headlines

img

சின்ன சின்ன ஆசைகள் - மொசைக்குமார்

கேலரியை எதார்த்தமாக புரட்டிக்கொண்டிருந்த போது அந்த கைக்கடிகாரமும் பளிச்சிட்டு ஓடியது. ஆர்வம் தழுவ தொடுதிரையை விரலால் வலப்பக்கம் இழுத்து விட்டு மீண்டும் பார்த்தேன். ‘ப்.ச் வாங்கியிருக்கலாமோ!’

ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளின் போது அவளுக்கு பரிசளித்து விடுவேன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நினைப்பேன். தங்க வளையல் முதல் ஜிமிக்கி, கம்மல் என கற்பனைகளில் லயித்து இருதியாக ஹேன்பேக், பர்ஸ்-ல் அன்புப் பரிமாற்றம் அரங்கேறியிருக்கிறது. எதுவுமே இல்லாவிடினும் புத்தாடை நிச்சயம் உண்டு. அதோடு அந்நாளின் மாலையில் பிள்ளைகளோடு நகரின் பிரபலமான உணவகம் ஒன்றிற்கு சென்று விருந்தும் கொள்வோம்.

போன மாதத்தில் கடந்து போன அந்த விசேச நாளை முன்னிட்டும் அப்படித்தான். மனது முன்கூட்டியே அலை பாயத் துவங்கியது. அவள் வியக்கும் வண்ணம் விலையுயர்ந்த ஆபரணம் அல்லது வீட்டு உபயோகப் பொருள் என்று எதையாவது ரகசியமாய் வாங்கி வைத்திருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நானும் பிள்ளைகளும் அவளை எழுப்பி, அமைதியாய் ஜீவாளிக்கும் மெழுகுவர்த்திகளை அணைக்கவும், கேக் வெட்டவும் செய்து ”ஹோப்பி பொ்த்டே… ஹேப்பி பொ்த்டே அம்மா… மே ஹாட் ப்ளஸ் யு” என கூறுவதோடு மின்னும் காகிதங்களும் ரிப்பன்களும் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருளை அவளிடம் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதும் என்று எவ்வளவோ கனவு கண்டு கொண்டிருந்தேன். ‘ம்…’ அதெல்லாம் திரையில் தோன்றும் நாயகன், நாயகிகளுக்குத்தான் சாத்தியம் போலும்.

என்னத்தைச் சொல்லுவது… ‘கையில வாங்குனேன், பையில போடல காசு போக எடம் தெரியல’ என்ற பழைய பாடலுக்கிணங்க வருமானத் தொகையையெல்லாம் அப்படியே பீரோவினுள் பூட்டி வைத்திருந்தால் அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம்! நூரு ரூபாய்க்கு இருநூரு அட்டவணை இருக்கிறது எனக்கு. இந்த நவீன காலத்தில் பிள்ளைகளின் படிப்புச் செலவிற்கே முக்கால்வாசி வருமானம் போய் விடுகிறது. மீதத்தில் வீட்டு வாடகை, பிற்காலத்தில் செல்வங்களை கொட்டப்போகும் என்ற நம்பிக்கையில் போடப்பட்ட பாலிசிகள், சாப்பாட்டுத் தேவைகள், விழாக்கால புத்தாடைகள், மருத்துவம் மற்றும் அவசரச் செலவுகள், கல்யாணம், காது குத்து, சலிக்காத வசந்த விழாச் செய்முறைகள் என்று மீதத்தில்தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது. இதில் மீதமெடுப்பதென்பது கடைந்த மோரை மீண்டும் மீண்டும் கடைவதற்குச் சமம்.

