headlines

img

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்!

தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் எனத்  தமிழக பாஜக 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அதன் தலைவர் அண்ணாமலை அறி வித்திருக்கிறார். இந்த அறிவிப்பைப் பார்த்த வுடன்  ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் கூவிக் கூவி அழுகிறதாம்’ என்ற கிராமத்துப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. 

2014-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து 12 முறை பெட்ரோல்-டீசல் மீதான வரியை மோடி அரசு  உயர்த்தியிருக்கிறது. அதாவது பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் வரியை உயர்த்தியிருக்கிறது.  சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப விலை உயர்வது  தனி.  12 முறை வரிமேல் வரி விதித்தி ருப்பது ஒன்றிய  மோடி அரசுதான். அதுமட்டு மல்ல,  நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி என விடாமல் விரட்டி ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மக்களை வதைக்கிறது. 

ஜிஎஸ்டி வரி நிலுவையை மாநிலங்களுக்கு உரிய காலத்தில் வழங்காமல் இழுத்தடிக்கிறது. மாநில அரசுகள் கடன் வாங்கி நிலைமையை சமா ளித்துக் கொள்ளுமாறும், அதற்கு நிபந்தனையாக அனைத்துத்துறைகளிலும் தனியார்மயத்தை ஏற்க வேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கிறது. இந்த நிலையில் மாநில அரசு வரியைக் குறைக்க வேண்டும் என பாஜக போராடுவது கேலிக்கூத்து. 

பல்வேறு வரிகள் மூலம் மக்களை வஞ்சித்து வரும் பாஜகவிற்கு இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம், மேற்கு வங்கம், மகா ராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்த லில்  மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்திருக்கின்றனர். அந்த தோல்வியே பெட்ரோல், டீசல் விலையை மிகச்சிறிய அளவில் ஒன்றிய அரசைக் குறைக்கச் செய்திருக்கிறது. 

ஆனால் அதிலும் ஏமாற்று வேலைதான்,  அடிப்படையாக இருக்கும் கலால் வரியை ஒரு பைசா கூட குறைக்கவில்லை. மாறாகச் சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேல்வரியாக  இதுவரை விதிக்கப்பட்ட ரூ.18ல் பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம்  மட்டுமே குறைத்திருக்கிறது. ஒன்றிய அரசு இதுவரை கூட்டிய வரியை மட்டும் குறைத்தாலே, பெட்ரோல் லிட்டர் ரூ. 65க்கும், டீசல்  ரூ.55க்கும் கிடைக்கும்.  தமிழக பாஜக, பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளை யும் ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என ஏன் கோரவில்லை? 

ஒன்றிய அரசு கடந்தாண்டு சிறப்பு எக்சைஸ், செஸ், சர்ச்சார்ஜ் எனப் பல  பெயர்களில் பெட்ரோ லியப் பொருட்கள்  மீது விதிக்கப்பட்ட வரியின் மூலம் மட்டும்  ரூ.3.35 லட்சம் கோடியைச் சுருட்டியது. ஆனால் அதில் வெறும் 5.8 விழுக்காடு மட்டுமே மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொண்டது. மீதமுள்ள ரூ.2.87 லட்சம் கோடியை ஒன்றிய அரசு அப்படியே விழுங்கியது. அந்த தொகை என்ன ஆனது எனத் தமிழக பாஜக ஒன்றிய அரசிடம் கேட்குமா?  

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் ஒன்றிய பாஜக கூட்டணி அரசுதான் என்பதை  இந்திய மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கி றார்கள். பாஜகவின் போராட்ட நாடகத்தை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி.