிக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், தமிழ்நாடு ஓட்டல் ரூ.4.50 கோடியில் தங்கும் விடுதி புனரமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.