வெள்ளித்திரையில் வெறும் ஐந்து நிமிடப் புரட்சிப் பாடலில் கஞ்சிக்கு லாட்டரியடிக்கும் நிலையிலிருந்து உலகமகா ஐசுவரியவானாய் மாறிவிடுகிறானே நட்சத்திர நாயகன்… அதுபோல் கவிஞர்கள் யாராவது எனக்கும் பாடல் எழுதினால் தேவலை. நானும் கட்டிடத் துறையில் நீண்ட வருடமாய் என்னைக் கரைத்துக்கொண்டேதான் ஓடுகிறேன்… என்ன பிரயோஜனம்…

குப்பைத்தொட்டி, ரயில் தண்டவாளம் என்று எங்கெங்கேயோ கட்டுக் கட்டாக பணத்தை யாரோ வீசி எறிந்துவிட்டுச் சென்றதாக அவ்வப்போது முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் செய்திகளிலும் காண்கிறேனே… படுபாவிப் பயல்கள் அதை என் போன்றோர்களுக்காவது கொடுத்துவிட்டுப் போகக் கூடாதா… இல்லை வெளிநாடுகளில் ஐநூரு கோடி, ஆயிரம் கோடி என்று லாட்டரி அடிக்கிறதே! அதுபோல் ஏதாவது கூரையைப் பிய்த்துக் கொண்டு விழக் கூடாதா… அப்படி ஒரு நிகழ்வில் என் வாழ்வு தலைகீழாய் மாறி உட்கார்ந்து சாப்பிடும் நிலைக்கு வர மாட்டேனா! எனத் தோன்றும்.
‘ச்சீ அதெல்லாம் ஒரு பிழைப்பா… உழைச்சு முன்னேறனும்’ என மற்றொரு மனது சொல்லும். அதுவும் சரித்தானே. தான் வாங்கிக் கொடுக்காத வேறொரு பென்சிலோ, பேனாவோ, ரப்பரோ பிள்ளைகள் வைத்திருப்பதைக் கண்டால் மனது எப்படி வேகமெடுக்கிறது… “தம்பி இங்க பாருப்பா… வேற பையங்க பொருள் எதுவும் வீட்டுக்கு வரக்கூடாது, இரவல் வாங்கினா ஸ்கூல்லயே குடுத்துட்டு வந்துரனும். அடுத்தவங்க பொருள் மேல ஆசப்படக் கூடாது என்ன… பாவம் அவங்க பேரன்ஸ் அந்த பையன்கிட்ட எங்கன்னு கேப்பாங்கள்ல… நாளைக்கிப் போயி மறக்காம குடுத்துருப்பா. உனக்கு வேணும்கிறத அம்மா அப்பா கண்டிப்பா வாங்கி தருவோம், சரியா…” என பெற்ற பிள்ளைகளையே நற்பண்பில் வளர்க்க துடிக்கும் போது நாமே ஆசையில் விபரீத எண்ணங்களை அலைபாய விடுவதும் தவறுதானே! ‘ம்… இருப்பவன் அனுபவிக்கிறான், இல்லாதவன் நீதி நேர்மையென்று பிதற்றிக் கொண்டிருக்கிறான். ஹய்ய்யோ.. ஹய்ய்யோ’

கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக ஒரு பெண்ணிற்கான கைக் கடிகாரம் எப்படிப்பட்ட எண்ணத்தையெல்லாம் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அவள் ஏற்கனவே இரண்டு வைத்திருக்கிறாள். ஒன்று வார் போட்டது. பழையதும் பழுதுமான அது இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டில் நின்றதோடு சரி… அவ்வப்போது அலமாரிகளை ஒதுங்கவைக்கும் போது தட்டுப்படும். மீண்டும் வேறு இடத்தில் வைக்கப்படும். மற்றொன்று தங்க வர்ணம் பூசியது, வெளுத்து பழமையாகியதோடு செயின் துவண்டும் கிடக்கிறது. எப்போதாவது பேட்டரி மட்டும் மாற்றி அதைத்தான் கட்டிக் கொண்டு போவாள்.
“இத ஒரு நாள் கடைக்கு எடுத்துட்டுப் போயி பாலீஸ் போட்டுட்டு வாங்கன்னு எப்பயிருந்து சொல்றேன்…” பாவம் அவளும்! தோனும்போதெல்லாம் கெஞ்சிக் கொண்டுதானிருக்கிறாள். அதோடு அனுதினமும் அலுவலகம் போயும் வருகிறாள். அவள் விரும்புகிறபடி தங்கத்தில் வளையல்தான் வாங்கிக் கொடுக்க முடியவில்லை! குறைந்தபட்சம் அந்தக் கடிகாரத்திற்கு தங்க வர்ணமாவது பூசிக் கொடுக்கலாமே…! 
அவளைப் போன்ற அலுவலகப் பணியிலி்ருக்கும் சக பெண்களில் சிலர் கிலோ கணக்கிலே மாலை மாலையாக தங்கச் சங்கிலிகளை கழுத்திலே சுமந்து வலம் வரும் நிலையிலே பாவம் அவள் உரமோர் போல அடகுக்குத் தப்பிய அந்த ஒற்றைச் செயினை மட்டும் தாலிபோல் பாதுகாப்பாய் தொடுக்கிக்கொண்டு கிடக்கிறாள்.

