headlines

img

திருவள்ளுவரின் 1331ஆவது குறள் - ஜிஜி

நாட்டு நடப்பு

நகருக்கு நடுவில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நடைபயிற்சிக்கு நிறைய பேர் வந்திருந்தனர். நடைபயிற்சி முடித்துவிட்டு வந்தவர்களுக்கு நடராஜன் வாழைத்தண்டு சாறு கொடுத்து அமர வைத்தார். எல்லோரும் வந்து முடித்ததும் நடைபயில்வோர் நண்பர்கள் குழாமின் ஒருங்கிணைப்பாளர் பூபாலன் பேச ஆரம்பித்தார். “வாட்ஸ்ஆப் குழுமத்துல இன்றைய விவாத தலைப்பாக ‘உண்மையில் வள்ளுவர்  யார்?’ங்கற தலைப்பை கொடுத்திருந்தோம். அவங்க அவங்க தங்களோட ஆணித்தரமான  கருத்துக்களை எடுத்து வைக்கலாம். அதுக்கு  முன்னாடி தம்பி ஜெயவேலுவை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன். தம்பி அரசு ஓவியக் கல்லூரியில இரண்டாமாண்டு படிக்கிறார். நாம பேசறதை அவர் அப்படியே ஓவியமா வரைஞ்சு காட்டுறேங்கறார். வாய் பேச முடி யாதவர். அவர் தூரிகை எப்படி பேசுதுன்னு பாப்போம். தம்பீ... வர்ணம், தூரிகை எல்லாம் எடுத்துகிட்டியா? நிகழ்ச்சிக்கு போயிடலாமா?’’ என்று கேட்க ஜெயவேலு கட்டைவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு பென்சிலை கையில் எடுத்துக்கொண்டு ஓவியப்பலகையின் முன் நின்றான்.

‘‘முதல்ல...’’ என்று பூபாலன் ஆரம்பிக்க… ‘‘முதல்ல நான் தான் பேசுவேன்.’’ என்று இராமானுஜம் எழுந்து நின்றார்.  ‘‘இந்த தலைப்பே தப்புங்க. உண்மையில வள்ளுவர் ஒரு இந்துங்கறதை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லீங்கறேன்.’’ ‘‘அதனாலதான் காவிகட்டி புரிய வைக்கறீங்களா..?’’ என்றார் மதுசூதனன். ‘‘மது சார். உங்க முறை வரும்போது நீங்க பேசுங்க. நடுவுல பேச வேணாம்.’’ என்றார் ஒருங்கிணைப்பாளர் பூபாலன். மதுசூதனனை முறைத்துப்பார்த்தவாறே பேச்சைத் தொடர்ந்தார் இராமானுஜம். ‘‘வள்ளுவர் இந்து இல்லாட்டி கடவுள் வாழ்த்தை பாடியிருப்பாரோ? முதல் குறளைப் பாருங்கோ, ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.’ இதுல ஆதி பகவன்னு யாரைச் சொல்றாரு...? பகவான் கிருஷ்ணரைச் சொல்றாரு. அது ‘ஆதி பகவான்’னு இருக்க ணும். எடுத்து எழுதனவா காலை எடுத்துட்டா.  அதே கடவுள் வாழ்த்து அதிகாரத்துல ‘இறை வன்’னும், ‘அறவாழி அந்தணன்’ன்னும் வருது. அவர் இந்து மட்டும் இல்லே இந்து வுல அந்தணன். இதுக்கு மேல என்ன வெளக்கெண்ணை வேணும்?’’ என்று மதுசூத னனை கைகாட்டி அமர்ந்தார்.

