headlines

img

அரசின் அலட்சியத்தால் பறிக்கப்படும் உயிர்கள்

முறையாக பராமரிக்கப்படாத கெட்டுப்போன ரத்தத்தை பயன்படுத்தியதால் நான்கு மாதத்தில் மட்டும் 15 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த டிசம்பரில் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு முறையாக எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தைஏற்றியதால் அந்த பெண்ணுக்கு எச்.ஐவிபாதிப்பு ஏற்பட்டது. அது தமிழக சுகாதாரத்துறையின் சீர்கேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதன் பின்னராவது இந்த அரசு திருந்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மட்டும் 15 கர்ப்பிணிகளின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்றால்,இந்த ஆட்சிக்காலம் முழுவதும் எவ்வளவு உயிர்கள்பறிபோயிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.


இதற்கு அடிப்படை தொடர்ந்து தமிழக அரசும், மத்திய அரசும் சுகாதாரத்தை தங்கள்பொறுப்பில் இருந்து கழற்றி விடுவது என்றகொள்கை முடிவே காரணம் ஆகும். சாத்தூர்சம்பவத்திலும் ரத்தவங்கி பராமரிப்பு என்பதைஅவுட்சோர்ஸிங் முறையில் தனியார் கையில்ஒப்படைத்ததே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு விருதுநகர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ ஆய்வுக்கூடங்கள் முழுவதையும் அவுட்சோர்ஸிங் முறையில் தனியாரிடம் ஒப்படைத்தனர். அதில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்தவுடன் 2016ஆம் ஆண்டுவரை இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உடனே அரசே மீண்டும் ஏற்று நடத்தி வருகிறது. இப்படி தொடர்ந்து பல்வேறு படிப்பினைகள் கிடைத்தும் இந்த அரசு திருந்துவதாக இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது. ஏன்ரத்த வங்கிகளை தனியாரிடம் அவுட்சோர்ஸிங் முறையில் விட வேண்டும்? இங்கு மனித உயிர்களை விட அவுட்சோர்ஸிங் முறையின் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகையேஆளும் அரசுக்கு முக்கியமாக இருக்கிறது.


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருக்கும் குட்காவை விற்க மறைமுக அனுமதி வழங்கி அதன் மூலம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருப்பவர் என்பதை தமிழகம் அறியும். அவர்தான் பொறுப்பற்றவராக இருக்கிறார் என்றால் தமிழக முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடிபழனிச்சாமிக்கு தமிழக மக்களின் சுகாதாரம் குறித்து என்ன பார்வை இருக்கிறது? அவருக்கு இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், எப்படி தனது பதவியை தக்க வைப்பது; அதற்காக தமிழக மக்களை மட்டுமல்ல, தமிழகத்தையும் காவு கொடுக்க தயாராகிவிட்டார் என்பதுதான். இதை அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.இந்நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தவறிழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.