headlines

img

தமிழெனும் உயிர்க்கொடியின் வேர்களைக் கண்டறிவோம்....

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்- கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’

என்று தமிழ் சமூகத்திற்கு கட்டளையிட்ட மகாகவி பாரதியின் மறைவு நூற்றாண்டு நாள் இது. நாட்டின் மீதும், மொழியின் மீதும் தாளாத காதல் கொண்டிருந்த அந்தக் கவிஞன் இந்தியாவின் பன்முக பண்பாட்டின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். 

உலகில் உள்ள அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்பது ஒருபுறம் என்றால், காலத்தின் காலடித் தடத்தில் தமிழெனும் உயிர்க்கொடி எந்தெந்த பெரு நிலத்தில் வேரோடி இருந்தது என்று கண்டறிந்து, ஆய்வு செய்து ஆவணப்படுத்துவது மற்றொரு பெரும்பணி.  இந்த பெரும் நிலப்பரப்பின் ஆதிக்குடிகளில் ஒன்றான தமிழ்க்குடி உலகின் பல்வேறு பகுதிகளில் பல்கிப் பெருகி அழியாத் தடத்தை உருவாக்கியுள்ளதற்கான சான்றுகள் அவ்வப்போது அறிஞர் பெருமக்களால் முன்வைக்கப்படுகின்றன. இது ஒருங்கிணைந்த முயற்சியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற பெரு விருப்பத்தை தமிழறிஞர்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், தமிழ் பண்பாட்டின் வேர்களைத் தேட இந்தியா மற்றும் அயல்நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. 

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற சங்கத் தமிழனின் பெருநெறிக்கேற்ப உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் சென்றுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வணிகத்தின் பொருட்டும், ஆய்வுகளின் பொருட்டும் கல்வி கற்கவும் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளனர்.இன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளோடு தமிழ் நிலம் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்திருக்கிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் சான்றுகள் கடந்த கால வரலாற்றின் மீது காலை வெளிச்சமாக படர்கிறது. உலகில் புழங்கும் பல மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. இவை அனைத்தையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் போது, வரலாறு வளமை பெறும். இந்த வகையில் சட்டப் பேரவையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்தியாவின் வரலாற்றையும், பண்பாட்டையும் மதவெறி அடிப்படையிலான ஒற்றைக்கற்றைக்குள் அடக்கிவிட ஒன்றிய அரசு முயலும் போதுஇந்தியாவின் வரலாறு என்பது பன்முகப் பண்பாட்டின் தொகுப்பு என நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது. மொழித் திணிப்பும், பண்பாட்டுச் சிதைப்பும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் நிலையில் பன்முகப் பண்பாட்டின் வேர்களைத் தேடிபயணம் செய்வது தேச வரலாற்றின் அடர்த்தியை அதிகப்படுத்தும்.கீழடி, ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொந்தகை, பொற்பனைக்கோட்டை, கொடுமணல்,கொற்கை, சிவகளை என விரியும் ஆய்வுப் பரப்புபுதிய புதிய செய்திகளை நாளும் கொண்டு வந்துசேர்க்கிறது. கடல் கடந்தும், நிலம் கடந்தும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தமிழின் தொன்மையைமட்டுமல்ல, காலம் கடந்து வாழும் வண்மையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லட்டும். என்றுமுளதென் தமிழின் மாட்சி பரவட்டும்.