‘‘உண்மையில திருவள்ளுவர் ‘இந்து’ன்னா அவர் ஏன் பகுத்தறிவைப் பத்தி  பாடணும்? ‘மழித்தலும் நீட்டலும் வேண்டாம்’ என்ற குறளில் ‘உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிடும் மனோதிடம் இருந்தால் மொட்டையடிச்சோ முடி வளர்த்தோ சாமியை தொழ வேண்டாம்’ங்கறார். அவர் சனாதன தர்மத்தை ஏத்துக்கலை. உழவு செய்யறதே பாவம், பிராமணர்கள் அதை செய்யக்கூடாது என்கிற வர்ணாசிரமக் கொள்கையினை அவர் ஏற்றுக்கொண்டிருந்தால் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்’னு பாடியிருக்க வாய்ப்பே இல்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ குறளோட அர்த்தம் என்னான்னு தெரியுமா இராமானுஜம் சார் உங்களுக்கு? பிறப்பால் எல்லா உயிர்களும் ஒன்னுதான், புரிஞ்சுகோங்க திருவள்ளுவரை, அவர் ஒரு பகுத்தறிவுவாதி’’ என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் மதுசூதனன்.

‘‘அவர் பகுத்தறிவு வாதி மட்டுமில்ல நாத்திகவாதியும் கூட, இராமானுஜம் சொல்றதைப்போல முதல்ல ஆத்திகவாதியா இருந்து நாத்திகவாதியா மாறினவர்ங்கறதுக்கு அவருடைய குறள்களே ஆதாரம். 380ஆவது குறளில் விதி வலியதுங்கற அர்த்தத்துல ‘ஊழிற் பெருவலி யாவுள’ என பாடறவர். 620ஆவது குறளில் விதியை மதியால் வெல்லாம்ங்கற அர்த்தத்துல ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ங்கற குறளை பாடறார்.’’ என்றார் தமிழரசு. அடுத்ததாக அனந்து எழுந்தான், ‘‘புரோ, நாம எந்தக்காலத்துல இருக்கோம். விண்வெளிக்கு மங்கள்யான் சந்திரயான், விக்ரம்லேண்டர்னு ராக்கெட் அனுப்பிகிட்டிருக்கோம். ஆனா திருவள்ளுவருக்கு காவிவேட்டி கட்டிட்டு சண்டைபோட்டுகிட்டிருக்கோம். ஆதிகாலத்துல அவருக்கு துண்டை கோவணமா கட்டினாங்க. அதுக்கப்புறம் வேணுகோபால் சர்மா வேட்டி கட்டினாரு. இந்த டிஜிட்டல் யுகத்துல காவிவேட்டியா கட்டுவாங்க? ஜீன்ஸ் போட்டு அழகு பாக்கணுங்க. காவியை உருவிட்டு ஜீன்ஸை மாட்டுவோம் புரோ. அப்பதான் யூத் கிட்டே வள்ளுவரு வைரலா ஆவார்.’’ என்றான். அவன் சொன்னதைக்கேட்டு பெருசுகள் தலையில் அடித்துக்கொண்டனர்.

‘‘நீங்க எல்லாரும் அவரு பேரையே மறந்துட்டு பேசறீங்க. அவரு பேரு என்ன? வள்ளுவரு. அதை புரிஞ்சுக்கணும்’’ என்று ஆரம்பித்தார் சபாபதி, ‘‘அவரை அந்தணர், நாயுடு, நாயக்கருன்னு யாரும் அரைவேக்காட்டு தனமா உரிமை கொண்டாட நினைக்காதீங்க. அவரு எங்க ஆளு. அதனாலதான் அறிவோட 1330 குறளை எழுதியிருக்காரு. உண்மையில வள்ளுவரு வள்ளுவருதான்’’ என்றார். கலீல் பாய் எழுந்தார், ‘‘வள்ளுவரை சாதிங்கிற பொடி டப்பாக்குள்ள வச்சு அடக்கப்பாக்காதீங்க. அவர் ஒரு இஸ்லாமியப் பெருங்கடல். இறைவன்னு அவர் சொல்றது அல்லாவை. கிருஷ்ணரை இல்லை. இறைவனிடம் கையேந்துங்கள் பாட்டுல நாகூர் அனிபா இறைவன்னு பாடறது யாரை? அதெல்லாம் விடுங்க, கிருஷ்ணர் என்ன திருவள்ளுவரைப் போல தாடியா வச்சிருக்காரு? திருவள்ளுவரு முஸ்லீம்ங்க. அதனாலதான் தாடி வச்சிருக்கார். திருக்குறளை சேர்ச் போட்டு பாருங்க. ‘தொழு’ங்கற வார்த்தையை பதினெட்டு குறள்ல பயன்படுத்தியிருக்கறது தெரியும். முஸ்லிம்க்கு முக்கியமானது தொழுகைங்க. அவர் முஸ்லிம் இல்லாட்டி அந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியிருப்பாரா? நியாயப்படி பார்த்தா திருவள்ளுவரு தலையில கொண்டை வச்சிருக்கக் கூடாதுங்க. குல்லாதான் வச்சிருக்கணும். நாங்கதான் அதை பெருசுபடுத்தாம விட்டுட்டோம்.’’ என்றார்.

