headlines

img

பொதுத் தேர்வா? பூதத் தேர்வா?

பொதுத் தேர்வா? பூதத் தேர்வா?  - இரா.கோமதி, ஆசிரியை, அரசு தொடக்கப்பள்ளி, புதுச்சேரி

கல்வித்தரம் குறைந்துவிட்டது. அதை மீட்டு எடுத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு. ‘தரம்’ என்ற தாரகமந்திரத்தை நிலை நிறுத்த கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை பலப்படுத்துவது முறையா?  அல்லது பிஞ்சு குழந்தைகளுக்கு பூதத் தேர்வு வைத்து பூச்சாண்டி காட்டுவது முறையா?  தரமான கல்வி நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை தட்டிக் கழிக்கும் அரசின் பொறுப்பற்றத் தன்மையையே இப்பொதுத் தேர்வு வெளிப்படுத்துகிறது.    2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் (2009) இரண்டாவது சட்டத்திருத்தம் (2017)  5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இச்சட்ட திருத்த மசோதா கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இருந்து முரண்படுவதாக உள்ளது.  கஉச (சுவநு ஹஉவ) பிரிவு 30 (1) ன் படி எந்த ஒரு குழந்தையும் 8-ம் வகுப்பு வரை பொது தேர்வு எழுத தேவையில்லை என்று கூறுகிறது. 

பிரிவு 29 (2) மாணவர்களின் முழுமையான கற்றலை வலுப்படுத்தி அவர்களை பயம், பதற்றம், விரக்தி போன்ற உணர்வுகளில் இருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் விதமான கல்வித்திட்டம் மற்றும் மதிப்பிடல் முறையை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. பிரிவு 4, ‘வயதுக்கு ஏற்ற கல்வி’ இப்பிரிவின் படி 8ம் வகுப்பு வரை எந்த ஒரு முறையான பள்ளியிலும் சென்று கல்வி பயிலாத ஒரு குழந்தை பள்ளிக்கு வருமேயானால் அக்குழந்தையை அதன் வயதிற்கு ஏற்ற வகுப்பில் சேர்க்க வேண்டும்.  அக்குழந்தைக்கு  சிறப்பு பயிற்சி வகுப்புகள் கொடுத்து அந்த வகுப்பிற்கு தகுதியானவராக மாற்ற வேண்டும்.  ஆனால் புதிய பரிந்துரை 5 ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் குழந்தை மறுதேர்விற்கு உட்படுத்தப்படுவதும் அதிலும் தோற்கும் பட்சத்தில் மீண்டும் 5ம் வகுப்பிலேயே நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது அவ்வாறு செய்யும் போது கல்வி உரிமைச் சட்டத்தின் அனைத்து முக்கிய அம்சங்களும் அடிபட்டுப்போவதாகவே உள்ளன.  தேக்க நிலையின் காரணமாக வயதுக்கு ஏற்ற கல்வி பெற முடியாமல் போகிறது. தேர்வு பயம் தோல்வியின் காரணமாக குழந்தைகள் மனரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் தக்க வைத்தால் அவர்கள் படித்து விடுவார்கள் என்பது இதுவரை எந்த ஒரு ஆராய்ச்சியின் மூலமாகவும் நிரூபிக்கப்படாத கருத்தாகும் . இது வெறும் நம்பிக்கை மட்டுமே. இந்த மூடநம்பிக்கை கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக ‘இடைநிற்றலையே’ அதிகரிக்கும் அதிலும் குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் ஆகியோரின் ‘இடைநிற்றல் விகிதம்’ கண்டிப்பாக உயரும். இம்மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே பெரும்பாடு அவ்வாறு வந்த குழந்தைகளை ‘நீ கல்வியில் பின்தங்கிய மாணவர்,’ , ‘உனக்கு படிப்பு வராது’ என்பன போன்ற முத்திரைகள் குத்த அம்மாணவர்கள் ‘போதுமடா சாமி’ என்று ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்ட ஓடிவிடுவார்கள்.

