வெளியே பனி பெய்து கொண்டிருந்தது. மும்தாஜ் ஜன்னலை ஒரு பக்கம் லேசாகத் திறந்து உலகைப் பார்க்க முயன்று கொண்டிருந்தாள். சில்லென்று வீசிய குளிர்காற்றில் அவளது உடலும், மனமும் சிலிர்த்தது. வீதியை, வீதியோர மரங்களை வீடுகளின் கூரைகளை நீலநிற மலைகளை, வெள்ளை நிறப்பனி மலர்களைப் போல போர்த்தி படர்ந்திருந்தது. மும்தாஜிக்கு வீதியில் இறங்கி தன் சிநேகிதிகளுடன் சேர்ந்து கூட்டாக பனி விளையாட்டுக்கள் விளையாடவும், கும்மாளம் போடவும் ஆசையாக இருந்தது. கடந்த வருட இதே பனிக்காலம் கனவு போல மும்தாஜிக்கு தோன்றி மறைந்தது. ஒரு வருட இடைவெளியில், அவள் வீட்டை விட்டு வெளியேற தடை செய்யப்பட்டு இருந்தாள். பள்ளிக்கு சென்று பல மாதங்கள் ஆகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது அந்த சிறுமிக்கு மட்டுமல்ல, அவளது வீட்டுப் பெரியவர்களுக்கும் புரியவில்லை. மும்தாஜ், அம்மாவிடம் பலமுறை கேட்டு விட்டாள். அம்மா ஒவ்வொரு முறையும் அல்லா.. என ஆண்டவனை அழைப்பதுடன் சரி, பதில் ஏதும் சொல்ல முடியாதவளாக இருந்தாள். பக்கத்து வீட்டில் சிநேகிதி ஆயிஸா இருந்தாள். படுத்துறங்கும் நேரம் தவிர அவளுடன் ஒன்றாக கழித்த இனிய பொழுதுகள் மும்தாஜிக்கு ஏக்கப் பெரு மூச்சாக வெளிப்பட்டது. வாசல் கதவைத் திறந்து கொண்டு அவளைப் பார்க்கப் போனால் என்ன? என யோசித்தாள். உள்ளே அம்மா வேலையாக இருந்தாள். மும்தாஜ் பூனையைப் போல மெத்தென நடந்தாள். கதவுக்கருகே வந்துவிட்டாள். தாழ்ப்பாளை நீக்க அவளது கைகள் நடுங்கியவாறு முன் சென்ற நேரத்தில் வெளியே, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து “யா...அல்லா” என்ற ஒலியுடன் ஒரு ஆணின் உடல் சரிவதை மும்தாஜ் உணர்ந்தாள். முன் சென்ற கைகளை பின் இழுத்துக் கொண்டு, மும்தாஜ் பயத்துடன் வீட்டுக்குள் ஓடி வந்தாள். அம்மாவுக்கும் அந்த சத்தம் கேட்டு இருக்கும். ஆனால் அவள் சலனமின்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மும்தாஜ் மீண்டும் ஜன்னல் முன் வந்தாள். சீருடை அணிந்த மனிதர்கள் துப்பாக்கிகளுடன் காவலிருந்தனர். ஆயிஸா வீட்டுக் கூரையிலிருந்து உயரப் பறந்த புறாவின் சிறகடிப்பு, சீருடை மனிதர்களுக்கு படபடப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. மும்தாஜ், புறாவைப் பார்த்து, “ஆயிஸா....” என ஒருமுறை சத்தமாக அழைத்து விட்டு ஜன்னலை மூடிக் கொண்டாள்.