அடுத்ததாக ஜோசப் எழுந்தார், ‘‘உங்களுக்கெல்லாம் தெரியாத ஒரு உண்மையை சொல்றேன். 2000 வருஷத்துக்கு முன்னாடி இயேசுவும் வள்ளுவரும் நண்பர்களா இருந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. ரெண்டுபேருமே நல்ல ரைட்டர்ஸ். திருவள்ளுவரு திருக்குறளை எழுதிக்கிட்டிருந்தப்ப. இயேசு புதிய ஏற்பாட்டை எழுதிகிட்டிருந்தாரு.  திருக்குறளை படிச்சுட்டு புதிய ஏற்பாட்டை படிச்சுப்பாருங்க. ரெண்டுலயும் கருத்து ஒண்ணாத்தான் இருக்கும். அவருடைய உண்மையான பேரு வல்லவன். அவரு வாட்ச்சக்கி என்ற கிறிஸ்தவப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு கிறிஸ்தவத்துக்கு மாறிட்டார். இதெல்லாத்தையும் மறைச்சுட்டு அவரை வள்ளுவர்னும் அவர் மனைவியை வாசுகின்னும் பேர் மாத்திட்டாங்க. உண்மையில வள்ளுவர் கழுத்துல தொங்க வேண்டியது சிலுவைதாங்க.’’ என்றார். கடைசியாக ஒருங்கிணைப்பாளர் பூபாலன் நிறைவுரை ஆற்றினார்.  ‘‘நீங்கல்லாம் பேசுனதைக்கேட்டு எனக்கு தலைசுத்தி போச்சு. நல்லவேளை திருவள்ளுவரு திருக்குறளை தமிழ்ல எழுதலேன்னு யாரும் சொல்லலை.’’ என்றார். எல்லோரும் கைதட்டினார்கள். ‘‘சரி வாங்க, தம்பி ஜெயவேலு என்ன வரைஞ்சிருக்காருன்னு பாப்போம்.’’ என்று சொல்லிவிட்டு அவன் ஓவியம் வரைந்து கொண்டிருந்த இடத்துக்கு சென்றனர். அங்கே அவன் வரைந்து வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்து ‘‘அருமை அருமை’’ என்றனர்.

‘‘தம்பீ, நாங்க சொன்ன கருத்தையெல்லாம் தத்ரூபமா உங்க ஓவியத்துல கொண்டாந்துட்டீங்க. இந்த படத்துக்கு ஒரு தலைப்பு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.’’ என்றார் பூபாலன். அவர்களை உற்றுப்பார்த்த ஜெயவேலு ஒரு கணம் யோசித்துவிட்டு தலைப்பை எழுதாமல் ஓவியத்தின் கீழே எழுதினான், 1331. சொன்னதை பின்பற்ற விட்டுட்டே விட்டுட்டு            என்னைய குண்டெடுத்து சுட்டுட்டே. அதைப்படித்துவிட்டு ‘‘தம்பி தலைப்புக்கு பதிலா புதுக்குறளை எழுதி அசத்தியிருக்காரு, திருவள்ளுவரு எழுதுனமாதிரியே இருக்கு.... அருமை அருமை.’’ என்று அதற்கும் அங்கிருந்தவர்கள் கைதட்டினார்கள் வழக்கம்போல, அவன் எழுதின குறளின் அர்த்தத்தை உள்வாங்காமலேயே!

;