எதையாவது செய்யனும்… நல்லா உழைச்சு, சம்பாதிச்சு ஒரு நாள் நகைக் கடையவே விலைக்கு வாங்கி அவளிடம் கொடுக்கனும். ‘பார் உனக்காக நான் இறக்கிய போலார் தங்க வயலைப்பார்’ செவ்வாய் கிரகத்திற்கான பயணக் கனவு போல் இப்படியும் என்னுள் நினைவுகள் சில தோன்றும்.

‘அட அது இருக்கட்டும்ப்பா… அந்த புள்ளைக்கி பொறந்த நாள் வரப்போகுதே அதுக்கு என்னா செய்யப்போற’ இப்படித்தான் அப்போது மனதிலே கேள்விக்கனையும் தொடுத்தது…
யோசித்துப் பார்த்தேன். ‘ஹேன்பேக்…!’ இத்தனை வருடங்களாக வாங்கி வாங்கி பாடாவதியாய்ப் போன பத்துக்கும் மேற்பட்ட பேக்குகளை ஒரு சாக்குப் பொட்டலமாக கட்டி வைத்திருக்கிறாள். நேரம் வரும்போது ஒரு நாள் குப்பை வண்டியில் போட… இப்படி ஒவ்வொன்றாக யோசிக்கிறேன்… எதுவும் புலப்படவில்லை.

ஒரு ஆயிரம், ஆயிரத்து ஐநூருக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும்! தற்போதைய வீட்டுச் சூழலில் அது பெரிய தொகைதான்… அவளே வியப்பாள்! அத்தருணத்தில்தான் மீண்டும் அவள் கைக் கடிகாரத்திற்கு பாலீஸ் போட நிர்ப்பந்தித்தாள். ‘பாலீஸ் போடுறதுக்கு ஒரு புது வாச்சியவே வாங்கி பிறந்தநாள் பரிசா குடுத்துட்டா என்ன!’ நினைவுகள் சிலிர்த்தன.
பிறந்த நாளின் முதல் நாள் இரவு ஒன்பதரை மணி இருக்கும். நானாக பஜாருக்குப் போனேன். கடைகள் துயில் காண ஸட்டர் கதவுகள் இழுபடும் நேரம்… திடுமென மழையும் தூர ஆரம்பித்தது.     
மூடுவதற்கு தயாராக இருந்த பிரபல கடையொன்று மீண்டும் அலங்கரிக்கும் மின் விளக்குகளைப் போட்டு என்னை வரவேற்றது. ஓரிரு வேலையாட்கள் மட்டுமே இருந்த அங்கு வெட்டுக்கிளிகளைப் போல் திரும்பும் திசையெங்கும் கண்ணாடித்திரைகளுக்குள்ளே விதம் விதமான கடிகாரங்கள்! ஆடவர், பெண்கள் குழந்தைகளுக்கானவை என வட்டம், சதுரம், செவ்வக வடிவங்களிலும் விலை வாரியாகவும், செயின் போட்டவை வார் போட்வை என்று பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருந்தது. ‘அடடா… இத வாங்கவா, இல்ல அத வாங்கவா’ ஒன்றையொன்று அழகினில் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. 
இறுதியாக தங்கமுலாம் பூசிய செயின் கொண்ட ஒரு லேடீஸ் வாட்ச்… ஆயிரத்து முந்நூறு ரூபாய். தோ்ந்தெடுத்தபின் பில் போடச் சொன்ன போது கடைக்காரர் ஒரு வார்த்தை கேட்டார்.

