headlines

img

விமர்சனங்களை எதிர்கொள்ள துணிச்சலற்ற அரசு...

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகிறார்கள்.  குறிப்பாக பாஜக ஆளும்உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் தலைநகர் தில்லியிலும் நிலைமை  நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.  

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த செய்தியைவெளியிடக்கூடாது என்று மருத்துவமனையை பாஜக அரசு மிரட்டியது. அதையும் மீறி செய்தி வெளிவந்தவுடன் உயிரிழந்த அனைவரும் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக மாநில அரசு சப்பைக்கட்டு கட்டியது. தலைநகர் தில்லியில் கங்காராம் மருத்துவமனையில் 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்தனர்.  தில்லி, வாரணாசி, லக்னோ,அலகாபாத், போபால், இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் 24 மணிநேரமும் மயானங்களில் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.  எத்தனை சடலங்கள் எரியூட்டப்படுகின்றன என்ற தகவலை அரசு தெரிவிக்க மறுக்கிறது. 

இதனால் நாடு முழுவதும் உள்ள மிகமோசமான நிலையைச் சுட்டிக்காட்டி மத்திய அரசுக்குஎதிராக  முகநூலில்  கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “ தற்போதைய நெருக்கடிக்குச் சரியான பதில் மோடி ராஜினாமா செய்வதுதான்’’ என்பன உள்ளிட்ட பல கருத்துக்கள்  முகநூலில் பதிவிடப்பட்டு உலகம் முழுவதும் டிரண்ட் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த மோடி அரசுமுகநூல் நிறுவனத்திற்கு நிர்பந்தம்அளித்து அத்தகைய விமர்சனங்களையும் “மோடி ராஜினாமா செய்” என்ற ஹேஷ் டேக்கையும் நீக்க வைத்தது.இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்வினைகள் எழுந்ததால் வேறு வழியின்றி மீண்டும் அந்த கருத்துக்கள் முகநூலில் இடம் பெற்றன. 

கொரோனா முடிந்துவிட்டதாக மக்களை நம்ப வைத்த மோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வினியோகம் செய்தார்.  மருந்து  நிறுவனங்கள் பயனடைவதற்காகத்  தடுப்பூசியின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறினார். இதனால் தான்சித்தார்த் போன்ற சமூக அக்கறையுள்ள திரைக்கலைஞர்களும்  மோடி அரசின் மக்கள் விரோதகொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் துணிச்சலற்ற அரசு பாஜகவினரையும் இந்து அமைப்புகளையும் தூண்டிவிட்டு நடிகர் சித்தார்த்திற்கு எதிராகக்  கொலைமிரட்டல் விடுத்துள்ளது.  என்னதான்  மோடி அரசு மறைத்தாலும் கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை மறைக்க முடியவில்லை. இதனால்  நாட்டு மக்களிடமும் உலக நாடுகளிடமும்  மோடி அரசு அம்பலப்பட்டுள்ளது. உலக நாடுகளின் உதவி தற்போது கிடைக்கத்தொடங்கியுள்ளது. அவற்றைப் பயன்படுத்தியும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைக் கிடைக்கச்செய்வதன் மூலமும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். இதை அரசு செய்யமறுக்கும் போது விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.