headlines

img

விஷச்சாராயம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமி ழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 42 கூலித்தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர்.  

இது ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்தில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் அல்ல. மாவட்டத்தின் தலைநகரில் நீதிமன்றம், காவல் நிலையம், வருவாய்த்துறை அலுவலகங்கள் அருகே  அரங்கேறியிருக்கும் அவலமாகும். கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியாகினர். அப் போது கள்ளாச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததே உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. மெத்தனாலை சப்ளை செய்த சென்னையைச் சேர்ந்த தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.  

தற்போதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவிற்கும் மெத்தனால் கலந்ததே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாராயம் காய்ச்சு வதே சட்டவிரோதமானது; அதில் சட்டவிரோத மாக மெத்தனால்  வாங்கப்பட்டுப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்றால் காவல்துறையின் மெத்த னம் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு ஆகியவை இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. 

மெத்தனால் பயன்படுத்துவதற்கு என்று கடுமையான விதிமுறைகள் இருக்கின்றன. அதற்கு என்று உரிமை பெற்ற நிறுவனங்கள் மட்டுமே அதனை வாங்கவோ, பயன்படுத்தவோ முடியும். அப்படியிருக்கையில் எப்படி எளிதாக கள்ளச்சாராயம் காய்ச்சும் வியாபாரிகளின் கைக ளுக்குக்  கிடைக்கிறது?  எந்த தொழிற்சாலையில் மெத்தனால் கிடைக்குமென்பது கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், யார்  கள்ளச்சாராயம் காய்ச்சு கிறார்கள் என்பது தொழிற்சாலை உரிமையாளர்க ளுக்கும் நன்றாகவே தெரிந்தே இருக்கிறது. இந்தக் கேள்வியை இப்போது முதல்வரே எழுப்பியுள் ளார். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்று கண்டு பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அது இந்தச் சம்பவத்தின் முக்கியமான அம்சம் ஆகும். 

மரக்காணம், மதுராந்தகம்  நிகழ்விற்குப் பின்னர் முதல்வர் கள்ளாச்சாராயத்தை முழுமை யாகத் தடுக்க பல்வேறு அறிவிப்புக்களையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட்டார். ஆனால் அந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏன் பின் பற்றப்படவில்லை என்பதை முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும். 

கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஏதோ ஓரே நாளில் நடந்திருக்கும் விஷயமல்ல. அந்த பகுதி யில் கள்ளச் சாராய வியாபாரத்தின் தொடர் விரிவாக்கத்தின் விளைவே மாவட்ட தலை நகரின் மையப்பகுதியிலும் விற்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

விஷச்சாராயத்திற்கு பலியானவர்களின்  குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய நிவாரணத்தை உறுதி செய்திட வேண்டும். விஷச்சாராய நடமாட்டத்திற்கு சாவுமணி அடிக் கும் விதத்தில் பாரபட்சமின்றி துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.