மோடி அரசு இந்திய வேளாண் துறையை அழிக்கும் வகையில் நிறைவேற்றியுள்ள சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் தில்லி போர்க்களமாக விவசாயிகளால் மாற்றப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அதிமுகஇந்த சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. மாநிலஉரிமைகளை காவு கேட்கும் இந்த சட்டங்கள்குறித்து அதிமுகவின் அணுகுமுறை தமிழகத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக்கூடியதாகும். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் திருத்த சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த சட்டத்தின் ஆபத்துக்களை உணர்ந்து கொண் டுள்ளதால்தான் விவசாயிகள் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன்னையும் ஒரு விவசாயி என்று அவ்வப்போது கூறிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயத்தை அழிக்கக்கூடிய மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய இந்த சட்டங்களை நியாயப்படுத்துவது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் இழைக்கும் துரோகமாகும்.
இந்த சட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரும் போது இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல தமிழகமும் கடுமையாக பாதிக்கப்படும். இதிலிருந்து தமிழகம் விலக்கு பெறமுடியாது. நீட் தேர்வு உட்பட மத்திய அரசால்கொண்டு வரப்பட்ட பல்வேறு சட்டங்களால் தமிழகமும் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் அதிலிருந்து மீள முடியாமல் கூக்குரலிடுவதையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாநில அரசின் பொறுப்பில் உள்ள விவசாயத்துறையை கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் பின்னர் கார்ப்பரேட்டுகளின் கையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தை ஒப்படைப்பதும்தான் மோடி அரசின் நோக்கம். இதற்காகத்தான் இந்த திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் என்பதே எதிர்காலத்தில் இல்லாமல் போகும். விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்த போது மாநிலங்கள் மானியம் வழங்குவதுண்டு. அதுவும் இனி சாத்தியமில்லாமல் போகும். இதேபோல பல ஆபத்துக்கள் வரவிருக்கின்றன.இதையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவசாய விரோத சட்டங்களுக்கு பல்லக்கு தூக்குவது அவருடைய ஆட்சியை இப்போதைக்கு தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறுகிய நோக்கம் மட்டுமே ஆகும். பாஜகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுக தமிழகத்திற்கு செய்துவரும் துரோகங்கள் அனைத்திற்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.