headlines

img

மூக்கில் நெய் பூசினால், முகத்தை மறைக்க முடியாது!

இந்திய பங்குச்சந்தையிலிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ₹1.5 லட்சம் கோடி 

இந்திய பங்குச்சந்தையிலிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ₹1.5 லட்சம் கோடி மதிப்பி லான அந்நிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. இதுகுறித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியப் பொருளாதாரம் வளர்வதால்தான் அந்நிய முதலீட்டு நிறுவ னங்கள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து முதலீடு களை திரும்பப் பெறுகின்றன” எனக் கூறியுள்ளார்.

அப்படியென்றால், வளர்ந்த அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகளில் அந்நிய நாட்டு முதலீடே இல்லையா? இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்றால், எதற்காக பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாகச் சென்று அந்நிய மூலதனத்திற்காக கையேந்து கிறார்? நிதியமைச்சர், மூக்கில் நெய் பூசி, முகத்தை மறைக்க முயல்கிறார். மூக்கில் நெய் பூசினால்,  முகத்தை மறைக்க முடியாது; மாறாக, நெய் மூக்கில் மட்டுமே ஒட்டிக்கொண்டு தவறு வெளிப் படும். இதுபோல, இந்தியாவின் பொருளாதாரச் சிக்கல்கள் “எல்லாம் சரியாகிவிட்டது” என்ற பிரச்சா ரத்தால் உண்மை நிலையை மறைக்க முடியாது.

தொடர் விலைவாசி உயர்வால் மக்களின் சேமிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப சேமிப்பு வீதம் 2020-21 இல் 11.5%இலி ருந்து 2022-23 இல் 5.1% ஆகச் சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரப்படி, 2023-24 இல் குடும்பக் கடன் சுமை ஜிடிபி-யின் 40% ஐத் தாண்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40-45% அதிகரித்துள்ளது; மருத்துவச் செலவுகள் 30% வரை உயர்ந்துள்ளன; தனியார் பள்ளிக் கட்டணம் வருடத்திற்கு 15% உயர்கிறது. ஆனால், சராசரி ஊதிய உயர்வு 8-10% மட்டுமே. பணவீக்கத்துடன் ஒப்பிட்டு கணக்கிட்டால், உண்மையான வருமான வளர்ச்சி 2-3% மட்டுமே. மக்களின் வாழ்நிலை இப்படியிருக்க, எப்படி பொருளாதாரம் மட்டும் தனியாக வளரும்?

2019 இல், கார்ப்பரேட் வரியை குறைப்பதால் முதலீடுகள் அதிகரித்து வேலைவாய்ப்பு உருவா கும் எனக் கூறினர். அதன்படி, 30% ஆக இருந்த  கார்ப்பரேட் வரியை 22% ஆகக் குறைத்தனர்; புதிதாக உருவான நிறுவனங்களுக்கு 15% என நிர்ணயித்தனர். இதனால், ஆண்டுதோறும் ரூ1.44 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை; மாறாக, வேலைவாய்ப்பு இல்லாதோரின் விகிதம் 8.1% ஆக உயர்ந்துள்ளது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 2014 இல் ரூ. 60 இருந்து தற்போது ரூ. 86 ஆக வீழ்ச்சிய டைந்துள்ளது. இது இறக்குமதி செலவுகளை அதி கரித்து, வர்த்தகப் பற்றாக்குறையை ரூ.2,27,040 கோடி (264 பில்லியன் டாலர்) ஆக உயர்த்தி யுள்ளது. இந்த அனைத்து குறியீடுகளும், இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருப்பதையே காட்டுகின்றன.

ஆனால், ஒன்றிய அரசோ பொருளாதார வளர்ச்சி குறித்த வரையறைகளை மாற்றி, புள்ளி விவரங்களைத் திருத்தி, உண்மையை மறைக்கிறது. இது நாட்டின் பொருளாதார நலனுக்கு கேட்டையே விளைவிக்கும்