headlines

img

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசும் பாஜக

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் என்ற  பெயரில் இனிப்பு விஷத்தை செலுத்துகிறார்கள் என்று மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசை சாடினார். ஆனால் ம.பி. தேர்தலுக்கு பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.450க்கு எரிவாயு சிலிண்டர்  என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதி களை அள்ளி வீசியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் தற்போது பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி என்று மோடி அடிக்கடி கூறுவார். இந்த இரட்டை இன்ஜின் ஆட்சியில் தான் எரிவாயு  சிலிண்டர் விலை 1200 ரூபாயை தொட்டது. அதில் 200ரூபாயை மட்டும் ஒன்றிய அரசு குறைத்தது. இது கூட ஐந்து மாநில தேர்தலுக்காகவும் வர விருக்கும் மக்களவை தேர்தலுக்காகவும் குறைக் கப்பட்ட ஒன்றுதான். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலை ஏழை மக்க ளால் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்கு சென்று விடும். அதுமட்டுமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தையும் ஒரேடியாக ஒழித்துக் கட்டிவிடுவார்கள்.

ஆனால் எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக பொய்யை வலையாய் பின்னி மக்கள் மீது வீசுகிறது பாஜக. அதுமட்டுமல்ல, ஏழை எளிய மாணவர்களுக்கு  இலவசக் கல்வி, கோதுமை, நெல்லுக்கு குறைந்த பட்ச விலை, பழங்குடி மக்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி என்றெல்லாம் பாஜக தேர்தல் அறிக்கை பசுப்புகிறது. அந்தக் கட்சி ஆட்சி தான் ம.பி.யில் நடக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்தியிருக்கலாமே. யார் தடுத்தது? 

2014 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளை பொருளு க்கு உற்பத்திச்  செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை எடுத்து ஒவ்வொருவர் வங்கிக் கணக் கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றெல்லாம் சொன்னது பாஜக.

அதே பாணியைத்தான் இப்போது ம.பி.யில் பின்பற்றுகிறார்கள். அம்பானி, அதானி போன்ற  கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க வைப்பது ஒன்றே பாஜகவின் திட்டம். மறுபுறத்தில் மக்கள் ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தை கெடுப்பது சிறுபான்மை மக்களை வேட்டையாடுவது, பட்டி யலின, பழங்குடி மக்களை வஞ்சிப்பது என்பது தான் பாஜகவின் செயல்திட்டம். ம.பி.யில் பாஜக வை விரட்டும் தோல்வி பயத்தால் கடைசிக் கட்ட முயற்சியாக பொய்யை விதைக்கிறார்கள். ஆனால் மக்கள் தங்கள் அனுபவத்திலி ருந்து முடிவு செய்வார்கள். பாஜகவை துடைத் தெறிவார்கள்.