நாகாலாந்து மாநிலத்தில் அப்பாவி சுரங்கத் தொழிலாளிகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச்சூடு நாட்டையே அதிர்ச்சி யடைய வைத்துள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் லட்சணத்திற்கு, பயங்கரவாதிகளை ஒடுக்குவதாகக் கூறி அப்பாவி பொதுமக்களை தொடர்ந்து வேட்டையாடி வருவதற்கும் மேலும் ஒரு சாட்சியமாக இந்த கொடிய நிகழ்வு அமைந்துள்ளது.
நாகாலாந்து மாநிலம் மான் மாவட்டத்தின் ஒடுங்கில் பகுதியில் பயங்கரவாதிகள் என்று சந்தேகித்து பணிக்குச் சென்று திரும்பிய சுரங்கத் தொழிலாளிகள், கிராம மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியபோது கூட்டத்தை கலைப்ப தாகக்கூறி பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆவேசமாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணுவ அளவில் உயர்மட்ட விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாளித்துள்ளார். அவருடைய விளக்கத்தில் அப்பாவி தொழிலாளிகள், பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதை விட நடந்துள்ள கொடூரத்தை நியாயப்படுத்துவதே பிரதானமாக உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ராணுவ ஆட்சி யையே ஒன்றிய அரசு மறைமுகமாக நடத்தி வரு கிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. திரிபுராவில் நடைபெறும் பாஜக ஆட்சியில் சிறு பான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகின்ற னர். இடது முன்னணி ஆட்சியில் அமைதி தவழும் மாநிலமாக விளங்கிய திரிபுரா பாஜக ஆட்சியில் அமளிக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் சட்டத்தில் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டபிறகு தீவிரவாதிகள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அங்கு அமைதி நிலவுவதாகவும் அமித்ஷா தனக்குத்தானே நற்சான்றிதழ் அளித்துக் கொண்டார். ஆனால் துப்பாக்கி முனையில் அந்த மாநில மக்கள் மிரட்டி ஒடுக்கப்படுகின்றனர் என்பது தான் உண்மை.
இந்நிலையில் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவித்து ஆயுதப் படை சிறப்புச் சட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரு கிறது. இதன் மூலம் ராணுவத்தினருக்கு வரம்பற்ற அதிகாரம் அளிக்கப்படுகிறது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு எத்தகைய நிலைமை நீடிக்கிறது என்பதையே இப்போது நிகழ்ந்துள்ள துப்பாக்கிச்சூடு காட்டுகிறது.
இப்போதாவது அந்தச் சட்டத்தை நீக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும். அப்பாவிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படுவதோடு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.