headlines

img

யாருக்காகப் பேசுகிறார் பிரதமர் மோடி?

சேமிப்பாளர்களின் பாதுகாப்பே வங்கி களின் பாதுகாப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி உபதேசம் செய்துள்ளார். “சேமிப்பாளர்களு க்கு முன்னுரிமை” உறுதியளிக்கப்பட்ட வைப்புத் தொகை ரூ.5 லட்சம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் பிரச்சனைகள் மோசமடைவதற்கு முன்பாகவே உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் பொதுத்துறை வங்கிக ளின் பணத்தை கபளீகரம் செய்துவிட்டு வெளி நாட்டுக்கு தப்பிச் செல்வது அதிகரித்துள்ளது. அவர்களில் ஒருவரைக் கூட மோடி ஆட்சி இது வரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தவில்லை. விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி, மஞ்சித் சிங் மக்னி என பல்லாயி ரம் கோடி பணத்தை சுருட்டி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் வெளிநாடுகளில் சுகபோக மாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மோடி அர சும் இவர்களை பிடித்து வரப்போவதாக கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், சிறு. குறு முதலீட்டாளர்கள், கடன் கிடைக்காமலும், கடன் கிடைத்தாலும் திரும்ப கட்ட முடியாமலும் திணறிக் கொண்டிருக்கின்றனர். 

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லை யென்றால் அதற்கு அபராதம் விதிப்பதும் அந்த  அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி போடுவதும் மோடி  அரசு கண்டுபிடித்த புதிய நடைமுறையாகும். 

‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற பெயரில் அனைத்து மானியங்களையும் வங்கியில் செலுத்துவதாகக்கூறி ஜன்தன் கணக்குகளை துவக்குமாறு கூறியது மோடி அரசு. ஆனால் அப்படி துவக்கப்பட்ட வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறி கிடைக்கும் சொற்ப  மானியத்தையும் பறித்துக் கொள்வதும், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தொகைகளை சூறையாடு வதும் மோடி அரசு கண்டுபிடித்த நவீன உத்தி களாகும். 

பொதுத்துறை வங்கிகளை கொஞ்சம் கொஞ்ச மாக நலிவடையச் செய்து தனியார் வங்கிகளை கொழுக்க வைப்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம். பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலமும், வங்கிகள் இணைப்பு என்ற பெயரில் எளிய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் வங்கிச் சேவையை கிடைக்கவிடாமல் செய்வதும்தான் ஒன்றிய அரசின் நோக்கமாக உள்ளது. 

இந்த லட்சணத்தில் தம்முடைய அரசு மேற் கொண்ட சீர்திருத்தம் காரணமாக நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் எளிதாக பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது என்று பிரதமர் மோடி புளகாங்கிதம் அடைந்துள்ளார். இதனால் பலன் பெறுவது பணம் இருப்பவர்கள்தான். ஏழை, எளிய மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாமல் மனபுழுக்கத்தில் உழல்கின்றனர்.சேமிப்பாளர்க ளின் பாதுகாப்பை பற்றிப் பேசும் பிரதமர் மோடி வங்கிச் சேவையை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் கைமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

 

;