உலகப் பட்டினி குறியீடு 2022 வெளி வந்தபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சி அடைந்தது. 121 நாடுகளில் இந்தியா 107 வது இடத்தில் இருந்தது. 2021 இல் 101 வது இடம். இன்னும் 6 படிகள் சறுக்கல்.
பாகிஸ்தானை விட, வங்கதேசத்தை விட, இலங்கையை விட, நேபாளத்தை விட இந்தியா பின்னால் இருக்கிறதா என்று கூடுதல் அதிர்ச்சி.
பட்டினிக் குறியீடு கணக்கீட்டில் ஒரு முக்கிய மான அளவுகோல், குழந்தைகளின் உடல் நலன். சத்துணவுக் குறைவால் குழந்தைகள் வளர்ச்சி குன்றி (Stunted Children) இருப்பது. 35 சதவீத மான இந்திய குழந்தைகள் (6 மாதம் முதல் 5 ஆண்டு வயது வரை) இப்படி வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளாக உள்ளனர். எண்ணிக்கை கணக்கில் 4 கோடியை இது தொடலாம்.
“வளர்ச்சி குன்றிய” என்பதன் பொருள் நீண்ட கால பாதிப்பு கொண்ட மூளை வளர்ச்சி குறைவு, மன ஆற்றல் பாதிப்பு, கற்றல் குறைபாடு கள், பள்ளிக் கல்வி பாதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு எதிர்காலத்தில் இட்டுச் செல்லும்.
உலகில் நிகழும் குழந்தை மரணங்களில் 50% இந்தியாவில்தான் நிகழ்கிறது. ஆனால் இத்தோடு இது குறித்த தகவல்கள் முடிந்து போய் விட வில்லை. இச்செய்திக்குள் ஒரு செய்தி உள்ளது.
அதிகம் விவாதிக்கப்படாத ஒரு கோணத்தை அசோகா பல்கலைக் கழகத்தின் “பொருளா தார தகவல் மற்றும் ஆய்வு மையம்” வெளி யிட்டுள்ளது. “தலித், பழங்குடி குழந்தைகளில் 40 சதவீதம், பிற சாதிகளில் 26 சதவீதம் உடல்நலம், சுகாதாரம் வாய்க்கப் பெறாதவர்களாக, அதற்கு ரிய ஆதாரவளம் கிட்டாதவர்களாக உள்ளனர்” என்பதே அது. இயல்பாக 35 சதவீத குழந்தைகள் என்ற ஒட்டு மொத்த “வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளில்”, தலித், பழங்குடி குழந்தைகளின் சதவீதம் மொத்த சராசரியை விட மிக அதிக மாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதுதொடர்பாக “உலகப் பட்டினி குறியீடு” திட்டத் தலைவர் லாரா ரெய்னர் சமீபத்தில் கூறியது கவனிக்கத்தக்கது. “எல்லா நாடுகளுக்கும் ஒரே அளவுகோல்கள், குறியீடுகள்தான். சத்துணவுக் குறைபாடு, குழந்தை வளர்ச்சியின்மை, குழந்தை எடைக் குறைவு, குழந்தை இறப்பு விகிதம் ஆகிய நான்கு குறியீடுகளின் அடிப்படையில்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. இவை எல்லாவற்றை யும் இணைத்து கலோரி பற்றாக்குறை, நுண் சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்கிறோம். எங்கள் நோக்கம், எல்லா நாடுகளிலும் உள்ள நீண்ட கால பட்டினியை அளவிடுவதே” என்கி றார். இதன்படி, தலித், பழங்குடி குழந்தைகளுக்கு நீண்டகாலமாகவே உரிய கவனிப்பு கிடைக்கப் பெறவில்லை என்பது உறுதியாகிறது.
எல்லா குழந்தைகளின் நலனுக்காகவும் குரல் கொடுப்போம். குழந்தைகள் எல்லோரும் நம் நேசிப்பிற்குரியவர்கள். ஆனால் சாதிய பாகுபாடு கள் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை குழந்தைப் பருவத்தில் இருந்தே அதிகமாக பாதிக்கிறது என்பதையும் அறிவோம்!