headlines

img

உச்சநீதிமன்றம்: முரண்பாடான போக்குகள்

நாட்டிலுள்ள நீதித்துறையின் உயர்ந்த அமைப்பான உச்சநீதிமன்றத்தில், ஒரு வாரத்தில் பகரப்பட்ட இரு தீர்ப்புகள், அங்கே  காணப்படும் முரண்பட்ட இருவிதமான போக்கு களை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆல்ட் நியூஸ் இதழாளர் முகமது ஜூபைர் என்பவருக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு  முதல் தகவல் அறிக்கைகள் தொடர்பாக விசார ணை மேற்கொண்ட நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகிய மூவரடங்கிய அமர்வாயத்தில், நீதிபதிகள் தங் களுடைய தீர்ப்புரையில், காவல்துறையினர் அர்னேஷ் குமார் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ள சட்டம் மற்றும் வழிகாட்டுதல் களின்படிக் கறாராக நின்று, கைது செய்வதற்கான அதிகாரத்தை அபூர்வமாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.  “கைது செய்யப்படுவதை தண்டனைக்குரிய ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்திற்கு இழப்பினை ஏற்படுத்திடும்,” என்று கூறியிருக்கிறார்கள். இத்தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம், காவல்துறையினர், அதிகாரங்களைத் தங்கள் இஷ்டத்திற்குப் பயன்படுத்துவதற்கு எதிராக ஓங்கி அடி கொடுத்திருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்களாகச் செயல்படும் உச்சநீதி மன்றத்திலிருந்து இதுபோன்றதொரு தீர்ப்பைத் தான் எதிர்பார்க்க முடியும்.

அமலாக்கப் பிரிவுக்கு  வானளாவிய அதிகாரம்

எனினும், இவ்வாறு தீர்ப்பு வந்ததற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், இதே உச்சநீதி மன்றத்தில்,  நீதியரசர்கள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி மற்றும் சி.டி.ரவி குமார் ஆகிய மூவரடங்கிய அமர்வாயத்தில், நீதிபதிகள், 2002ஆம் ஆண்டு பணமோசடித் தடைச் சட்ட மானது, (Prevention of Money Laundering Act, 2002) அரசியல் சட்ட ரீதியான செல்லத்தக்க என்ற தன்மையை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது வேறொரு தீர்ப்பு வந்திருக் கிறது.  இந்தத் தீர்ப்பானது, குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் (Criminal Procedure Code)  ஷரத்துக்களை பின்பற்றாத அமலாக்கத்துறை யினருக்கு இந்தச்சட்டத்தின் கீழ் எல்லை யற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டு, அமலாக்கத் துறையினர் எவர் இல்லத்தையும் சோதனை செய்யவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அரசுக்கு ஆதாயம் செய்திடவும், எவரையும் கைது செய்யவும் கூடிய அளவிற்கு எல்லையில்லா அதி காரங்கள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருக் கிறது. அமலாக்கத்துறையினர் “காவல்துறை யினர்” அல்ல என்பதையும், எனவே அவர்கள்  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் ஷரத்துக் களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை  என்பதையும்   நீதிமன்றம் சரி என்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் பொருள், குற்றம்சாட்டப் பட்ட ஒருவர் காவல்துறையினர் முன் அளிப்பதாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றங் கள் ஏற்றுக்கொள்ளாத அதே சமயத்தில், அம லாக்கத்துறையினர் முன் கூறப்பட்டதாகக் கூறப் படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

குற்றம்சாட்டப்பட்டவரின் பொறுப்பு

மேலும் நீதிமன்றம் அமலாக்கத்துறையினர் பதிவு செய்திடும் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் பிணையில் வெளிவர வேண்டுமானால் இரு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திட வேண்டும். அதாவது குற்றம்சாட்டப்பட்டவர்,  குற்றத்துடன் முதல் நோக்கில் தான் குற்றமற்றவர் என்பதை, அந்த குற்றம் தொடர்பான முதல் நோக்கிலேயே நிரூபிக்க வேண்டும். (The accused has to make a case that he or she is prima facie not guilty of the offence) அடுத்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்ந்து அதுபோன்ற குற்றத்தைச் செய்ய மாட்டேன் என்று நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்திட வேண்டும். அதாவது, தான் குற்றமற்றவர் என  மெய்ப்பிக்கும் பொறுப்பை (the onus of proof)  குற்றம்சாட்டப்பட்டவர் பக்கமே தள்ளிவிட்டிருக் கிறது நீதிமன்றம். மேலும், அமலாக்கத்துறை வழக்கு தகவல் அறிக்கை (Enforcement Case Information Report) நகல், அது துறையின் உள்ளார்ந்த ஆவணம் (internal document)-ஆக  இருப்பதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு அளிக்க வேண்டியது கட்டாயமில்லை (not mandatory) என்றும் கூறியிருக்கிறது. ஆனால் காவல்துறை யினர் பதிவு செய்திடும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்,  முதல் தகவல் அறிக்கையைப் பெற உரிமைப் படைத்தவராவார்.  இதேபோன்றே அமலாக்கத்துறையினர் தங்க ளிஷ்டத்திற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் வகை செய்யும் இதர மிக மோசமான ஷரத்துக்களையும் நீதிமன்றம் சரி என்று உறுதி செய்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பின்மூலம், அமலாக்கத்துறை யினர் குடிமக்களைத் தான்தோன்றித்தனமாகக் கைது செய்தல், அவர்களின் சொத்துக்களைப் பறி முதல் செய்தல், அவர்களுக்குப் பிணை மறுக்கப் படுதல் போன்ற மக்களின் குடிமை உரிமைகள் மீது  மோசமான விதத்தில் தாக்குதல் தொடுக்கப்படு வதை நீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது.  இத்தகைய பிற்போக்குத்தனமான தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் ஆட்சியாளர்களின் நீதிமன்றமாக எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதையும் அவ்வாறு மாறுவது அதிகரித்துக் கொண்டிருக் கிறது என்பதையும் காட்டுகிறது.

