headlines

img

நீர்க்குமிழி - வரத.ராஜமாணிக்கம்

ஒரு நிமிடக் கதை

அவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என கேள்வி கேட்பதற்கு அந்த ஊரில் யாரும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இனி அரசு கேட்டால் தான் உண்டு. கிருஷ்ணனும், சித்ராவும் நிலையான வாழ்வைத் தேடி குறைந்தது பத்து ஊர்களையாவது கடந்து வந்திருப்பார்கள்.  ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம், குறைந்த கூலிக்கு டெக்ஸ்டைல் மில்லில் வேலையும், குடியிருக்க ஒரு ஓலைக் குடிசையும் கிடைத்தது. அருகிலிருந்த ஒற்றை ஆசிரியர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆறு வயதான மகள் ராதிகாவுக்கு ஒன்றாம் வகுப்பில் இடமும் கிடைத்தது. ஒரு நாள் மாலை, பள்ளியிலிருந்து வந்த ராதிகா, “அம்மா, கீதா டீச்சர் என்னை கலெக்டருக்கு படிக்கச் சொன்னாங்க” என மலர்ந்த முகத்துடன் கூறிய பொழுது, கிருஷ்ணனுக்கும், சித்ராவுக்கும் வாழ்வின் மீதான நம்பிக்கை முதன் முறையாக துளிர்த்தது. சித்ரா மகளைக் கட்டியணைத்துக் கொண்டு, “என் ராசாத்தி டீச்சர் அப்படியா சொன்னாங்க” என மகளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, மக்காச்சோளக் காட்டுக்குள் சக மாணவர்களுடன் சேர்ந்து, கண்ணாமூச்சி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்த ராதிகா திடீரென காணாமல் போய்விட்டாள். அடுத்த நாள் காலை அருகிலிருந்த தோட்டத்து கிணற்றில் ராதிகா நீர்க்குமிழியாய் மிதந்தாள்.  பாலியல் வன்முறைக்கு கொடூரமாக பலி ஆகியிருந்தாள். கீதா டீச்சர் தலைமையில் பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்தனர். ஊர் மக்களும் சேர்ந்து கொண்டனர். பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கலெக்டர் வராமல் மறியலைக் கைவிட முடியாது என கீதா டீச்சர் காவல்துறையிடம் கறாராக சொல்லி விட்டார். கடைசியில் கலெக்டர் அம்மா வந்து விட்டார். “என்ன நடந்ததுன்னு சொல்லுங்கம்மா”, எனக் கேட்ட கலெக்டர் அம்மாவின் முகத்தில் தன் மகள் ராதிகாவை ஆவலுடன் தேடிய சித்ரா பதில் சொல்ல முடியாமல் மயங்கி விழுந்தாள்.