திங்கள், மார்ச் 1, 2021

headlines

img

உயர் நீதிமன்றத்தின்  கருத்து சரியல்ல....

மத்திய ஆட்சிப் பொறுப்புக்கு பாஜக வந்ததிலிருந்து ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் முதலிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்க சிந்தனைகளையே நாட்டு மக்களிடையே திணித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் பிரசார்பாரதி சார்பில் நடத்தப்படும் தூர்தர்ஷன் பொதுவான ஒளிபரப்பையும் மாநிலங்களுக்காக அந்தந்தமாநில மொழிகளில் பிராந்திய ஒளிபரப்பையும் செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பொதிகை தொலைக்காட்சி தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் ஒளிபரப்புகிறது.பொதிகை தொலைக்காட்சியில் காலை 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பான தமிழ் செய்தியை காலை 7 மணிக்கு மாற்றியதோடல்லாமல் 15 நிமிடத்தை குறைத்து 7.15 முதல் 7.30 வரை சமஸ்கிருதசெய்தியை ஒளிபரப்பினர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததும், மீண்டும் தமிழ் செய்தியை காலை 8 மணிக்குமாற்றினர். ஆனால் 7.15 முதல் 7.30 வரை சமஸ்கிருதசெய்தியை ஒளிபரப்பினர். அதில் சமஸ்கிருத வார்த்தைகளை தமிழ் எழுத்துக்களில் திரையில் வாக்கியங்களாக காட்டப்பட்டது. 

அந்தளவுக்கு சமஸ்கிருத மொழியை மக்கள்மத்தியில் எப்படியாவது திணித்துவிட வேண்டுமென்று தொலைக்காட்சி நிர்வாகம் செயல்பட்டது. ஆயினும் தற்போது அந்த மொழியாக்கம் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் தமிழ் மொழிக்கான பிரதான சேனலில் சமஸ்கிருதத்தை திணிப்பதுதேவையற்றது. சமஸ்கிருத செய்தியை தூர்தர்ஷனில் அதே நேரத்தில் ஒளிபரப்பலாம். ஆனால் தமிழுக்கான நேரத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான தீர்ப்பில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி,நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் இது அரசின்கொள்கை முடிவு; மனுதாரருக்கு விருப்பமில்லை
யெனில் டிவியை அணைத்துவிடலாம் அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றனர். அத்துடன் மனுதாரர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மனு அளித்து நிவாரணம் தேடலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வெறும் 803 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசும் நிலையில் 15 நிமிட செய்தியைஒளிபரப்புவது; சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்குஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கும் மத்தியஅரசு பழமையான தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தவர் கூறியதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதும் கண்டுகொள்ளப்படவில்லை.  எனவே தூர்தர்ஷனில் 22 மொழிகளிலும் செய்திகளை ஒளிபரப்புவது நாட்டு ஒற்றுமைக்கு உதவியாக  இருக்கும். அதை விடுத்து மாநில மொழிக்குரிய சேனலில் சமஸ்கிருதத்தை திணிப்பது அதற்கு எதிராகவே அமையும்.  எனவேபொதிகையில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை உடனே நிறுத்திட வேண்டும்.

;