headlines

img

கொத்துக் குண்டுகளின் ராஜ்ஜியம்

உக்ரைன் போர் துவங்கி ஜூலை 8 அன்றுடன் 500 நாட்கள் நிறைவடைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டிருக்கும் மிகச்சிறிய ராணு வத்தைக் கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, தொடர்ந்து துணிச்சலுடன் போரிடுவோம் என்று கூறியிருக்கிறார். அந்தத் துணிச்சலை அவருக்கு கொடுத்திருப்பது இரண்டு விசயங்கள். ஒன்று, எக்காரணம் கொண்டும் ஜெலன்ஸ்கியை கொல்லமாட்டோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தம்மை சந்திக்க வந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமரிடம் கூறியிருக்கிறார்; இந்தத் தகவல்  ஜெலன்ஸ்கியை எட்டியிருக்கிறது. மற்றொன்று, அநேகமாக உலகின் அனைத்து நாடுகளாலும் தடைவிதிக்கப்பட்டுள்ள ‘கொத்துக் குண்டு’ வகைகளை உக்ரைனுக்கு வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்திருப்பது ஆகும். 

கொத்துக் குண்டு என்பது, போர் விமானங்களிலிருந்து வீசப்படும் போது ஒரே  குண்டிலிருந்து பல நூறு குண்டுகள் பிரிந்து மிகக்கொடூரமான தாக்குதலை நடத்தும் வகை குண்டுகளாகும். இத்தகைய கொடிய வகை குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்புவது, இந்தப் போரை எந்தவகையிலும் நிறுத்துவதற்கோ, சேதங்களை கட்டுப்படுத்துவதற்கோ உதவாது என்று உலக அளவில் கண்டனம்எழுந்துள்ளது. 

வரலாறு நெடுகிலும் கொத்துக் குண்டுகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் மிக அதிக  அளவில் பயன்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு லாவோஸைக் குறிப்பிடலாம். வியட்நாம் மீதான அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தம்  நடந்த சமயத்தில், வியட்நாமியத் தலைவர் ஹோ சி மின், தனது தோழர்களையும் மக்களையும் லாவோஸ் மற்றும் கம்போடியா வழியாகத் தப்பிக்கச் செய்து, மீண்டும் பலம்பெற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்கூட்டியே லாவோஸ் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா. வடக்கு லாவோஸ் மீது மிகக்கொடூரமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது. அந்தப் பிரதேசம் லாவோஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாக அந்தப்  பகுதியில் 27 கோடி கிளஸ்டர் வகை என்று சொல்லப்படும் கொத்துக் குண்டுகளை வீசின  அமெரிக்க விமானப்படைகள். 1964 முதல் 1973 வரை 24 மணி நேரமும், ஒவ்வொரு 8 நிமி டத்திற்கு ஒருமுறை லாவோஸ் மீது கொத்துக் குண்டுகளை வீசி சல்லடையாகத் துளைத்தது அமெரிக்கா. இந்தக் குண்டுகளின் மொத்த எடை 2 கோடி டன் என கணக்கிடப்பட்டுள்ளது.

எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள். அன்று வெடிக்காத 30 சதவீத குண்டுகள் இப்போதும் லாவோஸில் வெடித்துக் கொண்டுள்ளன. மீண்டும் ஒரு லாவோஸை உக்ரைன் - ரஷ்யா  எல்லையில் உருவாக்க முனைகிறது அமெரிக்க  ஏகாதிபத்தியம். எதிர்த்து குரல் கொடுக்கட்டும் சர்வதேச சமூகம்.