பாஜக ஆட்சி மத்தியில் ஏற்பட்ட பிறகு அரசின் உயர்மட்ட அதிகாரிகள், நீதிபதிகள் பலரும் ஆட்சியாளர்களின் குரலான இந்துத்துவா அரசியல் கொள்கைகளை எதி ரொலிக்கும் வகையில் பேசுவதும் செயல்படு வதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
வெளியுறவுத்துறையில் அதிகாரியாக செயல்பட்ட ஜெய்சங்கர் தற்போது ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவு துறை அமைச்ச ராக செயல்படுகிறார். அவர் ஏற்கெனவே பாஜகவுக்கு, அதன் அரசியல் கொள்கை களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்கான பரிசாகவே இப்போது அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் பலரும் உள்ளனர்.
பாபர் மசூதி வழக்கில் அரசுக்கு, பாஜகவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதற்காக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பின ராக்கப்பட்டார். இதுபோல் பல்வேறு நிய மனங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் நடை பெற்றுள்ளன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் முதல் சிபிஐ இயக்குநர்கள் வரை பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்படும் அஜீத் தோவல் புதுதில்லியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினை வுக் கருத்தரங்கில் பேசும்போது பாஜகவின் குரலை எதிரொலித்திருக்கிறார். நேதாஜி இருந்திருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது. நேதாஜியின் கருத்தை மட்டுமே எடுத்துக் கொள்வேன் என முகமது அலி ஜின்னாவே கூறியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார்.
அதாவது நாட்டின் பிரிவினைக்கு காரணம் ஆர்எஸ்எஸ்தான் என்பதை மறைப்பதற்கான வேலையில் அஜீத் தோவல் ஈடுபடுகிறார். உண்மையில் முகமது அலி ஜின்னாவுக்கு முன்பே இந்து மகாசபையும் ஆர்எஸ்எஸ்சும் தான் மதரீதியிலான நாட்டின் பிரிவினையை முன் வைத்தன என்பதை வசதியாக மறைத்துவிடு கிறார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற் காக பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து உறுதி யுடன் போரிட நேதாஜி தயாராக இருந்தார் என்றும் அத்துடன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்றும் அஜீத் தோவல் கூறியிருப்பது உண்மை தான். ஆனால் ஆர்எஸ்எஸ்-சும் இந்துமகா சபையும் பிரிட்டிஷாருக்கு சேவகம் செய்தும், சுதந்திரப் போராட்டத்தை காட்டிக்கொடுத்தும் அல்லவா செயல்பட்டது.
நேதாஜிக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்தாலும் அவர் மதச்சார்பற்ற தன்மையை தொடர்ந்து கடைப்பிடித்தார் என்று கூறும் அஜீத் தோவல் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து என்ன சொல்வார்? அவரது பேச்சும் செயல்பாடும் நாளைய பலனை எதிர்பார்த்த முன்கூட்டிய நடவடிக்கைகளோ?