headlines

img

வேண்டுகை... - ஜனநேசன்

சிறுகதை

அந்த பேருந்து இராமேஸ்வரத்தி லிருந்து திருச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. இவர் காரைக்குடியில் ஏறினார். பின்வரிசைக்கு முந்தின மூன்று சீட்டில் மூன்றாவது இடம் இவருக்கு கிடைத்தது. ஜன்னல் இருக்கை கிடைத்திருந்தால் சாலையை வேடிக்கைப் பார்த்தபடி பயணிக்கலாம். இந்த இருக்கையிலிருந்து பேருந்துக்குள் நடப்பதைத்தான் பார்க்க முடியும்.  அது மாலை வேளை. வேலைக்குப் போய் திரும்பியவர்களின் அலுத்து சோர்ந்த முகங்கள்; பள்ளி, கல்லூரிக்குச் சென்று வாடிய செடிகளைப் போன்ற இளம் பெண்கள் என உட்கார இடமில்லாமல் பலர் நின்றிருந்தனர். இச்சூழல் நெருக்கமும் கிறக்கமும் கவியும் அந்தி இருட்டுக்கு ஒத்திசைத்தது. இதை உணர்ந்தோ என்னவோ ஓட்டுநர் உள்விளக்குகளை ஒளிரவிட்டார். வாடலுக்கு ஒளி கூட்டியது போலிருந்தது.  பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்தையும் கடக்க கடக்க நின்றிருந்தோர் பலர் இறங்கவும் சிலர் ஏறவுமாக இருந்தனர். மனிதத்திரைகளாக மறைத்து நின்றிருந்தவர்கள் அகன்றுவிட்டனர். இப்போது பேருந்தில் உட்கார்ந்திருந்தோர்  அனைவரும் தெரிந்தனர்.

இவருக்கு முன்னால் இடப்பக்க இருவர் இருக்கையில் ஓர் இளம் ஜோடி அமர்ந்திருந்தது. இருபது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இளம்பெண்  இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞரின் மடியில் படுத்திருந்தாள். அவளது காதருகே அவன் எதோ கிசுகிசுத்தான். அவள் திடீரென்று எழுந்து அவனது முகவாய் கட்டையின் இளந்தாடியை தடவினாள். அவளது பார்வையில் பயமும் ஏக்கமும் கலந்திருந்தது. எதோ கிசுகிசுத்தாள். அவன்  அவளை நெஞ்சோடு அணைத்து என்னவோ மெல்ல பேசினான். அவனது கண்ணில் நீர் துளிர்த்தது. அவளது கன்னத்திலும் நீர்த்தாரை நத்தையின் தடம் போல் மினுமினுத்தது.  இவரது இருக்கைக்கு முந்திய இருக்கையில் இருந்த நடுத்தர வயது பெண் முணு முணுத்தாள் ‘‘சீ, கண்ட்ராவி படுக்கையில் நடக்க வேண்டியதெல்லாம்  பஸ்ஸில் நடக்குது. பொது இடமுன்னு இந்தக் கழுதைகளுக்கு கூச்ச நாச்சமில்லை. எவரும் கேள்வி கேப்பாரு இல்லை!” “சின்னஞ்சிறுசுக இருந்துட்டுப் போகட்டும்! அவுங்களுக்கு வீட்டில் என்னென்ன பிரச்சனையோ, இங்கன பஸ்ஸில் வந்து  ஒதுங்கிருக்குக.” என்றாள் இன்னொரு நடத்தர வயது பெண்! ஒரு பெரியவர்: “அப்பன் ஆத்தா என்ன பாடுபட்டு இவுகளை படிக்க அனுப்புனா  இதுகளுக்கு போற இடமெல்லாம் படுக்கை கேட்குது. தூத்தெறி. கண்டக்டரே, இதை கண்டிக்கிறதில்லையா”என்று புலம்பினார். நடத்துனர் வண்டியில் இருக்கும் பயணிகளை எண்ணி தனது  கணிப்பானோடு ஒத்துப்பார்த்துக் கொண்டிருந்தார். கடைசி வரிசை இளைஞர் ஒருவர், ‘‘பெரிசு.இந்த பஸ்ஸில் டிவி இல்லை. அதனால இலவசக் காட்சி நடந்துகிட்டு ‌இருக்கு.இஸ்டமுன்னா பாரும். இல்லாட்டி கண்ணை மூடிக்குரும்”என்று கிண்டலடித்தார். இன்னொரு வயசாளி, ‘‘ஏய்யா பஸ்குள்ளாற பாம்புக புனையல் போட்டது மாதிரி இழைஞ்சுகிட்டு இருக்குக. அவுகளை இறக்கி விடுமய்யா!” என்று கத்தினார்.