மேலும் கல்வி உரிமை சட்டத்தின் முதுகெலும்பாக உள்ள ‘ குழந்தைகளை எந்த விதமான தொந்தரவுகளும் இல்லாமல், தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை எட்டு ஆண்டுகள் பள்ளியில் தக்க வைத்தல் என்ற கொள்கையை அசைத்து பார்ப்பதாக இந்த சட்ட திருத்த மசோதா உள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முழு தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டும் என்ற அழுத்தம் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீதும் செலுத்தப்படுகிறது. பள்ளியின் நற்பெயரை கருத்தில் கொண்டு நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று சில மாணவர்களை கழித்து கட்டுகிறது தனியார் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இருந்து விரட்டப்பட்டு அரசு பள்ளிகளுக்கு வருகின்றனர்  மாணவர்கள். ஆனால் இந்த தேர்ச்சி விழுக்காடு மற்றும் பள்ளியின் நன்மதிப்பு என்னும் கொடிய வியாதிகள் தற்போது அரசு பள்ளிகளையும் தொற்றிக்கொள்ள சத்தம் காட்டாமல் குழந்தைகளை ஒன்பதாம் வகுப்பில் களையெடுக்கும் வேலை ஒரு சில அரசு பள்ளிகளிலும் தொடங்கிவிட்டது. அக்குழந்தைகள் இடைநிற்றலுக்கு தள்ளப்படுகிறார்கள். இக்கொடுமையை இனி நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பிலேயே தொடங்கப் போகின்றன பள்ளிக்கூடங்கள்.

இரண்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை பார்த்து கேட்டேன், ‘உனக்கு நம் பள்ளியில் பிடிக்காத ஒரு விஷயம் என்ன?’ வென்று, கேட்ட மாத்திரத்தில் பதில் அளித்தாள் ‘டெஸ்ட்’ என்று இச்சம்பவம் புனைவல்ல முற்றிலும் உண்மை.  வாழ்வின் பாதியை கடந்துவிட்ட பெரியவர்களுக்கே தேர்வு என்றால் வயிற்றில் புளியை கறைப்பது இயல்புதானே அவ்வாறு இருக்க சின்னஞ்சிறு பிஞ்சுகளை , குழந்தைகளின் குழந்தை தன்மையை கொல்லும் இத் தேர்வு முறை தான் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற முடிவெடுத்த அரசின் தரம் தாமாக கேள்ளிக்கு உள்ளாக்கப்படுகிறது. 

“ஆம்! எனக்கு  படிக்க வரவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் இருக்க தகுதியில்லை என்றால், பின் நான் வேறு எங்கே செல்வது?” என்று கேட்டும் குழந்தையின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு நடத்தட்டும் இப்பொது தேர்வை.  கற்றல் அனைத்து புலன்கள் வாயிலாகவும் நிகழ்கிறது. அப்படி இருக்க கற்றல் அளவை சோதிக்க  மனப்பாட அறிவை மட்டும் சோதிப்பதாக இருப்பது முறையா ? மீன் குஞ்சுகளை மரம் ஏறச்சொன்னால் மாண்டுபோகாதா? இவ்வாறு கற்பவர்களின் பல்வேறு திறன்களையும் சோதிப்பதற்காக கொண்டு வரப்பட்டதே தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடாகும்.   ஆனால் இம்மதிப்பீட்டு முறையை தவறாக புரிந்து கொண்ட பள்ளிகள் இதனை ‘செயல்திட்டங்கள், ஒப்படைப்பு’ என்று சுருக்கிவிட்டன.கற்றல் கற்பித்தல் நடைபெரும் சமயத்திலேயே சரிசெய்திட வேண்டியதை ஆண்டு இறுதியில் சரிசெய்திட முடியுமா? 

