திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

இலங்கை... இனியேனும்... 

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்ற அயல்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய அயல்துறை அமைச்சர் இலங்கை சென்றுள்ளார் என்றவகையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, அயல்துறை அமைச்சர் குணவர்த்தன ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் பிரதான தமிழர் கட்சிகள் மற்றும் தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தநிலையில் பல்வேறு வாக்குறுதிகள் அங்குள்ள தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அதிலும் குறிப்பாக ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரமிக்க பதவிகளை கைப்பற்றிய பிறகுதமிழ் மக்களின் நியாயமான பிரச்சனைகளைக் கூட தீர்ப்பதற்கு உரிய அக்கறை செலுத்தவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் உள்ளது. 

போரின் போது, குறிப்பாக இறுதிக்கட்ட மோதலின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. தவறிழைத்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவும் இல்லை. குறிப்பாக 13ஆவது சட்டத் திருத்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமைகளை வழங்குவது, நீதிக் கிடைக்கச் செய்வது,சமத்துவத்தை ஏற்படுத்துவது போன்ற விவகாரங்களில் அந்நாட்டு அரசுதான் முடிவெடுக்கவேண்டும் என்று கூறி இந்திய அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் நியாயமானகோரிக்கைகளை, நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க ராஜீயரீதியான அழுத்தத்தை தர வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதை முற்றாக நிறுத்த, பரஸ்பர நலன் அடிப்படையில் தீர்வு காண உரிய அழுத்தத்தை தரவேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. இந்திய அயல்துறை அமைச்சரின் பேச்சுவார்த்தையில் இது எந்தளவுக்கு விவாதிக்கப்பட்டது என தெரியவில்லை.

இதனிடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இலங்கைத் தமிழர் நலனுக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை ஜெய்சங்கரின் கருத்து பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் இலங்கைத் தமிழர்களின் நலனை காக்க மோடி அரசு உரிய முயற்சிகள் எடுத்ததாக கூற முடியாது.தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமே பிரதமர் மோடி இதுகுறித்து பேசுவார். மற்ற காலங்களில் அதை மறந்துவிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்துள்ள இழப்பு, வேதனை, வலி சொல்லும் தரமன்று. இனியாவது அவர்கள் வாழ்வில் நிம்மதிநிலவ வேண்டும். அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். அதை ஏற்படுத்துவதில் இந்திய அரசுக்கு முக்கியப் பங்குண்டு.

;