செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்...

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான் தமிழக அரசின் நிலைபாடு. அதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றுதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியுள்ளார்.கடந்த வாரம்தான் நீட் தேர்வு நடந்துமுடிந்துள்ளது. மாணவிகள் பொட்டுவைக்கக்கூடாது, காதணிகள் அணியக்கூடாது உட்பட பல்வேறு கெடுபிடிகளை செய்து நீட் தேர்வுநடத்தி முடித்துள்ளனர். அத்துடன் நீட் தேர்வுமையங்களை திடீரென மாற்றி அறிவித்து குளறுபடிசெய்ததும் வேறு மையங்களுக்கு சென்றவர்களைஅங்கேயே தேர்வு எழுதச் செய்ததும் கூட நடந்தது. 

இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நீட் தேர்வில் விலக்கு கேட்டு தொடர்ந்துவலியுறுத்துவோம் என்பதை என்னவென்று சொல்வது? குதிரை ஓடியபின் லாயத்தை பூட்டுவது என்று சொல்வார்களே அதுபோல் உள்ளது பன்னீர்செல்வத்தின் பேட்டி.தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலுவான நடவடிக்கைகள், மாநிலஅதிமுக அரசால் எடுக்கப்படவில்லை என்பதுதமிழக மக்கள் அறிந்ததே. ஆனால் இவர்களது சொந்த விஷயம் என்றால் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் ஆர்வமும் தமிழக மாணவர்கள் வாழ்க்கைப் பிரச்சனையில் காட்டப்படவில்லை. நீட் தேர்வுக்கு இந்தாண்டு விலக்கு பெற்று தருவோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்தாண்டு கூறியிருந்தார். ஆனாலும் அவர் விலக்குப் பெற்றுத் தரவில்லை. நீட் தேர்வு பல்வேறு நிபந்தனைகள், கெடுபிடிகளுடன் அவசர கோலமாகநடந்தது. மாணவர்கள் போதிய தயாரிப்பின்றி தேர்வு எழுதியதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் தமிழில் மொழி பெயர்த்த வினாக்களில்ஏற்பட்ட தவறுகளுக்கு மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பும் பயனற்றுப் போய்விட்டது. 

ஆனால், தனது சகோதரருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக பாதுகாப்புப் படைவிமானத்தை வழங்கும் அளவுக்கு கேட்டுப்பெறும் நிலையிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சரிடம் செல்வாக்கு பெற்றிருந்தார் துணை முதல்வர். அது பின்னர் பிரச்சனைக்குரியதானது வேறு விஷயம். அத்தகைய செல்வாக்கை தமிழகமக்கள் பிரச்சனைகளுக்காக மாணவர்களின் நலனுக்காக துணை முதல்வரால் ஏன் பயன்படுத்த முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி?கடந்த மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நீட் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்றுதான் கோரினார்களே தவிர விலக்கு கேட்கவில்லை என்று கூறினார். அப்போதும் கூட துணை முதல்வர் வாயை திறக்காதது ஆச்சரியமில்லை. ஆனாலும் தொடர்ந்துநீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வலியுறுத்துவோம் என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்காக? தமிழக மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள். 

;