திங்கள், செப்டம்பர் 27, 2021

headlines

img

உண்மை தெரிஞ்சாகணும்....

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை, செயல்படுபவர்களை தேடித் தேடி பழிவாங்குவதே நடக்கிறது. அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை அறிந்து கொள்ள ஒற்று வேலை பார்க்கிறது. அவர்களது மதவெறி தத்துவார்த்த, இனவெறிக் கூட்டாளி ஆட்சியாளர்களிடமிருந்து இஸ்ரேல்என்எஸ்ஓ நிறுவனத்தின் உளவு மென்பொருளானபெகாசஸ்-ஐ பயன்படுத்தி, 40 பத்திரிகையாளர்கள்எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்பட 300 பேரின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, தகவல் திருடப்பட்டதாக பிரச்சனை எழுந்தது. ஆயினும் இது தொடர்பாக மோடி அரசு நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் உண்மை பேசுவதைத் தவிர்க்கிறது என்பதை விட சொல்ல மறுக்கிறது என்பதே உண்மை.

உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டுமென மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஜான்பிரிட்டாஸ் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர். அதற்கு ஒன்றிய அரசு வெறும் 2 பக்கம் கொண்ட பதில் மனுவையே தாக்கல் செய்தது. அதனால் அதிருப்தியடைந்த உச்சநீதிமன்றம் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆயினும் திங்களன்று நடந்த விசாரணையின்போது, விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அரசு விரும்பவில்லை என்று கூறியதும் நீதிமன்றம் அதிர்ச்சியடைந்தது.

அத்துடன், ஒட்டுக் கேட்பு மென்பொருளை பயன்படுத்தவில்லை என ஒன்றிய அரசு கூறினால் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தீவிரமாகச் செயல்படத் துவங்கும். அந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினால் வேறு மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொலிஜிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறியிருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலுள்ளது.அதுமட்டுமின்றி பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றிய அரசிடம் எதுவுமில்லை என்று கூறிய அவர், துறைசார் நிபுணர் குழு வழங்கும் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிருப்தியுற்ற நீதிபதிகள் அமர்வு, கடந்த முறை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக உறுதியளித்துவிட்டு, தற்போது முடியாது எனக்கூறுவதை ஏற்க முடியாது என்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கில்லை என்றும் ஆனால் இந்திய குடிமக்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் நீதிமன்றத்துக்கு தெரிய வேண்டும் என்றும் கூறியுள்ளது மிகவும் நியாயமானதே.

அத்துடன், நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிவிட்டது என்று ஒன்றிய அரசை இடித்துரைத்துள்ளது. மூன்று நாட்களுக்குள் இடைக்காலத் தீர்ப்பை  தன்னிச்சையாகவே நீதிமன்றம் வழங்கும். அதற்குள் பத்திரம் தாக்கல் செய்வதானால் தகவல் தெரிவியுங்கள் என்று கூறியிருக்கிறது. எனவே ஒன்றிய அரசு இனிமேலாவது உண்மையை நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு ஒத்துக்கொள்வதுமே நியாயமாகும்.

;