headlines

img

ஆணவத்தின் உச்சத்தில் அதானி

ஒவ்வொரு தாக்குதலும் எங்களை பலப்படுத்து கிறது. ஒவ்வொரு தடையும் எங்களுக்கு புதிய படிக்கல்” என்று வெட்கமின்றி பேசியுள்ளார் அதானி. அமெரிக்க நீதித்துறையே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இத்தகைய ஆணவப் பேச்சு, இந்திய ஆளும்  வர்க்கத்தின் பின்புலம் இல்லாமல் சாத்தியமில்லை. 

“நாங்கள் இதற்கு முன்பும் இது போன்ற சவால்களை சந்தித்துள்ளோம்” என்கிறார். ஆம், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான போதும், பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த போதும், மோடி அரசின் பாதுகாப்பில் தப்பித்து வந்துள்ளார்.  தற்போது தேசிய பங்குச் சந்தை யின் (NSE) F&O எனப்படும் ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் வெவ்வேறு உற்பத்தி அல்லது சேவைகளில் எதில் வேண்டுமானாலும் பங்கு  முதலீடு செய்து கொள்ளலாம் என்ற குறுக்கு  வழியில் அனுமதிக்கப்பட்டதன்  மூலம் ஒரே நாளில் ரூ.37,500 கோடி லாபம் அடித்துள்ளது அவ ரது குழுமம். அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் ரூ.13,650 கோடி இலாபம் பார்த்துள்ளது. குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.09 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. 

இது பங்கு சந்தை  ஒழுங்குமுறைகளின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. குற்றச்சாட்டுகள் இருந்தும் அரசு ஆதரவுடன் வணிக விரிவாக்கம் தொடர்கிறது. ஒழுங்குமுறை அமைப்புகளின் சுயேச்சைத்தன்மை கேள்விக்குறியாகிறது. அரசியல்-வணிக உறவுகளின் நெருக்கம் வெளிப்படையாக அம்பலமாகிறது. 

“சட்ட நடைமுறைகளின் மூலம் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவோம்”  என்கிறார் அதானி. ஆனால் உண்மையில்  இந்திய நீதித்துறை, ஒழுங்குமுறை ஆணை யங்கள் அனைத்தும் அவரது குழுமத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிப்பதே நடைமுறை யதார்த்தம். 

கென்யா அரசுடனான ரூ.5,840 கோடி ஒப்பந்தமும், அமெரிக்காவில் ரூ.4,800 கோடி பத்திர வெளியீடும் கைவிடப்பட்ட நிலையில், “வரும் பத்தாண்டுகளில் இன்னும் வலுவாக வளர்வோம்” என்கிறார். இது மோடி அரசின் கூட்டுக் கள வாணிக் கொள்கைகளால் மட்டுமே சாத்தியம். 

விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் என பொதுச்சொத்துக் கள் அனைத்தும் அதானி குழுமத்திடம் குவிந்து வருகின்றன. “எதிர்ப்புகள் எங்களை வலுப்படுத் தும்” என்ற அவரது இறுமாப்பு, ஜனநாயக விழு மியங்களை புறந்தள்ளும் முதலாளித்துவ வர்க்கத் தின் அராஜக போக்கை வெளிக்காட்டுகிறது. 

சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகள், தொழி லாளர்களின் வேலைவாய்ப்புகள், பொது மக்க ளின் வாழ்வாதாரம் என அனைத்தும் பாதிக்கப் படும் நிலையில், “சவால்கள் எங்களை மேலும் உறுதிப்படுத்தும்” என்பது, கார்ப்பரேட் சர்வாதிகா ரத்தின் வெளிப்பாடு.  உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க, இத்தகைய கொள்ளை முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவது காலத்தின் கட்டாயமாகிறது. “ஒவ்வொரு தடையும் படிக்கல்” என்று கூறும் அதானியின் ஆணவத்தை உடைக்க, தொழிலாளர் வர்க்கம்  ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.