headlines

img

ஈரானைத் தொடாதே!

ஈரான் ராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான காஸிம் சுலைமானியை படுகொலை செய்ததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு மிகப்பெரிய ஆத்திரமூட்டலை உருவாக்கியிருக்கிறார்; இது ஈரானுக்கு எதிரான போர்ப் பிரகடனத்திற்கு சமமானதாகும். சுலைமானி, ஈரானின் ராணுவமான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளின் குவாத் படைப்பிரிவின் தலைமை கமாண்டர் ஆவார்.  அவர், பாக்தாத் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போது ஆளில்லா சிறிய ரக விமானங்களின் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் அபு மகதி அல்-முகாந்திசும் கொல்லப்பட்டிருக்கிறார். இவர், இராக்கிய ராணுவப் படைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிற மக்கள் அணிப் படைகளின் துணை கமாண்டர் ஆவார். மக்கள் அணிப் படை என்பது ஷியா பிரிவைச் சார்ந்த போராளிக் குழுக்களை ஒன்றிணைத்த, ராணுவ அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிரிவாகும். உலகில் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் படுகொலை செய்யலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இந்த நபர் இருப்பார் என்று அறிவிப்பு செய்து யாரை வேண்டுமானாலும் கொல்வதற்கு அதிகாரம் பெற்றிருப்பதாகக் கருதுகிறது. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த காலத்திலிருந்து இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு ஏமன் மற்றும் இதர பல்வேறு இடங்களில், பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்களையும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் நபர்களையும் நீதித்துறையின் முன் நிறுத்தாமல் தன்னிச்சையான முறையில் கொலை செய்த நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. ஆனால் இப்போது ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி படுகொலை என்பது முற்றிலும் வேறுபட்ட தன்மை கொண்டதாகும். அவர் இறையாண்மைமிக்க ஒரு நாட்டின் ராணுவப் படையின் முக்கியமான தளபதி ஆவார். அதுமட்டுமல்ல, அவர் ராஜீய ரீதியாக பாஸ்போர்ட்டும் வைத்திருக்கிறார். இராக்கில், அமெரிக்காவுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற போர்க்குழுக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு தொடர்பாக விவாதிக்கும் பொருட்டு இராக் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில்தான் சுலைமானி, பாக்தாத் சென்றிருக்கிறார். சுலைமானியுடன் கொல்லப்பட்ட அல் - முகாந்திஸ், இராக் ராணுவப் படைகளின் கமாண்டர்களில் ஒருவர். அவரையும் இராக் மண்ணிலேயே படுகொலை செய்திருப்பது, இராக்கில் எந்த விதிகளின் அடிப்படையில் அமெரிக்க ராணுவப் படைகள் முகாமிட்டிருக்கின்றனவோ அந்த விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.  டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானை குறி வைத்து, மிகக் கடுமையான அழுத்தத்தை அந்த நாட்டிற்கு அளிக்கும் விதமான கொள்கையை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டை அமெரிக்கா தன்னிச்சையாக ரத்து செய்தது. இந்த உடன்பாட்டில் ஈரான் மட்டுமல்ல, இதர ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன. இந்த உடன்பாட்டை ரத்து செய்ததைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பல்வேறு தடைகளை விதித்தது. ஈரான் பொருளாதாரத்தையும் அதன் எண்ணெய் தொழிலையும் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கத்துடன் புதிய புதிய தடைகளையும் விதித்தது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஈரான் கடற்கரையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானத்தை ஈரானின் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து ஈரானை மூன்று மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டிரம்ப் அந்த உத்தரவை திடீரென ரத்து செய்தார்; எனினும், அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை மோசமடையச் செய்வதில் குறியாக இருக்கிறது என்பது தெளிவானது.  தற்போது நடத்தப்பட்டுள்ள படுகொலை தாக்குதலுக்கு டிரம்ப் உத்தரவிட்டது மட்டுமல்ல; இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கிட இது உதவும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமல்ல, அமெரிக்க செனட் சபையில் விரைவில் நடக்கவுள்ள டிரம்ப்-க்கு எதிரான கண்டனத் தீர்மான விசாரணையிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கும் வசதியாக இருக்கும் என்றும் அவர் கருதி இருக்கக் கூடும். ஆனால் உண்மையில், ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்ய டிரம்ப் போட்ட உத்தரவு என்பது, இராக்கிலும் அந்த பிராந்தியத்திலும் அமெரிக்க நலன்களுக்கே ஆபத்தானதாகத்தான் முடியும்.  இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்கா, இராக்கிய போராளிக் குழுக்களின் தளங்கள் மீதும், ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதில் 26 இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இது இராக்கியர்கள் மத்தியில் கடுமையான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான், பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான பதிலடித் தாக்குதலுக்கு இட்டுச் சென்றது. இந்நிலையில் இராக்கிய மண்ணில் ஈரான் தளபதி சுலைமானும் இராக்கிய ராணுவ கமாண்டர்களில் ஒருவரான அல் - முகாந்திசும் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டிருப்பது இராக் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இராக்கிலிருந்து அனைத்து அந்நியப் படைகளும் உடனடியாக வெளியேற வேண்டுமென்று இராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் அளவிற்கு அமெரிக்கா அங்கே தற்போது கடுமையான எதிர்ப்பினை சந்திக்கத் துவங்கியிருக்கிறது. இராக்கில் 5ஆயிரம் அமெரிக்கப்படையினர் இருக்கிறார்கள். உண்மையில் ஈரானை தனிமைப்படுத்த முயற்சித்த அமெரிக்கா, தற்போது இராக்கில் தானே தனிமைப்பட்டு நிற்கிறது.ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கோமேனி, அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். சுலைமானியின் இறுதிநிகழ்ச்சி நடந்தவுடனே இராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஈரான் பதிலடியின் துவக்கமாகும். இந்த நிகழ்வுகளின் பின்னணியில் ஒட்டுமொத்த மேற்கு ஆசியாவும், வளைகுடா பிரதேசமும் பெரும் பதற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் ஈரானை தங்களது பொது எதிரியாகக் கருதுகிற இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவின் பின்னால் நின்றுகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா மேற்கொண்ட தலையீடுகள், உண்மையில், இந்த நாடுகளில் ஈரானின் செல்வாக்கு வளர்வதற்கு உதவி செய்துள்ளது. லெபனானிலும் ஈரானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தீமையின் அச்சு என்று அமெரிக்காவால் கூறப்பட்ட ஈரான் உள்ளிட்ட நாடுகள் தற்போது அமெரிக்காவை எதிர்க்கிற “எதிர்ப்பின் அச்சு” என்பதாக மாறியுள்ளன. இதில் இராக்கின் ஷியா பிரிவு போராளிக் குழுக்கள், சிரியா மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவையும் சேர்ந்து கொண்டுள்ளன. இத்தகைய பின்னணியில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பும் இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் மிகக்கடுமையான முரண்பாட்டையும், மோதலையும் தீவிரப்படுத்தும்.  இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதலின் உடனடி விளைவுகள் கடுமையாக உள்ளன. ஏற்கெனவே எண்ணெய் விலைகள் கூர்மையான முறையில் அதிகரித்துள்ளன. பேரல் ஒன்றுக்கு 70 டாலராக எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிற இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மோசமான செய்தியாகும். எனினும், சுலைமானி படுகொலை தொடர்பாக மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது, அமெரிக்காவை எந்தவிதத்திலும் கடிந்துகொள்ளக்கூடாது என்ற விதத்திலேயே, மிகவும் தவறான முறையில் அமைந்திருக்கிறது. இந்தப் படுகொலையை கண்டனம் செய்வதற்கு மோடி அரசு மறுத்துள்ளது. ஈரான் இராணுவத் தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்று அறிந்து கொண்டோம் என ஒரு வெற்று வாக்கியத்தை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. ஈரான் எண்ணெய்யை வாங்கக் கூடாது என்று கடந்தாண்டு முதல் தடுத்து நிறுத்திய அமெரிக்கத் தடைகளுக்கு மோடி அரசு ஏற்கெனவே தனது ஒத்துழைப்பை நல்கி வருகிறது. அமெரிக்காவுடனான இத்தகைய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மோடி அரசு, சவூதி அரேபியாவுடனும் இஸ்ரேலுடனும் மிக நெருக்கமான உறவினை மேற்கொண்டிருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் மோடி அரசு இந்திய தேசத்தின் சொந்த நலன்களுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது.  மோடி அரசாங்கம், இந்தியாவின் தேசிய நலன்களே அனைத்தையும் விட பெரிது என்பதை கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும்; ஈரான் மீதான ஆக்கிரமிப்புக் கொள்கை மிகவும் தீங்கானது என்பதையும் இந்தியா ஒரு போதும் அதில் ஒரு பங்கேற்பாளராக இருக்காது என்பதையும் மிக நேரடியாகவும் தெளிவாகவும் அமெரிக்காவிடம் மோடி அரசு அறிவிக்க வேண்டும்.  பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்  (ஜனவரி 8, 2020)

 தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

;