headlines

img

இனியும் நம்ப மாட்டார்கள்...

17ஆவது மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்டம் முடிவடைந்துவிட்டது. இன்னும் நான்கு கட்டங்கள் நடக்கவிருக்கின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென்ற பதவி வெறியில் பிரதமர் மோடியும், அவரது அடிப்பொடிகளும் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு விதமாக பேசி அந்தந்த மாநில மக்களை கவர்ந்துவிட முயற்சிக்கிறார்கள். ஆனால் அதில் அவர்கள்வெற்றியடைய போவதில்லை என்று தெரிந்ததால் மேலும் மேலும் உக்கிரமாக தங்களது பிரச்சாரத் தொனியை, பாணியை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். திங்களன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை சேமித்து வைப்பதற்காக கூடுதல்கிடங்குகள் அமைக்கவும் வெங்காயத்தை மற்ற ஊர்களுக்கு அனுப்புவதற்கான வரியை குறைக்கவும் பாஜக முயன்று வருகிறது என்றுகூறியிருக்கிறார். அந்த மாநிலத்தில் அவரது கட்சிதான் ஆட்சியிலிருக்கிறது என்பதை மறந்துவிட்டதுபோல பேசியிருக்கிறார். எத்தனை வருடமாக முயன்று கொண்டிருக்கிறார்கள்? 


மகாராஷ்டிர மாநிலத்தில் வடக்குப்பகுதியில் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கலாம். இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசுஇது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறை கூறியிருக்கிறார்.ஆனால்இவரது கட்சியின் அரசு அங்கு என்ன செய்துகொண்டிருந்தது என்பதை ஏன் சொல்லவில்லை?இன்னும் எத்தனை காலத்திற்கு முந்தைய அரசை குறை கூறிக்கொண்டிருப்பார்கள் பாஜகபரிவாரங்கள்.பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இடஒதுக்கீடு முறை அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடிமக்களின் முன்னேற்றத்திற்காக அம்பேத்கர் நமக்கு அளித்த இடஒதுக்கீட்டில் மோடியாகிய நான் இருக்கும் வரை யாரும் கை வைக்க முடியாது என்று நீட்டி முழங்கியிருக்கிறார். உண்மையில் வேறு யாரும் கை வைப்பார்கள் என்பதை விடநீங்கள் தான் கை வைப்பீர்கள் என்பதால்தானே நாட்டு மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? 


பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்ற அனுமதிக்க மாட்டேன். பழங்குடியின மக்களின் விவசாய நிலங்களை யாரும் பறிக்க முடியாது என்றும் மார்தட்டியிருக்கிறார் மோடி. ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு திட்டங்களுக்காக என்றுகூறி பழங்குடியின மக்களை அவர்களது குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் நிலங்களிலிருந்தும் வெளியேற்றுவது இவர்களது கட்சி ஆட்சிநடத்தும் மாநிலங்கள் தானே. தமிழகத்தின் ஈஷா மையத்தின் ஜக்கி வாசுதேவ் பழங்குடி மக்களின் நிலங்கள், வனத்துறை நிலங்கள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டுத்தானே கட்டடங்கள் கட்டி விழா நடத்தி அதற்குஇவரையும் அழைத்திருந்தார். இவரும் வந்திருந்துஅவருக்கு ஆதரவை தெரிவித்து ஆசியும் வழங்கிவிட்டுச் சென்றார்.அப்படிப்பட்டவர்தான் இப்போதுஇப்படி பேசுகிறார். நரேந்திர மோடியின் சொல்லும் செயலும் நம்பும்படியாக இல்லை.