தேசிய கல்விக் கொள்கை வரைவு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் மறுபுறத்தில், நாடு முழுவதும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலான கருத்துக்கேட்பு கூட்டங் கள் கண்துடைப்பாகவே நடந்தது. மறுபுறத்தில் சனாதன, கார்ப்பரேட் ஆதரவு கல்விக்கொள்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடாளுமன்றத்தில் இந்தக் கொள்கை குறித்து விவாதிக்கப்படவில்லை.
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த கொள்கை வரைவை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். விரிவான அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக தமிழகத்தில் இந்த நாசகரக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் மத்திய அமைச்சரவை 2020 ஜூலை 29 அன்று இந்தக் கொள்கைக்கு ஒப்புதல்அளித்தது. இப்போதுதான் பிராந்திய மொழிகளில் அந்த கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாமி, பெங்காலி, ஓடோ, மராத்தி, பஞ்சாபி,டோக்கிரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய மொழிகளில் மட்டுமே புதிய கல்விக்கொள்கை மொழியெர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதுதான். இதை யாரும் எதிர்க்கவில்லை.
ஆனால் அதே நேரத்தில் உலகின் உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றான; இந்தியாவில் அதிகம்பேரால் பேசக்கூடிய மொழிகளில் ஒன்றாகிய; உலகம் முழுவதும் பரந்துவிரிந்துள்ள தமிழ்மொழியில் புதிய கல்விக்கொள்கை வெளியிடப்பட வில்லை. இதற்கு எந்த நியாயமான காரணமும் இருக்க முடியாது. தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய ஆட்சியாளர்களுக்குள் இருக்கிற வன்மம்கலந்த வஞ்சகமே இதற்கு முழுமுதற் காரணம்.இந்தக் கொள்கையை மக்கள் முழுமையாக புரிந்துகொண்டால் கடும் எதிர்ப்பு எழும் என்பதற்காகவே அனைத்து மொழிகளிலும் இந்தக்கொள்கையை வெளியிடுவதில் தாமதப்படுத்தி னர். இப்போதும் கூட தமிழைத் தள்ளி வைத்துள் ளனர். இதிலிருந்தே இவர்கள் உருவாக்கியுள்ள கொள்கை எந்த அளவுக்கு பாரபட்சமானது, அநீதியானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.இந்த புதிய கல்விக்கொள்கையில் அப்பட்டமாக சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளைதிணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கல்வியை காவிமயமாக்கவும், கார்ப்பரேட்மயமாக்கவும் வகை செய்கிற கொள்கை இது.அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு மக்கள் தெரிந்து கொள்ளச் செய்கிற குறைந்தபட்ச அறிவு நாணயம் கூட மத்திய ஆட்சியாளர்களுக்கு இல்லை. நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு,தேசிய அளவிலான தேர்வு என்ற பெயரில் பெரும்பகுதி மாணவர்களை கல்விநிலையங்களிலிருந்து விரட்டுகிற வேலையைத்தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை செய்கிறது. இந்தப் பின்னணியில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உரத்து முழங்கவேண்டியது அவசியமாகிறது.