புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அந்தப் பொறுப்பிலிருந்து மத்திய அரசினால் நீக்கப்பட்டுள்ளார். அவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று முதல்வர் நாராயணசாமி உள்பட தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், அவருடைய அடாவடி நடவடிக்கைகள் அனைத்திற்கும் மத்திய பாஜக கூட்டணி அரசு உறுதுணையாக இருந்தது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆட்சிக்கு தொல்லைக் கொடுப்பதையே ஆளுநர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் புதுவை துணை நிலை ஆளுநராக செயல்பட்டு வந்த கிரண்பேடி அனைத்து விதிமுறைகளையும் மீறி போட்டி அரசாங்கமே நடத்திவந்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை நிலைகுலையச் செய்யுமளவுக்கு அவருடைய செயல்பாடு இருந்தது. இப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி முடிவடைந்துவிட்ட நிலையிலேயே அவர் ‘நீக்கப்பட்டு’ தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்ற உடனேயே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை அணி மாற வைக்கும் வேலையை கிரண்பேடி கனகச்சிதமாக முடித்துவிட்ட நிலையில், அடுத்தக் கட்ட வேலைக்காகவே தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
விதிமுறைகளுக்கு மாறாக பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக முந்தைய துணை நிலைஆளுநர் கிரண் பேடி நியமித்தார். ஒரு உறுப்பினர்கூட இல்லாத கட்சியை கொல்லைப்புற வழியாகசட்டமன்றத்திற்குள் புகுத்தினார்.இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதன் பின்னணியில் ஆளுநரும், பாஜகவினரும் இருந்தனர். பதவி விலகியவர்கள் மோடி புகழ்பாடினர். இவர்களது விலகலைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணி அரசின் பெரும்பான்மை குறைந்துவிடவில்லை என முதல்வர் கூறி வந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் உத்தரவு வெளியாகியுள்ளது.
பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில் குதிரை பேரத்தை தீவிரப்படுத்தி ஆள்பிடி அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிப்பது அல்லது கலைப்பது என்பதையே தொடர்ந்து செய்து வருகிறது. அத்தகைய வேலையை புதுவையிலும் நடத்த துணிந்துவிட்டனர். மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள கிரண்பேடி பொறுப்பிலிருந்தால் தேர்தலில் தங்களது எண்ணம் நிறைவேறாது என்று நினைத்தபாஜக, அவரை நீக்கிவிட்டு தமிழிசை சவுந்தரராஜனை நியமித்துள்ளது. ஆட்சியை கவிழ்ப்பதற்
காக தீவிர குதிரைபேரத்தில் பாஜக இறங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உண்டு. தேர்தல்காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருப்பதை பாஜக விரும்பவில்லை. அதற்காகவே சித்து வேலைகளை துவங்கியுள்ளது. ஆனால் கிரண்பேடியின் பாதையில் தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தால் ஜனநாயகத்திற்கு மிகப் பெரியஅச்சுறுத்தலாக அது அமையும்.