“பில் போட்டாச்சுன்னா மாத்த முடியாது… ஓ.கே தானே?”

ஏதோ பொறி தட்டுப்படுகிறது. மனதுக்குள் பற்பல கோணங்களில் அவள் வந்து போகிறாள்.

“ம். ஒரு நிமிசம்… வாட்ஸப்ல போட்டோ எடுத்தனுப்பி வீட்ல பேசிக்கிறேனே…”

கை பேசியில் கிளுக்கி விட்டு “இந்தா வந்துர்றேன்” என வெளியேறி பைக்கினருகில் நின்று படத்தை அனுப்பியும் பார்த்தேன், அழைத்தும் பார்த்தேன். அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மழையும் தூரியது. நகர் முழுதும் மின் தடை வேறு. நிமிடங்கள் ஆக ஆக கைக் கடிகாரத்திலிருந்து மனதும் மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்தது. இது என்னிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம்! அப்போதும் அப்படித்தான் ஆகியிருக்கிறது போலும்! ‘ச்சே. என்னா பய மனசுடா ஒனக்கு’

ஏதாவது வாங்க அவளையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கடை கடையாக ஏறி இங்கியபின் “இருக்கட்டும்ப்பா இன்னொரு நாள் வாங்கிக்குவோம்… இப்ப ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்டுவமா” என பல முறை மழுப்பியிருக்கிறேன்.

“பெறகென்ன கழுதைக்கி எங்கள இழுத்துட்டு அலைய வைக்கிறீங்க… வீட்லயே நாங்க பாட்டுக்கு இருந்துருப்போம்ல… நீங்க மட்டும் போயி தின்னுட்டு வந்துருக்க வேண்டியதுதான” என அவளும் வைதிருக்கிறாள். 

அந்த பிறந்த நாள் கேக்கோடும், புத்தாடை மற்றும் ஹோட்டல் விருந்தோடும் இனிதே அரங்கேறியது அவளுக்கு. “அம்மா ஹேப்பி பெர்த்டே… மே காட் ப்ளஸ் யூ…  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்” என நானும் பிள்ளைகளும் மாறி மாறி வாழ்த்துச் சொன்னோம். “தேங்க்யூ”

ஓரிரு நாள் கழித்து என் வாய் மொழி அறிந்து அவள் சொன்னாள். “அட என்னய்யா… அந்த வாட்ச்ச வாங்கியிருக்கலாமே… வாட்ஸப்ல நானும் பாத்தேன் நல்லாத்தான இருந்துச்சு. அப்டியே எனக்கு பிடிக்காம இருந்தாலும் நீங்க ஆசையா வாங்கி குடுக்குறத நல்லாயில்ல மாத்தனும்னு சொல்லுவனா…”  

அந்த கடிகாரம் இப்போது கேலரியில் தோன்றி மீண்டும் என்னை இழுக்கிறது… வருடம் முழுவதும் உழைத்துக் கொன்டுதானே கிடக்கிறோம். நவீனத்திற்கு ஏற்ப பிள்ளைகளின் படிப்புக்கும் வாழ்வின் இன்னபிற தேவைகளுக்கும் செலவுகள் அதிகரிப்பது சகஜம்தானே, அதற்காக இப்படியான சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிராகரித்து என்னத்தை அள்ளிக் கட்டிக்  கொண்டு போகாப் போகிறோம்? உழன்று கொண்டிருந்த மனது மாலையில் ஒரு முடிவுக்கு வந்தது. 

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபின் பீரோவினுள் வைத்திருந்த சொற்ப சேமிப்பில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு பஜாருக்கு விரைந்தேன். மீண்டும் அக்கடிகாரத்தை வாங்கி அவளுக்குப் பரிசளிக்க!

;