அந்த ஜோடி  தம்மைச் சுற்றி நடப்பது எதையும் கண்டு கொள்ளாமல் உணர்ச்சியில் உருகியும் அணைப்பில் இறுகியும், சோகப் பெருமூச்சில் முகங்கருகியும் இருந்தனர். அவர்களின் முகத்தில் பசியின் களைப்பு   இருந்தது. கையிலிருந்த பிஸ்கட்டுகளை  ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர்  செல்லை மினுக்கி நேரத்தை உணர்ந்து ஒருவருக்கொருவர் பார்வையால் பல விஷயங்களை பரிமாறிக் கொள்வது போல் தென்பட்டனர். நடத்துநர், அந்தப் பெரியவரிடம் வந்து ‘‘பெரியவரே, இதுமாதிரி நித்தம் பத்து பன்னெண்டு ஜோடிகளைப் பார்க்கிறோம். இதைக் கண்டுகிட்டா நா எப்படி‌ டிக்கட் போடறது? அதுவுமில்லாமல் நா எதுவோ சொல்லப் போயி, அவமானப் படுத்திட்டேன்னு பழி போட்டுட்டு அதுக எதாவது செஞ்சுகிச்சுதுன்னா என் பொழப்பு என்ன ஆகிறது? எங்குடும்ப பொழைப்புக்கு என்ன வழி? பஸ்ஸில் நடக்கிறதை வேடிக்கை பார்க்க இஷ்டமில் லைன்னா கண்ணை மூடிகிட்டு வாங்க!”என்று பொரிந்தார். பேருந்து புதுக்கோட்டையில் ஆள் இறக்கம் ஏற்றம் பார்த்து நகர்ந்தது. நடத்துநர் டிக்கட் போடுவதில் மும்முரமாயிருந்தார்.அந்த இளஞ்ஜோடி உட்கார்ந்திருந்த இருக்கைக்கு முன் இருக்கை காலியானது.அந்த இடத்தில் புதுக்கோட்டையில் ஏறிய முப்பது வயது வாலிபன் ஒருவன் வந்தமர்ந்தான். அவன் பின்னால் சாய்ந்து தூங்குவது போலிருந்தான். அவனது காதுகள் மட்டும் விடைத்து அந்த இளசுகள் கிசுகிசுப்பதை கவனித்தன. அவர் சிறிது நேரத்தில் உலுக்கி விழுந்தது போல் விழித்து அந்த இளசுகளை நோக்கி “நீங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடி வருகிறீர்களா” என்று கேட்டான். இளைஞன் திகைத்து தயங்கியபடி  அந்த வாலிபனை  உற்று பார்த்தான். இளைஞனது இமைகள் அச்சத்தில் துடித்தன. அவனது மடியில் படுத்திருந்த பெண் திடுக்கிட்டு எழுந்து திகிலோடு அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். பஸ்ஸிலிருந்தவர்கள் எதோ நடக்கப்போகிறது என்று அதிர்ச்சியோடு  பார்த்தார்கள்.

