செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

அமைதியை குலைப்பது யார்?

ஜம்மு-காஷ்மீர் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் நிலைமை எந்த அளவுக்கு விபரீதமாக உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அவருக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதை அவர் அரசியலாக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.  அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அங்கு செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். கைதுசெய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான முகமது யூசுப் தாரிகாமியின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்ற கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் து.ராஜா ஆகியோரும் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்டு, பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட தாரிகாமி எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கூட தெரிவிக்காத நிலையில் அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி உச்சநீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்தப் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட குழுவினர் காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டி ருப்பது முற்றிலும் ஜனநாயகவிரோதமானது. அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் அந்தப் பகுதியை இந்தியா வுடன் இணைத்துவிட்டதாக பாஜகவினர் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். ஆனால் இந்தியாவின் ஒரு பகுதிக்குள் நுழையவே எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. அங்கு ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பிரஸ் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.  திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப் பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீரை சொர்க்கமாக்கிக் கொண்டிருப்பதாக ஆளுங்கட்சியினரின் வாய்ச்சவடால்களுக்கு குறைவில்லை. 

காஷ்மீரின் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதாலேயே எதிர்க்கட்சித் தலைவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் கூறியுள்ளது. அங்கு அமைதி நிலவவில்லை. இவர்களால் உருவாக்கப் பட்டிருப்பது மயான அமைதி. அது வெளியுலகிற்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற் காகவே தொடர்ந்து தடைவிதிக்கின்றனர். எந்த வகையிலும் இது நாட்டுக்கு நல்லது அல்ல.

;