டீஸ்டாவுக்கு எதிரான வார்த்தைகள்

உச்சநீதிமன்றம், வெறித்தனமான ஆட்சி யாளர்களிடமிருந்து அரசமைப்புச்சட்ட உரிமை களைப் பாதுகாத்திட நடவடிக்கைகள் எடுத்த போதிலும், அதே நீதிமன்றத்திலிருந்து இத்தகைய  பிற்போக்குத்தனமான போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதும் கவலையை ஏற்படுத்தும் உண்மையாகும். சமீப காலங்களில் வெளியான மிகவும் மோச மான தீர்ப்புகளில் ஒன்று, இதே நீதிபதிகள் கான்வில்கர் தலைமையிலான மூவரடங்கிய அமர்வாயம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் மேல் முறையீடு செய்த ஜகியா ஜாஃப்ரி மற்றும் மற்றொரு மனுதாரரான டீஸ்டா செதல்வாத் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டின்மீது பிறப்பித்த தீர்ப்பாகும்.   மேல்முறையீட்டைத் தள்ளு படி செய்த நீதிமன்றம், “(கொல்லப்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஈசன் ஜாஃப்ரியின் மனைவி) ஜகியா ஜாஃப்ரி  யாரோ சிலருடைய (someone)  தூண்டுதலின்கீழ் இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்,” என்று கூறி சிலருடைய நோக்கங்கள் குறித்து தேவையற்ற வார்த்தை களைப் பதிவு செய்தது.  இவ்வாறு நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது யாரையோ அல்ல. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, மதன் லோகூர் கூற்றுப் படி, நீதிமன்றம் குறிப்பிடுவது  டீஸ்டா செதல் வாத்தைத்தான். அவர்தான் ஜகியா ஜாஃப்ரிக்கு அவருடைய கணவர் கொல்லப்பட்ட நாளிலிருந்து, நீதி கிடைப்பதற்கான போராட்டத்தில் அவருடன் சேர்ந்துநின்று பயணித்து வருபவராவார். இந்தத் தீர்ப்புரையில் நீதிபதிகள் மேலும், “சிலர் வேண்டு மென்றே உள்நோக்கத்துடன் பானை எப்போதும் கொதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள்; நீதித்துறையின் நடைமுறை யைத் துஷ்பிரயோகம் செய்வதில் சம்பந்தப் பட்டுள்ள அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியது அவசியம், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றும் கூறியிருந்தார்கள்.   மேல்முறையீடு செய்திருந்த டீஸ்டா செதல்வாத்  தரப்பில் எதுவும் கேட்கப்படாமலேயே அவரைக் கைது செய்திட குஜராத் காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் உரிமம் கொடுத்திருக்கிறது.

முற்றுகையின் பிடியில் உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் முற்றுகைக்குள்ளாகி இருக் கிறது. நீதித்துறையை அடிபணியச்செய்திட நீதிபதி களின் நியமனத்தில் ஆட்சியாளர்கள் தலையிடு வதில் தொடங்கி, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  சமீபத்தில் பாஜக- வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர், நுபுர்  ஷர்மா, நடந்துகொண்டவிதம் குறித்து உச்சநீதி மன்றத்தில் இரு நபர் அமர்வாயத்தில் நீதிபதிகள்  கூறிய வார்த்தைகளுக்காக, அந்த இரு நீதிபதி கள் மீதும் சமூக ஊடகங்களிலும், சங்கிகளின் ஊட கங்களிலும் அவதூறுச் சேறு வாரி இறைக்கப்பட்ட தைப் பார்த்தோம். அவர்கள் விடுக்கும் மிரட்டல் மிகவும் தெளி வானதாகும். அதாவது, “எங்களுடைய எதேச்சதி கார-மதவெறி ஆட்சிக்கு உட்பட்டு செயல்படுங்கள்”  என்பதே அந்த மிரட்டல் ஆகும். உச்சநீதிமன்றம் இவர்களின் இத்தகைய மிரட்டல்களுக்கு ஆட்படாமல் துணிவுடன் இவற்றை எதிர்த்துநின்று செயல்படும் என்று நாட்டின் குடிமக்கள் ஆர்வத்து டன் நம்புகிறார்கள்.    

ஜூலை 27, 2022 தமிழில்: ச.வீரமணி


 

;