1835 ல் ஆங்கில கல்வியை பரவலாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட மெக்காலே கல்விமுறையை பல ஆண்டுகளாக கண்மூடிதனமாக பின்பற்றி வந்த நமக்கு குழந்தைகளின் நலனிலும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கிலும் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் கசக்கவே செய்யும்.  இச்சட்டத் திருத்த மசோதாவிற்கு தில்லி உட்பட 18 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவர்கள் கூறுவதாவது ‘கட்டாய தேர்ச்சிக்குப்பிறகு மாணவர்களிடையே படிக்கத் தேவை இல்லை என்ற மனப்பான்மை வளர்ந்து விட்டது. இதனால் ஒன்பதாம் வகுப்பிற்கு வரும்போது எழுத படிக்க தெரியாமல் வந்து விடுகின்றனர். இம்மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வை சந்திக்கும் போது தோல்வி அடைகின்றனர். இதுவே 5 வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு வைக்கும் போது மாணவர்களிடையே தேர்வில் தோல்வி அடைவோம் என்ற பயம் இருக்கும் எனவே அக்கறையோடு படிப்பார்கள் என்பதாகும். 

தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கமும் ஆனால் கல்வியின் தரம் குறைய மாணவர்கள் மட்டும் தான் காரணம், பயம் இன்மை தான் காரணம் என்ற வாதங்கள் ஏற்புடையதா? ஒன்பதாம் வகுப்புவரை எழுதப்படிக்கத் தெரியாமல் மாணவர்களை வைத்திருந்த பாடத்திட்டம், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்விதுறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அரசுகள் என அனைவரும் இத்தவறில் பங்கு கொண்டவர்கள் இல்லையா? தவறு அனைவரும் சேர்ந்து செய்துவிட்டு தண்டனையை மட்டும் குழந்தைகளுக்கு கொடுப்பதா?

பல நாட்டில்  குழந்தைகள் தொடக்கக் கல்வியில் தேர்வையே சந்திப்பது இல்லை. ஆனால் நம் நாட்டிலோ தேர்வும் மதிப்பெண்ணும் மட்டுமே இன்னமும்  தரத்தை நிர்ணயிக்கின்றன. கல்வி உரிமைச் சட்டம் கட்டாய தேர்ச்சி முறையை கொண்டு வந்தது. அதற்கு அடுத்த படியாக கல்வியாளர்களாகிய நாங்கள் ‘தேர்வே இல்லாத கல்விமுறையை’ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அரசோ மீண்டும் நம் குழந்தைகளை 30, 40 ஆண்டு காலங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்ல முயல்கிறது. கல்விமுறை பின்னோக்கி செல்ல நாட்டின் வளர்ச்சியும் பின்னோக்கியே செல்லும் என்பதை மறக்க வேண்டாம். 

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளையும், தேர்வில் தோல்வி அடையும் குழந்தைகளையும் அவர்கள் தம் பெற்றோர்களையும் புழுக்களாக கருதி ஒதுக்கி வைக்கும் சமூகத்தில் தான் நாம் இன்னமும் வாழ்ந்துகொண்டுள்ளோம். 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதற்கு என்ன காரணம்?   அடித்தால் படித்துவிடுவார்கள், தோல்வி பயத்தால் படித்துவிடுவார்கள் என்று பழமைவாதம் பேசுவதை விடுத்து மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கும் கரம் தந்து அவர்களையும் மேலே கொண்டுவர என்ன வழிவகை செய்யலாம் என்பதைப்பற்றி யோசித்தால் முன்னேற்றத்தை கொடுக்கும். 

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பற்றிய சரியான மற்றும் முழுமையான புரிதலை ஆசிரியர்களுக்கு அளித்தல், இவை  இரண்டும் சரியாக நடைபெறுகிறதா என்பதை முறையாக மேற்பார்வையிடல், கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்,மிகமுக்கியமாக ஒரு வகுப்பிற்கு ஓர் ஆசிரியரை  நியமித்தல்,  பழையனவற்றை கழிதல், புதியனவற்றை புகுத்தல் போன்றவற்றின் மூலமாக அரசாங்கம் கல்வித் தரத்தை கொண்டுவர வேண்டுமே ஒழிய தரத்தை தாங்கிப்பிடிக்க ‘பொதுத்தேர்வு’ என்றுமே ஒரு தீர்வாகாது என்பதை அரசாங்கம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

;