செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ராஜ்நாத்சிங்கின் பொறுப்பற்ற பேச்சு

மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமீபத்தில் பேசும்போது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதுதொடர்பாக அபாய மணியை அழுத்தி இருக்கிறார். இந்தியா “அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்” (NFU-No First Use) என்கிற கொள்கையை. கடந்த காலங்களில் உறுதியாகப் பின்பற்றிவந்த அதே சமயத்தில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது“அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது,” என்று பேசியிருக்கிறார்.

1998இல் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடிய வல்லரசு நாடாக இந்தியா மாறியதிலிருந்து, அது அணுஆயுதங்களை “முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்கிற கொள்கையைப் பின்பற்றி வருகிறது. 2003 ஜனவரி 4 அன்று நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுவால் இந்தியாவின் போர்த்தந்திரக் கொள்கையின் ஒரு பகுதியாக இவ்வாறு முடிவு மேற்கொள்ளப்பட்டது. எனவே இப்போது, 1998இல் அணுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட பொக்ரானில் இருந்துகொண்டு, அடல் பிகாரி வாஜ்பாயியின் முதலாம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்கையில்,  இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறக்கூடியதாகும்.

தங்கள் நாடு எதிரிகளால் அணுஆயுதங்களைக் கொண்டு தாக்கப்படாதவரையிலும் நாங்களும் ‘அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்கிற கொள்கையை, அணு ஆயுதங்களை வைத்திருக்கிற அனைத்து வல்லரசு நாடுகளும் பிரகடனம் செய்திருக்கின்றன. இவ்வாறு, “அணுஆயதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையின்கீழ் அணு ஆயுதங்களை எதிரி பயன்படுத்தினால் எதிர்த்தாக்குதல் நடவடிக்கையாகவே பயன்படுத்த வேண்டும். அணு ஆயுதங்கள் மனித குலத்திற்குப் பேரழிவினை ஏற்படுத்தக்கூடியவை என்பதை அங்கீகரிக்கும் விதத்தில்தான் இவ்வாறு “அணுஆயதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையை அனைத்து நாடுகளும் பிரகடனம் செய்துள்ளன.

“அணுஆயதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையை இந்தியா அறிவித்தபோது, இந்தியா, சீனாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. ஏனெனில் சீனாதான் இக்கொள்கையைப் பிரகடனம் செய்த முதல் நாடாகும். 1964இல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக அது மாறியசமயத்தில் இவ்வாறு அது பிரகடனம் செய்தது.  “அணுஆயதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையைப் பின்பற்றிட அமெரிக்காவும், அதன் நேட்டோ நாடுகளும் தொடர்ந்து மறுத்து வருகின்றன. மாறாக, “மோதல் உருவானால் முதலில் அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றிருக்கிறோம்” என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறது.  ருஷ்யாவும், “அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை தங்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வல்லமை அந்தஸ்தாகக் கருதுகின்றன. இது அவர்களின் தேசியப் பேரினவாத வெறியிலும் பிரதிபலிக்கிறது. இப்போது ராஜ்நாத் சிங் இவ்வாறு திருவாய் மலர்ந்திருப்பதற்கு முன்பாக, முன்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கரும் “அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” கொள்கையைக் கைவிடப்படுவது குறித்துப் பேசி இருந்தார்.  

இவ்வாறு ராஜ்நாத்சிங்கை பேச வைத்தது, பாகிஸ்தான் என்பது வெளிப்படை.  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புச்சட்ட மாற்றங்கள் மீது பாகிஸ்தான் கடும் கோபத்துடன் பேசிவருகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தானிடமிருந்து வரும் எதிர்ப்பினை எதிர்கொள்ள சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஈடுபடுவோம் என்பதன் ஒரு சமிக்ஞையாகத்தான் இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசி இருக்கிறார்.

பாகிஸ்தானுடன் அரசியல் பதற்றநிலைமை உச்சத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இவ்வாறு அணுஆயுத மோதல் குறித்து ராஜ்நாத் சிங் பேசியிருப்பது மிகவும் ஆபத்தானதும், பொறுப்பற்றதுமாகும்.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் மனிதகுலத்திற்கு எந்த அளவிற்குப் பேரழிவு ஏற்படும் என்பதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது இவ்வாறு போர்வெறிப் பேச்சுக்களை பாஜக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் 100 அணுஆயுத ஏவுகணைகளை வெடித்தால், ஆரம்பத்தில் 2 கோடியே 10 லட்சம் மக்கள் இறப்பார்கள். உலகில் பாதியளவிலான ஓசோன் அடுக்கு (ozone layer) அழிக்கப்பட்டுவிடும். ஆய்வு செய்யப்பட்டுள்ள பெரிய அணுகுண்டுகளில் ஒன்று, லாகூரிலோ அல்லது புதுதில்லியிலோ வீசப்படுமாயினும், உடனடி சாவுகள் என்பது சுமார் 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரையிலும் இருந்திடும். அதுமட்டுமல்ல பின்னர் தொடர்ந்து பல ஆண்டு காலத்திற்கு இதன் விளைவாக மக்கள் சாவது என்பது நீடித்திடும்.

“அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்” என்கிற கொள்கையை இரு நாடுகளுமே பயன்படுத்தினால்தான்,  அணு யுத்தம் வருவதற்கான அபாயம் குறைவாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் இருக்கக்கூடிய பூகோளப் பின்னணியில், ஓர் ஏவுகணை வீசப்படும்போது,  போரில் ஈடுபட்டுள்ள அதிகாரியால் ஏவப்பட்ட ஏவுகணை அணுஆயுத ஏவுகணையா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்குள்ளாகவே அதன் பாதிப்புகள் ஒருசில நிமிடங்களில் ஏற்பட்டுவிடும். இத்தகைய பின்னணியில் “அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையானது அணுயுத்தத்திற்கான வாய்ப்பினைக் குறைத்திட உதவும்.

சர்வதேச அளவில், உலக அளவிலான அணு ஆயுதப் போட்டியில், ‘அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்பது மிகவும் முக்கியத்துவம் உடையதாக மாறியிருக்கிறது. ஜனாதிபதி டிரம்ப், ருஷ்யாவுடன் 1987இல் கையெழுத்தான  இடைநிலை வரம்பு அணுசக்தி ஒப்பந்தத்தை விலக்கிக்கொண்டிருக்கிறார். அமெரிக்கா, நவீன அணு ஆயுதங்களுடன் தன்னுடைய அணு ஆயுதப் படைக் கொட்டடியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, ருஷ்யாவும் தன் அணுஆயுத ஏவுகணைகளின் திறனை  மேம்படுத்திடும் வேலையில் இறங்கி இருக்கிறது. இத்தகைய அணுஆயுதப் போட்டியில் இந்தியாவும் இணைந்திடக்கூடாது. மாறாக,    அணுஆயுதங்களைக் குறைத்திடு வதற்கும், சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மோடி அரசாங்கம், “அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம்” கொள்கையைக் கைவிடுவது தொடர்பாக எவ்விதமான யோசனை இருந்தாலும் அதனைக் கைவிட்டுவிட வேண்டும். “அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம்” என்கிற கொள்கையைக் கைவிடாததோடு, அதேபோன்று பாகிஸ்தான் அரசையும் அறிவிக்கச் செய்வதற்கும் இந்திய அரசு கோர வேண்டும். இவற்றின் மூலமாக தெற்காசியாவை ஓர் அணுஆயுத யுத்தம் இல்லாத மண்டலமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
(ஆகஸ்ட் 21, 2019)
(தமிழில்: ச.வீரமணி)
;