headlines

img

அதிகார வெறியின் உச்சத்தில்...

சர்வாதிகார பாசிச எண்ணம் கொண்ட பாஜக இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என்ற பாணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக மத்திய பாஜக அரசு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி ஆட்சிகளை கலைப்பதற்கும் கவிழ்ப்பதற்கும் பல்வேறு தந்திரங்களையும் உத்திகளையும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. 

பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் ஓரிருவர்இருந்தால் கூட அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியாக மாறுவதற்கு பகிரங்க மற்றும் மறைமுக தில்லுமுல்லு, கட்சி மாறுதல் வேலைகளைச் செய்துஆட்சியை கைப்பற்றுகிறது. அதனை அந்தந்தமாநிலங்களின் ஆளுநர்களும் கச்சிதமான முறையில் அதனை அரங்கேற்றி வைக்கிறார்கள்.  ஒரே நாடு, ஒரே கட்சி முறையை கொண்டு வருவதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்வழங்கியிருக்கக்கூடிய ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதிப்பதற்கு தயங்குவதில்லை பாஜக. அதனுடைய அரசியல் எஜமானரான ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைப்படியே இத்தகைய வேலைகளில் கூச்சநாச்சமில்லாமல் ஈடுபடுகிறது.

மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பல்வேறு வகையிலான உத்திகளையும் பணத்தால் விலைக்கு வாங்கும் காரியங்களையும் அரசு எந்திரங்களான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் வழக்கு மற்றும் சோதனைகள் நடத்துவதன் மூலம் சாமபேததான தண்ட முறைகள் மூலம் அவற்றை நிறைவேற்றி வருகிறது. இப்படித்தான் கோவா, கர்நாடகம், மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ்உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை கவிழ்த்து தனது அல்லது கூட்டணி ஆட்சியாக மாற்றி உள்ளது. அந்த நடைமுறையையே புதுச்சேரியில் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்திருக்கிறது.

தில்லியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிரண்பேடி அங்கு படுதோல்வியுற்றதால் புதுச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால் அவரால் ஒரு முதல்வரைப் போலவே போட்டி அரசாங்கம் புதுச்சேரியில் நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளுக்கும் நலத்திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவது மட்டுமின்றி அவற்றை நிராகரிப்பதுடன் மேலும் இடையூறு செய்வது என்பதே அவரது அன்றாடச் செயல்பாடாகவும் மாறிவிட்டது. அதிகார வெறியின் உச்சத்தில் அமர்ந்து பாஜகவை சேர்ந்த மூவரை நியமன உறுப்பினராக நியமித்து தற்போதைய ஜனநாயகப் படுகொலைக்கு விதையும் விதைத்தார்.

அதன் விளைவாகவே காங்கிரஸ், திமுக உறுப்பினர்களை வளைத்துப் போட்டு, ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் வேலையைமுடித்துவிட்டது பாஜக. நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு எனக்கூறி சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்காத போதிலும் நாராயணசாமி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று சபாநாயகர் மூலம் அறிவிக்கச் செய்து ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறது. இந்த படுகொலைக்கு புதுச்சேரி மக்கள் வரவிருக்கும் தேர்தலில் தகுந்தபாடம் புகட்டுவார்கள்.

;