வாலிபன்  சற்று குரலை மென்மையாக்கி ‘‘பயப்படா தீங்க. நானும் உங்களைப் போல ஊரைவிட்டு ஓடிவந்து அவஸ்தை பட்டவன்தான். உங்களுக்கு உதவி செய்யவே கேட்கிறேன். நீங்க எந்த ஊரு. எத்தனை மணிக்கு புறப்பட்டவங்க.இரண்டு பேரும் வெவ்வேறு சாதியா? என்றெல்லாம்  கேட்டான். இளைஞன் அந்த‌ வாலிபனுக்கு மட்டுமே கேட்கும் ஒலியில் ‘கண்ணை மூடித்திறந்தா சுற்றிலும் சொந்தக்காரங்க வீச்சரிவாள்களோடு நிக்கிறமாதிரி தெரியுது’ன்னு பயப்படறா என்று  தொடங்கி இரண்டு வாக்கியத்தில் பூர்வகதையை சொன்னான்.  “கவலைப் படாதீங்க. துணிஞ்சு  கிளம்பிட்டீங்க. இனி பயப்பட்டா  காரியம் ஆகாது. நீங்க புறப்பட்ட நேரத்தை  பார்த்தா அவுங்க உங்களுக்கு முன்னே பைபாஸில் வந்து திருச்சி பஸ் ஸ்டாண்டைச் சுற்றி  நாலாப்பக்கமும் தேடிக்கிட்டு இருப்பாங்க! நீங்க  திருச்சி போலீஸில் சரண்டாராகும் திட்டத்தைக் கைவிடுங்க! அதுவே எனக்கானது மாதிரி உங்களுக்கும்  பாதகமா முடியலாம். நீங்க ரெண்டு பேரும் உயிர் பிழைக்கணு முன்னா  திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு போகாமலே  இந்த அவுட்டர்ல வர்ற சென்னை பஸ்ஸை பிடிச்சு தப்பிச்சிடுங்க.சென்னை போலீஸ் கமிஷனர் கிட்ட சரண்டராகிருங்க. நீங்க ரெண்டு பேரும் அடல்ட்ங்கிற தால போலீஸ்  உங்களைக் காப்பாத்த வாய்ப்பிருக்கு!” அந்த  வாலிபன் சொல்லச் சொல்ல அவர்கள் உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டே மலங்க மலங்க விழித்தார்கள். இவருக்கு முன் சீட்டில் முனங்கிய வயதான பெண்கள் பரிதாபம் தொனிக்க ‘உச்’ கொட்டினார்கள். அவள் அவனது முகவாய் கட்டையைப் பிடித்து கெஞ்சியதும், அவன் அவளை அணைத்துக் கொண்டதும் உயிர் பயத்தினாலதானா என்று அங்கலாய்த்தார்கள்.

வாலிபன் கேட்டான், ‘‘சென்னைக்குப் போக பணமிருக்கா?’’ இளைஞன்  தனது பாக்கட்டைத் தடவினான். வாலிபன்  தனது பர்ஸிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்களை தந்தான். இவர் ஐநூறு ரூபாய் தந்தார். அந்த இரு வயதான பெண்கள் ஆளுக்கு ‌நூறூ ருபாய் கொடுத்தனர். பின் சீட்டில்  இருந்து கேலி பேசிய பெரியவர்கள்  ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தனர்.  அந்த வாலிபன் நடத்துநர் மூலமாக ஓட்டுநரிடம் சொல்லி திருச்சியிலிருந்து  புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லும் விரைவு பேருந்தை நிறுத்தச் செய்து வாழ்த்து கூறி இளம்ஜோடிகளை   ஏற்றி விட்டனர். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கும் காதலர்கள் கொல்லப்படுவது போல் இந்த ஜோடி கொல்லப்படக் கூடாது. இவர்களுக்கு எந்தக் கெடுதலும் வரக்கூடாது என்று பெண்கள் வேண்டிக் கொண்டனர்.நிலவை மறைத்தும் விலகியும் நகரும் மேகங்கள்‌ போல பயணிகள் மனதில் இந்த இளம்ஜோடியைக் குறித்த சிந்தனை  அச்சமும் ஆறுதலுமாய்த் தோன்றியது. இந்த பேருந்து பதற்றமில்லாமல்  திருச்சிக்குள் சென்றது.

;