headlines

img

இதுதான் சிறந்த நிர்வாகமா?

சுதந்திரம் பெற்றதன் 75ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒன்றிய அரசு சிறந்த நிர்வாக வாரவிழாவை நடத்துவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்த ஒன்றிய அரசு உறுதி பூண்டிருப்பதாகக் கூறியுள்ளார். 

அரசின் சேவைகளை வழங்குவதில் வெளிப் படைத் தன்மையை ஏற்படுத்துவது, அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வது ஆகியவற்றை நோக்கி நாடு முன்னேறி வருகிறது என்று கூறியுள்ளார். 

பிரதமர் மோடியை பொறுத்தவரை சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே தன்னுடைய பாணியாகக் கொண்டுள்ளார். உதாரணமாக கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவத் துவங்கியதை தொடர்ந்து பிஎம்கேர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசு ஊழியர்கள் ஊதியம் நிர்ப்பந்தமாக இந்த திட்டத்திற்கு வசூலிக்கப்பட்டது. ஏராளமான தனி யார் நிறுவனங்களிடமும் வசூல் நடைபெற்றது. ஆனால் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது ஒன்றிய அரசுக்கும் இந்தத் திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டது.

இந்தத் திட்டம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்றும்,ஒன்றிய அரசின் தணிக்கைக்கு உட்பட்டது அல்ல என்றும் கூறப் பட்டது. இதன் வரவு -செலவு பரம ரகசியமாகவே உள்ளது. இதுதான் வெளிப்படையான நிர்வா கத்தின் லட்சணமா? 

அடுத்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற  ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. கொரோனா கொடுங்காலத்திலும் கூட கார்ப்பரேட் முதலாளி கள் கருவூலம் நிமிடத்திற்கு நிமிடம் நிரம்பிக் கொண்டேயிருக்கிறது.

இந்தியாவின் முதல் 10 சதவீத மக்கள் மற்றும் அடிமட்டத்தில் உள்ள மக்கள் பிரிவினரில் வரு மான இடைவெளி 22 மடங்காக உள்ளது. ஒட்டு மொத்த சொத்து வளத்தில் ஒரு சதவீதத்தினரி டம் 33 சதவீத வளமும், அடித்தளத்தில் உள்ள  மக்களிடம் வெறும் 5.9 சதவீத வளமுமே உள்ளன.  இதுதான் மோடி ஆட்சியில் நிகழ்ந்துள்ள அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இதை மேலும் உறுதி செய்வதற்காகவே தாம் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பதாக மோடி அளந்து விட்டிருக்கிறார்.

ஒன்றிய அரசின் பணியிடங்கள் பெரும்பா லும் நிரப்பப்படவே இல்லை, நிரப்பப்படும் இடங்க ளும் ஒப்பந்த அடிப்படையிலேயே நிரப்பப்படு கின்றன. பல அரசுத்துறைகள், பொதுத்துறை நிறு வனங்கள் ஒழித்துக் கட்டப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அரசு நிர்வாகத் தையே கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட்டுக ளுக்கு கைமாற்றி விடும் ஒன்றிய அரசு சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்தப் போவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது. சிறந்த நிர்வாகத்தின் பண்பு களில் ஒன்று வெளிப்படைத்தன்மை. அது இப்போதைய ஒன்றிய அரசிடம் மருந்துக்குக் கூட இல்லை.

;