headlines

img

இந்தி திணிப்புக்கு  எல்லையே இல்லையா?

மத்திய ரிசர்வ் படையின் குரூப் பி மற்றும் சி பிரிவு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மையங்களில் ஒரு இடம் கூட தமிழகம் மற்றும்புதுவையில் இல்லாதது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்தியஉள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய் அனுப்பியிருந்த பதில் கடிதம் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. 

இதன்மூலம் சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்றும் பதிலின் ஆங்கில வடிவத்தைக் கூட தமிழக எம்.பி.க்களுக்கு அனுப்புவதில்லை என்றும் தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் மட்டுமே கடிதம்எழுதும் நடைமுறை அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியிருக்கிற உரிமைகளுக்கும் 1963 அலுவல் மொழி சட்டத்திற்கும் எதிரானது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 

அலுவல் மொழிச் சட்டம் 3 (5) மத்திய அரசின்அலுவல் தேவைகளுக்கும், நாடாளுமன்றத்தின் பயன்பாடுகளுக்கும் ஆங்கிலம் தொடர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மத்திய அரசிடமிருந்து உரிய பதில் இல்லாத நிலையில், உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது இந்தியில் கடிதம் எழுதியிருப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  பல மொழிகளைக் கொண்ட நம் நாட்டில் இதுபோன்ற மொழிப்பிரச்சனை தொடரக்கூடாது என்று வழக்குவிசாரணையின்போது நீதிபதிகள் மத்தியஅரசுக்கு குட்டு வைத்துள்ளனர்.  விசாரணைவருகிற 18ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இது தனித்த ஒரு சம்பவம் அல்ல. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சு.வெங்கடேசன் நீதிமன்றம் சென்றதால் மத்திய அமைச்சர்மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் இந்தி மற்றும் சமஸ்கிருதமயமாக்கி வருவதன் தொடர்ச்சியே ஆகும் இது. பொதுமக்கள் கேஸ் பதியும்போது இந்தியில் தகவல்கள் வருவதாகவும், ஏடிஎம் மையங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி மட்டுமே பயன்பாட்டு மொழியாக மாறி வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும்என்ற உறுதிமொழி கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிடப்படுகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருதம் வம்படியாக அனைத்து மக்களின்மீதும் திணிக்கப்படுகிறது. நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருப்பது போல பல மொழிகளை பேசும் நாடு தான் இந்தியா. இதுதான் இந்தியாவின் தனித்த சிறப்புகளில் ஒன்று ஆகும். இந்த பன்முகத் தன்மையை பாதுகாக்காமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமான ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்கிற திசையில் மத்திய அரசு சிந்திக்குமானால் அது நாட்டுக்குச் செய்கிற மிகப்பெரிய கேடாகும்.