headlines

img

அஞ்ஞானத்தை பரப்புவதாக  அமைவதா கல்விமுறை?

ராஞ்சி ஐஐஎம் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் திங்களன்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நவீன கல்விமுறை என்பது நமது பெருமைக்குரிய பண்டைய கல்வி முறை, ஞானத்தை தடுப்பதாக இருக்கக் கூடாது என்றும், அதாவது அறிவியலை படிப்பதால் கடவுள் மீதான நம்பிக்கை இருக்கக்கூடாது என்று அர்த்தம் ஆகாது என்றும் கூறியிருக்கிறார்.

கல்வி என்பது அறிவியல்ரீதியாக அமைவதேஆகும். அது கற்பனையிலும் புனைவுகளிலும் உருவாவது அல்ல. அதிலும் விஞ்ஞானரீதியான கல்விஅறிவோடு அஞ்ஞானத்தோடு தொடர்புடைய கடவுள் உள்ளிட்ட புனைவுகளை புராணங்களை கல்வியாக கற்பிப்பது மூட நம்பிக்கையையே வளர்க்கும். அது மாணவர்களின் அறிவுத்திறனை பாதிப்பது மட்டும் அல்ல. நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் இடையூறாகவும் தடையாகவும் அமையும். \

தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் 2014ல் பதவியேற்ற காலத்திலிருந்தே அஞ்ஞானத்தை விஞ்ஞானமாக காட்டும் போக்குஅதிகாரப்பூர்வமாகவே நடத்தப்படுகிறது. அதற்கு முன்னோடியாக வாஜ்பாய் ஆட்சியில் மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி ஜோதிடம் உள்ளிட்ட படிப்புகளையெல்லாம் பல்கலைக்கழகங்களில் துவக்கி வைத்தார். அது தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூட ஜோதிடம் சார்ந்த படிப்பை ஆரம்பிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பாதையில் மோடி தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பல்வேறு துறைகளையும்,திறன்சார்ந்த புலங்களையும் அறிவியல்ரீதியிலிருந்து தள்ளிவைத்து புராணப் புனைவுகளையும் இதிகாச கட்டுக்கதைகளையும் நமது நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியாக அறிவியல் மாநாட்டிலேயே விஞ்ஞானிகள் மத்தியிலேயே பெருமிதத்தோடு பேசுகிற நிலையை ஏற்படுத்தியது. இதற்குகண்டனம் தெரிவித்து பல உலக விஞ்ஞானிகள் அறிவியல் மாநாட்டிலிருந்து வெளியேறியதையும் நம் நாடு கண்டது.
புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியில்ஈடுபட்டு வரும் நாம் நமது பாரம்பரியத்தையும் புரிந்து கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியத்தை புரிந்து கொள்வது அவசியம்தான்.

ஆனால்அவை அறிவியல்ரீதியானதா? கட்டுக் கதைகளின் பாற்பட்டதா? என்பதே முக்கியமானது. இந்திய நாட்டின் விஞ்ஞானிகள் பலரும் வானியல் மற்றும் பிற துறைகளிலும் நிகரற்ற அறிவுடையவர்களாக இருந்தனர். ஆனாலும் அதையெல்லாம் முன்னெடுத்துச் செல்வதை விடுத்து அறிவுக்கு புறம்பான புராணப் புனைவுகளையே விஞ்ஞான முன்னேற்றமாக மக்கள் முன் எடுத்துக்கூறுவது தற்போது அதிகரித்துவிட்டது. அவற்றைகைவிட்டு விட்டு அறிவியல்ரீதியான மனப்பாங்கையும் கல்வியையும் பரப்புவதே ஆட்சியில் இருப்போரின் கடமையாக வேண்டும். அதுவே இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி அமைவதாக இருக்கும். அரசியல்சட்டத்தின் படி உறுதியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் அதற்கு புறம்பாக நடந்து கொள்வது விரோதமானது.

;