மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்றுமசோதாக்களுக்கு காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன்விளைவாக மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் இம்மசோதாக்களை ஏற்கமுடியாது என்று அறிவித்துள்ளது.
மக்களவையில் இந்த மசோதாக்கள் மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அக் கட்சியைச்சேர்ந்த மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரவுட் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு அவையில் இருந்து வெளிநடப்பு செய்து மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் இந்த மசோதாவை எதிர்த்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தில்லியை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும்24ஆம் தேதிமுதல் 26ஆம் தேதி வரை அமிர்தசரஸ்-தில்லி பாதையில் தொடர் ரயில் மறியல்போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சியில் விவசாயம் பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறது.மத்திய அரசின் மசோதாவை கண்மூடித்தனமாகஆதரித்து விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள சிரோமணி அகாலி தளம் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் கடலூர் துவங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான காவிரி டெல்டா உள்ளடக்கிய பகுதிகளில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், இயற்கை எரிவாயு எடுத்து விவசாய நிலங்களை அழிக்கத்துடிக்கிறது மத்தியஅரசு. அதற்குத் துணைபோகிறது அதிமுக அரசு.தொழிற்சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில்சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுகிறது. விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைத்து வளமான விவசாய நிலங்கள் குத்தி குதறப்படுகின்றன.
இடதுசாரிகளின் ஆதரவுடன் மத்தியில்ஐமுகூ ஆட்சி இருந்தபோது நிறைவேற்றப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டம்கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஓரளவு பாதுகாத்தது. கிராமப்புறங்களில் வேலையின்மை கடுமையாகியுள்ள நிலையில் நூறுநாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். வேலை கோரும்அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களும் இடதுசாரிக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ இத்திட்டத்தை ஒழித்து கட்டத்துடிக்கிறது. விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள அகாலிதளத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாயிகளின் அரசு என்று கூறிக்கொள்ளும் அதிமுக இந்த விவசாயிகள் விரோத சட்டங்களை மக்களவையில் ஆதரித்திருப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் துரோகமாகும். ஆயினும் தானும் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் இந்த சட்டங்களைதமிழகத்தில் அமலாக்க துணை போகக்கூடாது.