headlines

img

நல்வாழ்விற்கு இடதுசாரிகள்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம் பியாவில் முதன்முறையாக இடதுசாரித் தலைவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜூன் 19 அன்று நடைபெற்ற தேர்தலில் 50.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற குஸ்தவோ பெட்ரோ, கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார். அவருடன் துணை ஜனாதிபதியாக பிரான்சியா மார்குஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கொலம்பி யாவின் முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி அவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை மீறி இடதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவாக கொலம்பிய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

வறுமை ஒழிப்பு, ஓய்வூதியம் மற்றும் நிலச் சீர்திருத்தங்கள், கட்டணமில்லா பல்கலைக்கழகக் கல்வி ஆகியவை இடதுசாரிகளின் பரப்புரைக ளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தன. அர சுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடி வரும்  கொரில்லாக் குழுவினரோடு 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப் படுத்துவோம் என்று குஸ்தவோ பெட்ரோ அறிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகளில், ஊழல், பரவலாக நிலவும் வறுமை மற்றும் அதிகரித்து வரும் அரசியல் வன்முறை ஆகியவற்றைத் தடுக்க இடதுசாரிகளுக்கு வாக்க ளித்திருப்பதாக வாக்காளர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். மக்களின் பாரம்பரிய சல்சா நடனக் கொண்டாட்ட ஆரவாரத்தில் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் தோல்வி முனகல் சன்னமாகக் கேட்கவும் செய்கிறது. 

கொலம்பியாவில் இடதுசாரிகளின் வெற்றி என்பது தற்செயலானதல்ல. இங்கு பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழல்கின்றனர்.  அமெரிக்கக் கண்டத்தில் மக்களின் பிரச்சனைக ளுக்கு இடதுசாரிக் கொள்கைகள்தான் தீர்வைத்  தரும் என்று மக்கள் நம்புவதற்கு சாட்சிகளாக தொடர் வெற்றிகள் நிலவுகின்றன. ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக பிடல் காஸ்ட்ரோ தலைமையி லான சோசலிச கியூபா நடத்திய, தற்போதும் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சிகர அரசு நடத்தி வரும் போராட்டங்கள் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக எப்போதுமே இருந்து வரு கின்றன. அதைத் தொடர்ந்து வெனிசுலாவில் சாவேஸ், பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ், ஈக்கு வடாரில் ரபேல் கோரியா, நிகரகுவாவில் டேனியல் ஓர்டேகா, மெக்சிகோவில் அம்லோ என்று மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய இடதுசாரித் தலைவர்க ளின் பட்டியல் நீள்கிறது.

அடுத்த திட்டவட்டமான முடிவை அளிக்க பிரே சில் மக்கள் தயாராகி வருகிறார்கள். அக்டோபர் ஜனா திபதித் தேர்தலில் இடதுசாரித் தலைவர் லூலாவுக்கு வாய்ப்பு என்பது அங்கு தெளிவாகத் தெரிகிறது. 

இதேவேளையில், பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்களில் இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது. வர லாற்றில் முதன்முறையாக நார்டிக் நாடுகள் என்று  அழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ் லாந்து ஆகிய ஐந்து நாடுகளிலுமே இடதுசாரிகள் ஆட்சி புரிந்து வருகிறார்கள். தங்கள் நல்வாழ்வு இடதுசாரிகளால்தான் சாத்தியம் என்பதை மக்கள் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்துகிறார்கள்.

;